வைகுண்டம் எவ்வளவு தூரம்?
மன்னன் ஒருவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.
'வைகுண்டம் என்று சொல்கிறார்களே, அது பூமியிலிருந்து எவ்வளவு தூரம்?' என்பதே மன்னனின் சந்தேகம்.
அவையைக் கூட்டி சபையிலுள்ள பண்டிதர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான். அவர்கள் அவரவர் அறிவுக்கு எட்டிய வரை, வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதைக் குறிப்பிட்டனர். மன்னன் திருப்தியடையவில்லை.
அப்போது சபையிலிருந்த விதூஷகன் எழுந்து, ''மகாராஜா! வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் உள்ளது'' என்றான்.
''இதற்கு ஆதாரம் என்ன?' என்று மன்னன் கேட்டான்.
உடனே விதூஷகன், ''கஜேந்திரன் எனும் யானையை முதலை பிடித்தபோது, 'ஆதிமூலமே' என்று கூவி அழைத்தது அந்த யானை. அதன் குரல் கேட்டு க்ஷண நேரத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு அங்கே தோன்றி, கஜேந்திரனைக் காப்பாற்றினார். இது உண்மை எனில், வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது என்பதும் உண்மைதானே?'' என்று பதிலளித்தான்.
சபையோர் கரகோஷமிட்டு வாழ்த்தினர். மன்னன் மனமகிழ்ந்து விதூஷகனுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.