Tuesday 12 July 2016

ஒழுக்கமுடைமை

ஒழுக்கமுடைமை

தினம் ஒரு திருக்குறள்
 
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

மூலத்தின் பொருளுரை:-
     தன்னையே தான் அறிவதற்காகவும், அனைவரும் இன்பமாக வாழ்வதற்காகவும் வரைமுறை செய்யப்பட்டதே ஒழுக்கம் எனும் மனிதத்தன்மை. இந்த ஒழுக்கத்தை உயிரைவிட சிறப்பானதாக காக்க வேண்டும்.

பொருளின் விரிவுரை:-
     ஒழுக்கம் வெளியே இருந்து கற்றுக் கொடுப்பது அல்ல, அது அனைத்தின் உள்ளேயும் இருப்பதாகும். இயற்கை ஒரு ஒழுக்கத்துடன் செயல்படுவதைக் காணலாம், அனைத்து உயிர்களும் ஒரு ஒழுக்கத்துடன் செயல்படுவதை நாம் அனைவரும் அறிவோம்.

இதில் மனித உடலில் உள்ள உயிர் மட்டும் சிந்திக்கக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கிறது. மனித உடலின் ஒழுக்கம் என்பது மற்ற உயிர்களின் உடலைப் போலவேதான் இருக்கிறது. அதாவது பசியெடுப்பது, செரித்துக் கொள்வது, காமம் தோன்றுவது, உறங்குவது, இறந்து விடுவது என்பதைப்போல எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த மனித உடலின் சிறப்பு மனமென்னும் உள்முகக் கருவியைக் கொண்டுள்ளதால் அனைத்தையும் பிரித்து பார்த்து சிந்திக்கும் தன்மையே இதன் சிறப்பாகும்.

மனித உடலானது தொடுதல், முகர்தல், சுவைத்தல், கேட்டல், பார்த்தல் எனும் ஐந்து அறிவைக் கொண்டு, மனம் எனும் ஆறாவது அறிவைக்கொண்டு அனைத்தையும் சிந்தித்துப் பார்த்து புரிந்து கொண்டு செயல்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

மனிதனுக்கு சிந்திக்கக்கூடிய ஆற்றலிருப்பதால் எதையும் ஆராய்ந்து அறியும் வல்லமை இருக்கின்றது, நான் ஏன் பிறந்தேன், நான் யார், பிறப்பதற்கு முன் எங்கிருந்தேன், இறந்த பிறகு எங்கு செல்வேன் என பல கேள்விகள் இயற்கையோடு இயற்கையாய் வாழும் சிந்திக்கக்கூடிய மனிதர்களுக்கு எழும்.

நான் நலமுடன் இருப்பதைப்போல பிறரும் இருக்க வேண்டும், எனக்கு எது இன்பமாக இருக்கிறதோ அதுதான் பிறருக்கும் இன்பமாக இருக்கும், அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ வந்துள்ளார்கள் என்று நாமும் வாழ்ந்து, பிறருக்கும் வாழ வழி கொடுப்பதே மனிதத்தன்மை ஆகும். இந்த மனிதத்தன்மை எனும் ஒழுக்கம் இருந்தால்தான் மனிதச்சமூகமாக, கூட்டமாக அனைவரும் ஒன்றாக வாழமுடியும். இந்த மனித ஒழுக்கமே கடவுளை, இறைவனை, அந்த உண்மையை உணர வழிக்கொடுக்கும் என்பதால், மனித ஒழுக்கத்தை உயிரின் ஒழுக்கத்தை விட அதாவது இயற்கையின் ஒழுக்கத்தை விட மேலானதாக கருதிக் காக்க வேண்டும் என்கிறார்.

மனித ஒழுக்கத்தை வரையறைச் செய்தல் கடினமாகும், இது காலத்தால், இடத்தால் சூழ்நிலைகளால் மாறக்கூடியதாகும். ஆனால் தனது மனதிற்கு தெரியும் இது ஒழுக்கமான செயலா அல்லது ஒழுக்கமற்ற செயலா என்று, ஆகவே நான் தெரியாமல் செய்துவிட்டேன் என்று கூறுவே முடியாது. நெஞ்சுக்கு நீதியாக நன்றியுணர்வுடன் வாழ்ந்தால் உண்மையை சந்திப்பது உறுதி. எனவேதான் "ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" என்றார் உணர்வு பெற்ற மனிதராகிய நமது தெய்வப்புலவர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.