Thursday 28 July 2016

"கந்தனும் காந்தமும்"

"கந்தனும் காந்தமும்"

“காந்தம் என்ற சொல்லே “கந்தன் என்று வழங்கப்படுகிறது.

பத்தி மார்க்கத்தில் கந்தனின் தந்தை – சிவன்.

ஞான மார்க்கத்தில் ‘சிவன்’ என்ற சொல்லே ‘சிவம்’ என்று அழைக்கபடுகிறது.

சிவன் என்றால் அதற்கு ரூபம் வந்துவிடும்.

ஆனால், சிவம் என்றால் அரூபத்தை குறிக்கும்.

சிவமே முதலும் முடிவுமாக இருப்பதால், அதுவே மூலக் காரணம் என்பதால், சிவத்தை தந்தை என்று வழங்கப்படுகிறது.

சிவம் தன்னகத்தே இருக்கும் சக்தியை தனக்குள்ளேயே அடக்கமாக வைத்திருக்கும் நிலை.

அடங்கி இருக்கும் சக்தி திணிவின் காரணத்தால் இயங்க ஆரம்பிக்கிறது.

அந்த இயக்கமே ‘சக்தி’ என்றும் பார்வதி என்றும் அழைக்கிறோம்.

சிவமும் சக்தியும் சேர்ந்து கூட்டிணைப்பு நடந்தேறும் போது அங்கே அடுத்த தன்மாற்ற நிகழ்வு ஏற்படுகிறது.

அந்த தன்மாற்றங்கள் ஆறு கூறுகளாக பரிணமிக்கிறது.

அந்த பரிணமித்த ஆறு கூறுகளும் சுழல்வதால் அங்கே அலை இயக்கம் ஏற்படுகிறது.

அந்த அலை இயக்கத்தையே நாம் ஆறுமுகக் கடவுள் முருகன் என்றும் அழைக்கிறோம்.

ஏனெனென்ன ஆறு முகங்கள் என்றால்.......

எந்தவொரு இயக்கம் நிகழும்போதும் அதிலிருந்து அலை உண்டாகும்.

அந்த அலையே திணிவின் வேறுபாட்டிற்கு ஏற்ப ஆறு விதமாக அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனமாகவும் பரிணமிக்கிறது.

இந்த காந்த தன்மாற்றத்தையே கந்தன் என்றும் அழைக்கிறோம்.

சிவத்தில் அடங்கி இருந்தது, சக்தியால் இயக்கமுற்றது, காந்தத்தால் பிளவு பட்டது, அந்த பிளவுகளே ஆறுமுகமாகியது.

இதனைத்தான் முருகனே தந்தைக்கு “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை எடுத்து சொன்னதாக கதைகள் மூலம் சொல்லப்படுகிறது.

அடங்கி இருந்தது எழுச்சி பெரும் நிலையே “ஓம்” என்னும் மந்திரம்.

ஆக, மூலக்கூறு காந்தமே அன்றி வேறில்லையே.

இதனையே மகரிஷியும்
“எந்த ஒன்றை அறிந்திடில் இறைவன் முதல் உயிர் வரை எல்லாவற்றையும் உணர்த்துமோ அதுவே காந்தமாம்” என்று தெளிவுபட விளக்கியுள்ளார்.

எனவே காந்தத் தத்துவத்தை உணர்ந்து தெளிந்து செயல்கலாற்றி இன்பம் பெறுவோம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.