Saturday, 16 July 2016

*10 செகண்ட் கதைகள்*

*10 செகண்ட் கதைகள்*

*அறியாமை*

''அம்மா, இதுகூடவா தெரியலை''  மிதுன், தன் அம்மாவுக்குப் புத்தம்புது ஆப் பற்றி விளக்கிக்கொண்டிருந்தபோது காலிங் பெல் சத்தம். வாசலில், கிராமத்தில் இருந்து அவனது அத்தையும் மாமாவும். கதவைத் திறந்தவன் கத்தினான், ''அம்மா... யாரோ வந்திருக்காங்க பாரு. எனக்குத் தெரியலை!''

- விக்னேஷ்வரி.

*நீதி*

நீதிபதி: குனிஞ்ச தலை நிமிராம நிக்கிறாங்க... இவங்களையா டிவோர்ஸ் பண்றீங்க?

அவன்: ஐயா... அவ இப்பக்கூட 'ஜட்ஜ்மென்ட் டே’னு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணியிருக்கா!

- நித்யா துரைசாமி.

*உபதேசம்*

''தண்ணியை வேஸ்ட் பண்ணாமப் பிடிங்கப்பா!'' எனக் கத்திக்கொண்டிருந்தான், வழி முழுக்க தண்ணீரைக் கொட்டிக்கொண்டே வந்த லாரி டிரைவர்!

- எஸ்.சீனிவாசன்.

*பரிதவிப்பு*

''கையில இன்னும் பட்டாசு மருந்து ஒட்டிட்டு இருக்கு பாரு... கையை நல்லாக் கழுவிட்டு வந்து சாப்பாட்டுல கை வை''   தன் பத்து வயது மகனைக் கடிந்தாள் அந்த விதவைத் தாய், இருவரும் வேலைபார்க்கும் பட்டாசு கம்பெனியின் மதிய உணவு இடைவேளையில்!

- வி.சகிதாமுருகன்

*வரம்*

''பக்தா... உன் பக்தியை மெச்சினேன்.

என்ன வரம் வேண்டும்?''

''கடவுளே... நீங்க எனக்கு வரம் தந்தீங்கன்னு சொன்னா, ஒரு பய நம்ப மாட்டான். அதனால

ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?''  

- வி.சகிதாமுருகன்

*பெற்ற உள்ளம்*

''என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுப் போகும் மகனுக்குத் தெரியவே கூடாது, அவனை நான் பக்கத்துத் தெருவில் உள்ள அநாதை ஆசிரமத்தில் இருந்துதான் தத்தெடுத்தேன் என!''

- எஸ்.மோகன்ராஜ்

*தலைமை*

தன் தலைமையில் வகுப்புத் தோழிகளுடன் அந்தச் சிறிய கிராமத்தை பக்காவாகச் சுத்தம்செய்து, 'க்ளீன் வில்லேஜ்’ புராஜெக்டை வெற்றிகரமாக முடித்து வீடு திரும்பினாள் தனிஷா. அம்மா கத்திக்கொண்டிருந்தாள், ''ஏழு கழுதை வயசு ஆகுது... இன்னும் உன் ரூமை சுத்தமாவெச்சுக்கத் தெரியலை. எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது!''

- கே.லக்ஷ்மணன்

*வருத்தம்*

தனக்கு மூன்றாவதும் பெண்ணாகப் பிறந்துவிட்டதற்காக மிகவும் வருத்தப்பட்ட முருகன், பின் தன் வாழ்நாள் முழுக்க வருத்தப்படவே இல்லை!

- செ.ஜெயதுரை

*சைலன்ஸ்*

'பின் டிராப் சைலன்ஸ்...’ வகுப்பில் ஆசிரியர் சொன்னதும், அனைத்து மாணவர்களும் தத்தமது மொபைலை சைலன்ட் ஆக்கினர்!

- சாய்ராம்

*சம்சாரி*

அறுத்த நெல் அனைத்தையும் பண்ணையாருக்கு வட்டியாகக் கட்டிவிட்டு, ரேஷன் கார்டைத் தேடி எடுத்தார் சம்சாரி ராமசாமி, இலவச அரிசி வாங்க!

- வி.சகிதாமுருகன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.