Thursday 24 March 2016

தினம் தியானம்

1. சுவாசத்தை கவனித்தல்                                                                                                                                                    

எல்லா விதமான தியான முறைகளையும் உனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை. எளிதானதாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இது உலகம் முழுவதும் பரவட்டும். இதை சுவாசத்தை கவனித்தல் என நான் அழைக்கிறேன், இது மிகவும் எளிய முறை.

எப்போது – நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும், ரயிலிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில்..

காலம் – 2 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.

முதல் படி – உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி. உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல், வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா.

நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய். நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும். இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும். நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும், பின் வெளி வரும். வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும். இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.

பின் ஒரு சமயம் வரும். இந்த இடைவெளி மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள் இது 10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையை உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய். தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.

உன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யாருக்கும் நீ செய்வது என்னவென்று தெரியாது. அதை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட செய்யலாம்.

சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய். ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும். இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும். ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.

ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய். அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம். உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது, இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும். உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும், ஓய்வானதாகவும் புத்துணர்வு தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.

ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது. காலையில் நீ விழித்தெழுந்த உடன் உனது சுவாசத்தை கவனிப்பதை நீ தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பாய். அது உனக்கு வியப்பளிக்கும்.    

The  Last  Testament

2.    உடலின் அடிப்படை

இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவருக்கு கவனக்குவிப்பு உதவி செய்யும், மற்றவருக்கு தளர்வு உதவி செய்யும். இவர்களின் வழிமுறை வேறானவை. தளர்வு முறையில் நீ வெறுமனே ஓய்வாக எதன்மீதும் கவனம் செலுத்தாமல் -கவனக்குவிப்புக்கு நேர் எதிர் மாறான முறையில் – தளர்வு கொள்.

எப்போது – இரவு, தூங்கப் போவதற்கு முன்

காலம் – 20 நிமிடங்கள்

ஒளி – ஒளி குறைவாக அல்லது இருட்டு

உடை – இறுக்கி பிடிக்காததாக அப்போதுதான் எந்த தடையும் இருக்காது

முதல் படி – பதட்டத்தை வெளியேற்றுதல்

உனது நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொள்.  இதில் வசதி மிகவும் முக்கியம். தளர்வு பெற ஒருவர் ஓய்வாக, வசதியாக உணர்வது மிகவும் அவசியம். எந்த நிலையில் அமர பிரியப்படுகிறாயோ அந்த நிலையில் அமர்ந்து கொள். கண்களை மூடி உடலை தளர்வு கொள்ளச்செய். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உள்ளே உணர்ந்து பார். எங்கே பதட்டம் இருக்கிறதென்று பார். முழங்காலில் பதட்டத்தை உணர்ந்தால், அந்த இடத்தை தளர்வு செய். முழங்காலைத் தொட்டு, தயவுசெய்து தளர்வு கொள் என்று சொல்.

பல இடங்களில் நீ பதட்டத்தை உணர்வாய். அதை முதலில் விடுவிக்க வேண்டும். இல்லாவிடில் உடலால் தளர்வை உணர முடியாது. உடலால் தளர்வை உணர முடியா விட்டால் மனதால் தளர்வு கொள்ள முடியாது. ஏதாவது பதட்டம் தோள்பட்டையில் இருப்பதாக நீ உணர்ந்தால் இந்த இடத்தை தொட்டு, தளர்வு கொள் என்று சொல். எங்கெல்லாம் உடலில் பதட்டத்தை உணர்கிறாயோ அந்த இடத்தை கருணையோடும் அன்போடும் தொட்டு உணரு. உனது உடல் உனது சேவகன்.

இதற்கு உனக்கு 5 நிமிடங்கள் பிடிக்கும், பின் நீ ஓய்வாக, தளர்வாக உணர்வாய்

இரண்டாவது படி – இப்போது உனது உணர்வை உனது சுவாசத்திற்கு கொண்டு வா. சுவாசத்தை தளர்வாக செய்.

உடல் நமது வெளிப்பாகம், இருப்பு நமது உள்பகுதி – சுவாசம் இரண்டிற்க்கும் இடையே பாலம். அதனால்தான் சுவாசம் தளர்வு கொள்ள அனுமதிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆகவே உனது உடல் தளர்வு கொண்ட பின் கண்களை மூடி உனது சுவாசத்தைப் பார். அதையும் தளர்வாகச் செய். சுவாசத்துடன் ஒரு சிறிது தொடர்பு கொண்டு, தளர்வாக இரு, இயல்பாக போய்வா என்று சொல். நீ, தளர்வாக இரு என்று சொல்லும் கணத்தில் ஒரு சிறிய மெலிதான குலுக்கல் ஏற்படுவதை நீ உணரலாம். அதனால் உன்னுடைய சுவாச முறையிடம், 2 அல்லது 3 முறை தளர்வு கொள் என்று சொல். பின் மௌனமாக அமர்ந்திரு. உனது சுவாசமும் முழுமையாக தளர்வு கொண்ட பின் அங்கே மெலிதான குலுக்கல் ஒன்று ஏற்படும்.

மூன்றாவது படி – ஒன்று

இப்போது ஒவ்வொரு வெளியேறும் சுவாசத்துடனும் ஒன்று என்று சொல். சுவாசத்தை உள்ளிழுக்கும் போது எதையும் சொல்ல வேண்டியதில்லை. அடுத்த வெளியேறும் சுவாசத்தில் ஒன்று என்று கூறு. நீ ஒன்று என்று கூறும் தருணத்தில் இந்த பிரபஞ்சத்தை ஒரே முழுமையாக உணரு. அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒன்று என்று சொல்லுவதே போதுமானது.

ஒரு வாரத்திற்க்குள் உன்னால் உனது உடலுடன் தொடர்பு கொள்ள முடியும். உனது உடலுடன் உனக்கு தொடர்பு ஏற்பட்டு விட்டால் பின் எல்லாமும் எளிதாகி விடும். உடலை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை, சம்மதிக்க வைத்துவிட முடியும். ஒருவர் தனது உடலுடன் சண்டையிட வேண்டியதில்லை – அது அசிங்கமானது, வன்முறையானது, ஆக்ரோஷமானது, எந்த வகையான பிரிவினையும் மேலும் மேலும் அதிக பதட்டத்தைத் தான் கொண்டு வரும். ஆகவே நீ எந்த வகையான பிரிவினையிலும் இருக்க வேண்டிய தேவையில்லை – வசதியாக இருப்பதுதான் ஒரே விதிமுறை.

ஆகவே ஏழு நாட்கள்….. ஆரம்பத்தில் இது சிறிது மடத்தனமாகத் தோன்றலாம். நமது உடலுடன் பேச, பழக நமக்கு சொல்லித்தரப் படவில்லை. இதன் மூலம் அற்புதங்கள் நிகழலாம். நாம் அறியாமலேயே அவைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

நீ கோபம் கொள்ள விரும்பும் போது, அல்லது கோபம் கொள்ளும்போது உடல் ஒத்துழைக்க வில்லையென்றால் உன்னால் கோபப் பட முடியாது. ஒரு வகையான விதிமுறை பின்பற்றப்பட வேண்டும், சில அமிலங்கள் சுரக்கப்பட வேண்டும், உனது கண்கள் சிவக்க வேண்டும், முகம் சிவக்க வேண்டும், உனது கைகள் அடிப்பதற்கோ, கொல்வதற்கோ, குத்துவதற்கோ தயாராக வேண்டும். நீ கத்துவதற்கோ கீச்சிடுவதற்கோ தயாராக வேண்டும், உனது உடல் ஒத்துழைப்பு தர வில்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை. ஆகவே முதல் விஷயம் உடலுடன் ஒரு ஒத்துழைப்பு உருவாக்கிக் கொள்வதுதான்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.