Wednesday 13 July 2016

ஸ்ரீ சக்கர மஹாமேரு

ஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மஹா சாம்ராஜ்யம். இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம் உண்டு. ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும். ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நுல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை.

சௌந்தர்யலஹரியின் இரண்டாவது பாடலில் ஆதிசங்கர பகவத்பாதாள் பேசும்போது ஸ்ரீ சக்தியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்மா பூலோஹம், புவர்லோஹம், ஸுவர்லோஹம், மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம், ஸத்யலோஹம் எனும் மேல் லோகங்கள் ஏழையும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மஹாதல, பாதாளம் எனும் கீழ்லோகங்கள் ஏழையும் ஸ்ருஷ்டித்தார் என்கிறார்.

ஸ்ரீ மகாதேவியின் பாததூளியால் ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மா படைத்த பதினான்கு உலகையும் தன் சிரசினால் தாங்கிகொண்டு இருக்கிறார்.

ஸ்ரீ ருத்திரனோ தேவியின் பாததூளியை கையிலெடுத்து “த்ரியம்பக” மந்திரத்தினால் பஸ்ம பொடியாக்கி தன் சிரசு முதல் பாதம் வரை பூசிக்கொண்டார்.

பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள்.

தேவி சிவனை அன்பால் நோக்கியபோது வல்லபை, ஸித்தி லட்சுமியுடன் ஸ்ரீ கணபதி தோன்றினார். ஸ்ரீ கணபதியும், ஸ்ரீ முருகனும் ஸ்ரீ சக்கரத்தில் அன்னையிடம் பால் அருந்தும் குழந்தைகள் .

ஸ்ரீ சக்ரம் அமைந்திருக்கும் அறையின் வலப்புறம் மகாகாளியும், இடதுபுறம் மகா பைரவரும் துவார சக்திகளாக அன்னைக்கு காவல் புரிகின்றனர்.

நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர். இவ்வாறாக அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மஹா சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் அற்புதமானது ஸ்ரீ சக்ரமஹாமேரு. ஸ்ரீ மஹாமேருவை தரிசனம் செய்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும்.

குலதெய்வம் தெரியாதவர்களுக்கு ஸ்ரீசக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம். ஸ்ரீ சக்ரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும்.

ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யைக்கு மேலான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை என்பது தனி சிறப்பு.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.