Monday 11 July 2016

ஆசையிலிருந்து

"""ஆசையிலிருந்து விடுபட்டவராய்
உடமைகளிலிருந்து விடுபட்டவராய்
நெஞ்சின் இருண்ட இடங்களிலிருந்து  விடுபட்டவராய்
பற்றிலிருந்தும் பசியிலிருந்தும் விடுபட்டவராய்
விழிப்பின் எழுவகை நெறிகளைத் தொடர்கிறவராய்
தன் விடுதலையைப் பெரும் கொண்டாட்டமாகக் கொண்டவராய்
இவ்வுலகில் ஞானி  ஒளியாகிப் போகிறார்.
பரிசுத்தமான,  பிரகாசமான, சுதந்திரமான ஒளிப்பிழம்பாகிப் போகிறார். """
        பாதுகாப்பு, பத்திரம் என்ற எல்லா கவசங்களையும் கழற்றிப் போடத் தயார் என்றால், கணக்குப் போட்டு வாழும் மனதைக் கழித்துக் கட்டத் தயார்  என்றால், தந்திரத்தைக் கழித்துக் கட்டத் தயார்  என்றால், மனதைக் கழித்துக் கட்டத் தயார் என்றால், மனதின் இருட்டு மூலையெல்லாம் இல்லாமல் போய்விடும்.
          உள்ளத்தில் ஒளி நிரம்பிவிடும். ஆசை மறைந்துவிடும்.  ஆசை என்றாலே எதிர்நோக்குவது என்றுதானே பொருள்! உடைமைகள் உன்னைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்காமல் கழன்று விழுந்து விடும். உடைமைகள் என்றாலே கடந்து போய்விட்டது என்றுதானே பொருள்!
         ஆசைகள்  இல்லாமல் போய்விடும் போது, உடைமைகளை எல்லாம் கழித்துக் கட்டிவிடும் போது, வரப்போவதிலிருந்தும் வந்து போனதிலிருந்தும் விடுபட்டு விடுகிறாய்.  அப்படி எதிர்காலத்திலிருந்தும் கடந்த காலத்திலிருந்தும் விடுபட்டுப் போவதென்பது நிகழ்கணத்தில் இருப்பதாகிப் போகிறது. அப்போது சத்தியம்  உன்னை வந்தடைகிறது. சுதந்திரம்  வந்தடைகிறது. கடவுள்  வந்தடைகிறார். அதுவே, அது மட்டுமே, ஞானத்தையும் புத்த இயல்பையும் விழிப்பையும் கொண்டு  வருகிறது. 
          நிகழ்கணத்துக்குள் மேலும்  மேலும்  ஆழும்போது உனக்குள் எழுவகை ஒளிக் கற்றைகள் தோன்றுகின்றன. இதைத்தான்  இந்து யோகிகள் ஏழு சக்கரங்கள் என்பார்கள்.
           புத்த யோக சாத்திரம் இதை எழுவகை ஒளி அல்லது எழுவகை விளக்குகள் என்கின்றன.
          உடலிலிருந்து மேலும் மேலும்  விடுபட்டவனாகும்போது உடைமைகளில் இருந்து  விடுபட்டவனாகும்போது  ஆசைகளில் அக்கறை இல்லாமல்  போகும்போது உன்னுடைய  சக்தி மேலெழுகிறது. இதே சக்திதான் அடியிலிருக்கும் மையத்திலும் கிடக்கிறது.  இதைக் காமத்தின் மையம் என்கிறோம்.
         இந்தக் காமத்தின் மையத்தில்தான் அவ்வப்போது உனக்கு  ஒளி தெரிகிறது. இதைத்தான் ஸ்கலிதம்--சுரோனிதம் என்கிறாய். வெகு சிலருக்கே சம்போகத்தின்போது ஒரு கணத்தில் ஒளி மிகுந்து போகும்  உணர்வு சித்திக்கிறது. அப்போது சம்போகம் சமபோகமாகிப் போகிறது.  அந்தச் சமபோகம் உடலளவில் மட்டுமே  நின்று  போய் விடுவதில்லை.  அதில் ஆத்மாவோடு தொடர்புடையதும் இருக்கிறது.
         காமத்தின் மையங்களில் இருந்து ஒளி ரேகைகள் கிளம்பிப் பரவ ஏதுவான காலத்தையும் சூழலையும் கொண்டு வரத் தந்திரா முறைகள் முயல்கின்றன. இரு காதலர்கள் ஒருவருடைய உடலை மற்றொருவர் பயன்படுத்திக் கொள்வதை விடுத்து உடல்கள் மீது பக்தி வைக்கும்போது, காதலில் ஒருவருக்கொருவர் தேவனும் தேவியுமாகும் போது சம்போகம் பிரார்த்தனையாகிப் போகிறது.  தியானமாகிப் போகிறது. சம்போகத்துக்குப் போகும்போது பயபக்தியுடன் போகிறார்கள்.  ஆணுடையதும் பெண்ணுடையதுமான இரண்டு சக்தி பீடங்கள்  சந்திக்க மிகப் பிரகாசமான ஒளி உன் இருப்பிற்குள் பிரவகித்துப் பாய்கிறது.
            இதைப் போலவே மற்ற ஆறு மையங்களிலும் நடக்க முடியும். சற்றே உயர்ந்த மையங்கள்.  எவ்வளவு உயர்ந்த  மையத்தில்  இது நடக்கிறதோ அந்த  அளவுக்கு  ஒளி பிரகாசமாகிப் போகிறது. ஏழாவது ஸ்தானம் சஹஸ்ராரம். ஆயிரம் இதழ்த் தாமரை. அங்குத் தோன்றும் ஒளியின் பிரகாசம் கபீரை என்ன சொல்ல வைக்கிறது தெரியுமா? ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக உதயமாகும் போது இருக்கும் ஒளி என்கிறார்.

"""ஆசையிலிருந்து விடுபட்டவராய்
உடமைகளிலிருந்து விடுபட்டவராய்
நெஞ்சின் இருண்ட இடங்களிலிருந்து  விடுபட்டவராய்
பற்றிலிருந்தும் பசியிலிருந்தும் விடுபட்டவராய்
விழிப்பின் எழுவகை நெறிகளைத் தொடர்கிறவராய்
தன் விடுதலையைப் பெரும் கொண்டாட்டமாகக் கொண்டவராய்
இவ்வுலகில் ஞானி  ஒளியாகிப் போகிறார்.
பரிசுத்தமான,  பிரகாசமான, சுதந்திரமான ஒளிப்பிழம்பாகிப் போகிறார். """
            தனக்குத் தானே  ஒரு விளக்காகிப் போகிறார். அது மட்டுமல்ல. பிறருக்கும் ஒளி தருகிறவராக ஆகிப் போகிறார்.
          ஒரு புத்தராகி ஆகிவிடு. அது இல்லாமல்  வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இருப்பதில்லை. ஒரு புத்தனாகி விடு. அப்போதுதான்  உனக்கு  நிறைவேற்றம். ஒரு புத்தனாகி விடு.  அப்போதுதான்  நீ மலர்கிறாய். ஒரு புத்தனாகி விடு. அப்போது  கடவுள்  உனக்குள்  உறைகிறார்.  ஓஷோ  (தம்மபதம் பகுதி 3 ).

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.