Monday 18 July 2016

ஆடி

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம்.

ஒரு சமயம் பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது.
சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள், பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள்.

அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து. தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது.

அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள்.

ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச் சுவைடையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.

அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார்.

ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது.

நோய் கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டது; குளிர்ச்சியானது. அதன் காற்று உடல்நலத்தினைக் காக்கும். அதன் கசப்புத்தன்மை நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து வளமான உடல் ஆரோக்கியம் தரும். வேப்ப இலையின் கொழுந்தில் நம் உடலுக்குத் தேவையான சக்தி(புரோட்டின்) இருப் பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தினமும் காலை வேளையில் மூன்று, நான்கு வேப்பங் கொழுந்துகளை வெறும் வயிற்றில் மென்று சுவைத்தால் மருத்தவரிடம் செல்லும் நிலை ஏற்படாது என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

அதேசமயம், கசப்புச் சுவையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் ரத்தத்தின் வீரியம் குறைந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சித்த மருத்துவர் ஆலோசனைப்படி வேப்பங் கொழுந் தினைப் பயன்படுத்த வேண்டும்.
அம்மை நோய்க்கு அருமருந்தாக வேம்பு திகழ்கிறது. காய்ச்சலை குணப்படுத்தும் வேம்பு கஷாயம் இன்றும் மருத்துவ உலகில் புகழ்பெற்றுத் திகழ்கிறது.

அதனால்தான் கிராமப்புறங்களில் வீட்டின் வாசல் முன்பு வேப்ப மரங்களை வளர்க்கிறார்கள். நகர்ப்புறங்களிலும் வேப்ப மரங்கள் வளக்கப்பட்டால் தூய்மையான காற்று கிடைக்கும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.