துன்பத்தின் வேர்கள்-ஓஷோ-பகுதி-6
உங்களது உடலும், உங்களது மனமும் அமைதியடைந்து விட்டால்,
அப்போது அவைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்திசைந்து செல்வதையும் நீங்கள்
காண்பீர்கள். அங்கே ஒரு பாலம் அமைந்து விடும். இப்போது உங்களது உடலும் மனமும்
வெவ்வேறு திசையில் ஓடாது. அவைகள் வெவ்வேறு குதிரைகளில் சவாரி செய்யாது. முதல்
முறையாக அவைகள் இரண்டும் ஒத்துப் போகும். மேலும், அவைகளின் இந்த ஒத்து போகும்
செயலானது நீங்கள் அதற்கடுத்த மூன்றாவது படிக்கு செல்வதற்கு மிகவும் உதவும்.
அதாவது, மூன்றாவதாக நீங்கள் உங்களது உணர்வுகள், மனக் கிளர்ச்சிகள், மனநிலைகள்
ஆகியவைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதற்கு ஏதுவாக இருக்கும். இந்த
உணர்வுகள்தான் உங்களுக்குள் உள்ள கண்களுக்குப் புலப்படாத, அதேசமயம் மிகவும்
கடினமானதொரு அடுக்கு. ஆனால் நீங்கள் உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன்
இருக்க முடியுமெனில், அதன்பின்னர் இது இன்னும் ஒரே ஒரு படிதான் அதிகம். உங்களது
மனநிலையை, உங்களது மனக்கிளர்ச்சியை, உங்களது உணர்வுகளை பிரதிபலிக்கும்போது,
நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.
இப்படி நீங்கள் இந்த மூன்று நிலைகளிலும் விழிப்புணர்வுடன் இருந்துவிட்டால்,
அவைகள் எல்லாம் ஒரே விஷயமாக ஒன்று சேர்ந்துவிடும். மேலும், இவைகள் மூன்றும் இப்படி
ஒன்றாக ஆகிவிட்டால், முற்றிலும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டால்,
உங்களால் இந்த மூன்றின் சங்கீதத்தையும் உணரமுடியும். – அவைகள் ஒரு இசைக்குழு போல ஆகிவிடும். –அதன்பின்னர்தான் நான்காவது விஷயம் நடக்கும். இந்த நான்காவது விஷயத்தை, நீங்கள்
ஏதாவது செய்வதால் கொண்டு வரமுடியாது. அது தானாகவே நிகழ்வது. அது பூரணத்தின்
வரமாகும். இந்த மூன்றையும் செய்தவர்களுக்கு கிடைக்கின்ற வெகுமதியாகும்.
மேலும் இப்படி நான்காவதாக எழுகின்ற அந்த விழிப்புணர்வுதான் உங்களை ஞானமடைந்த
ஒருவராக ஆக்கும். அப்போது ஒருவர் தனது விழிப்புணர்வு குறித்தே விழிப்புணர்வுடன்
இருப்பார். இதுதான் நான்காவது படி.
அது
ஒருவரை புத்தராக ஆக்கிவிடும். ஞானமடைந்தவராக ஆக்கிவிடும். மேலும் இப்படி ஒருவர்
விழிப்படைந்தால் மட்டுமே ஒருவர் பேரானந்தம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள
முடியும். உடல் அறிவது சுகம், மனம் அறிவது சந்தோஷம், உள்ளம் அறிவது மகிழ்ச்சி,
நான்காவதாக அறியப்படுவது பேரானந்தம். எனவே பேரானந்தம்தான் நமது லட்சியம்; விழிப்புணர்வுதான் அதற்கான பாதையாகும்.
மூலம் – விழிப்புணர்வு(தமிழ்) 1 – 2
முற்றும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.