Tuesday 12 July 2016

சக்தி ரகசியம் !

கோவில்களில் கொட்டிக் கிடக்கும் - சக்தி ரகசியம் !
ஒரு பேச்சுக்கு , ஏதோ ஒரு அசம்பாவிதம் , ஒரு மூன்றாம் உலக யுத்தம் மாதிரி ஒன்று நடந்து - இந்த உலகில் பேரழிவு நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் இப்போது உபயோகிக்கும் - (satellite ) செயற்கைக்கோள்கள் எல்லாம் ஸ்தம்பித்துப் போய்விட்டது. செயல் இழந்து விட்டது.. உலகமே 90 % அழிந்துவிட்டது. பெட்ரோல் எல்லாம் காலி. மின் உற்பத்தியே இல்லை .
உலகமே கற்காலம் போல் ஆகி விட்டது .. மக்கள் கோடிக்கணக்கில் மடிந்து விட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் - மீதி இருக்கும் மக்கள் மன நிலை எப்படி இருக்கும்.. ?
டிவி, கம்ப்யூட்டர், கார், ரேடியோ, மொபைல் போன், - எல்லாமே வேலை செய்யாது.. வெறுமனே டப்பா.. தான். பொம்மை மாதிரி தான். ஒன்னும் பிரயோஜனப் படாது .... இல்லையா? ஆனால், அதே சமயத்தில் - அதை உபயோகித்தவர்கள் - வெளியிலும் தூக்கி எறிய மாட்டார்கள்.. அது பாட்டுக்கு - வீட்டிலே இருக்கும். பரண் லே இருக்கும். ஊர்லே மூலையிலே இருக்கும்.. அடுத்த அடுத்த சந்ததிக்கு - அதோட பலன் தெரிய வந்தா பரவா இல்லை.. இல்லை நாளடைவிலே .. அப்படியே மறைஞ்சு போயிடும்.. திரும்ப என்னைக்கவாது ஒரு நாள், எத்தனையோ வருஷம் கழிச்சு - திரும்ப satellites கண்டுபிடிச்சா, எண்ணைக் கிணறு கண்டு பிடிச்சா - இது எல்லாமே , திரும்ப உபயோகப்படும்.. ..
ஒத்துக்கிறீங்களா?
இதே மாதிரி தான்.. கோவில் ஒரு செல்போன் டவர் மாதிரி. கடவுள் ஒரு விண்ணில் இருக்கும் கோள் மாதிரி கற்பனை பண்ணிக்குவோம்.. அங்கே இருந்து சிக்னல் வாங்கி உங்களுக்கு தர்ற டவர் தான் ஆலயங்கள். ஜீவ சமாதிகள்.. அதன் மூலமா எத்தனை எத்தனையோ ஆத்மாக்கள் பலன் அடைஞ்சு இருக்கலாம்.. அந்த கதிர் activation பலமா இருக்கிற ஆலயங்கள் இன்னும் இருக்கு. நீங்க - ஒரு மொபைல் போன் மாதிரி. நீங்க அந்த டவர்க் கிட்டே எவ்வளவுக் கெவ்வளவு நெருக்கமா இருக்கிறீங்களோ, அந்த அளவு சிக்னல் கிளீயரா இருக்கும். அதனாலே பலனும் இருக்கும். இல்லை , சிக்னல் கிடைக்காது.. நாட் ரீச்சபிள் தான்.
அந்த ஆலயங்களுக்கு - சார்ஜ் பண்றதுக்கு தான் - கும்பாபிஷேகம் - அந்த கும்பம் இறைவனிடம் இருந்து - கதிர் அலைகளை , உள்ளே இருக்கிற கர்ப்ப கிரகத்துக்கு அனுப்புகிறது.. தீப ஆராதனை காட்டுறப்போ - அது இன்னும் தூண்டப்படும்.. அருள் அலைகள் உள்ளே இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும்.. கையை மேலே தூக்கி - அந்த நேரத்திலே வேண்டுவாங்க... இல்லையா? .. உயரமா இருக்கிற அந்த கைவிரல்கள் மூலம் உள்ளுக்குள் அந்த அலைகள் உங்களுக்குள் இறங்கும்..
ஏராளமான விஷயங்கள் , நம்மை அறியாமலே , நாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்..        …அதற்கு விளக்கம் தான் தெரிவது இல்லை.. ஆனால் தொடர்ந்து செய்கிறோம்.. அதன் முழு பலன்களும், கண்டிப்பாக , நாம் உணரும் பொது தான் தெரிய வரும்..
satellite இருக்கு (ஆண்டவன் ) . செல் போன் டவர் (ஆலயம் ) இருக்கு. செல் போனும் ( நாம் தான் ), சிம் கார்டும் (மனசு) இருக்கு. ஆனாலும், நமக்கு செல் போன் உபயோகம் தெரிஞ்சா தானே .. அதை உபயோகப் படுத்த முடியும்.. இல்லை , வெறுமனே பொம்மை தானே.
அதைப் போலே , பொம்மை மாதிரி தான் .. நாம் இருக்கிறோம்.. நம்மை உணரனும்.. இறையை உணரனும்.. பிறகு , நமக்கு எல்லாமே புரிய வரும்..
அதுவரை - சிக்னல் கிடைக்கவே வாய்ப்பு இல்லாத - பொம்மை தான் மனிதர்கள்..
இந்த கோட்பாடுகளை - தெளிவாக உணர்ந்து , நாம் நம்மை உணரும் வரை ... நமது சக்தி தெரியாதவர்கள் தான்.. மனம் என்னும் சாவி கொடுக்கும் , விசையால் சொடுக்கப்பட்டு நடமாடும் வெறும் பொம்மைகள்.
நாம் காலை எழுந்தது முதல், இரவு வரையில், எத்தனையோ இடங்களுக்கு போகிறோம். இவைகளோடு, கோவிலுக்கு போவது என்ற பழக்கத்தையும் வைத்துக் கொள்வது நல்லது. பகல் முழுவதும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் அலை மோதுகிறது.
அதனால், தினமும் ஒரு முறையாவது, கோவிலுக்குச் சென்று வர வேண்டும். பிறருக்காக உழைக்கிறோம்; சம்பாதித்து போடுகிறோம்; குடும்பத்தை கவனிக்கிறோம். இதெல்லாம் ஒரு கடமை. அதேபோல தன் நன்மைக்கும், ஆத்ம லாபத்துக்கும், பரலோக சுகத்துக்கும் சுலபமான வழி, பகவானை வழிபடுவது தான்.
“பகவான் தான் எங்கும் இருக்கிறாரே… கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? வீட்டிலிருந்து கொண்டே அவரை நினைத்தால் போதாதா?’ என்று வேதாந்தம் பேசுவதில், பிரயோஜனமில்லை.
பூமியின் அடியில் எங்கும் நீர் நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர் வேண்டுமானால், ஒரு கிணற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ தான் எடுக்க வேண்டியுள்ளது.
பசுவின் மடியில் பால் உள்ளது. பால் வேண்டுமானால், அதன் மடியிலிருந்து தான் பால் கறக்க முடியும்; அதன் கொம்பை திருகினால், பால் வருமா? அதுபோல எங்கும் கடவுள் இருக்கிறார் என்றாலும், நாம் நாலு பக்கமும் சுற்றி, சுற்றிப் பார்த்தாலும், கடவுளைக் கண்டோம் என்று சொல்ல முடியாது.
கோவிலுக்குப் போய், கடவுளை தரிசித்தால் தான், மன நிம்மதி கிடைக்கும். கோவிலுக்குள் உள்ள தெய்வம் வெறும் சிலையல்ல; அது மந்திர பூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, தெய்வ சாந்நித்யம் கொண்டது. கண்ணுக்கு தெரியாத கடவுளை, அந்த விக்ரகத்தில் ஆவாகனம் செய்து வைத்திருக்கின்றனர்.
அதற்கு காலா காலத்தில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தூப தீப நைவேத்தியம், கற்பூர ஆரத்தி என்று வரிசையாக உபசாரங்கள் உள்ளன. இது, ஒவ்வொரு நாளும் ஆறு காலம், நான்கு காலம், மூன்று காலம் என்று நியமனம் செய்து, அதன்படி நடந்து வருகிறது. அதனால், ஏதாவது ஒரு கால பூஜையையாவது பார்த்து, தரிசனம் செய்து வருவது நல்லது.
சிந்து சமவெளி நாகரிகம் - என்று , தொல் பொருள் துறையினர் - சுமார் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் இருந்த, ஒரு நாகரீகம் மிக்க மனிதர்கள் வாழ்ந்து இருக்கக் கூடும் என்று நிருபித்து இருக்கின்றனர்.. யோசித்துப் பாருங்கள்.. அப்படிப் பட்ட ஒரு உலகம், ஏதோ ஒரு காரணத்தால் - கிட்டத் தட்ட ஒட்டு மொத்தமாக அழிந்து இருக்கிறது..
அதன் பிறகு - கொஞ்சம் கொஞ்சமாக , ஒரு இரண்டாயிரம வருடமாக , ஒரு வரலாறு - ஓரளவுக்கு தெரிந்து இருக்கிறது.. எந்த காலத்தில் இருந்தோ, நமது முன்னோர்களில் ஒருவர் , இந்த ஆலயங்களின் பயன்பாடுகள் தெரிந்து , அவர் சந்ததிக்கு சொல்லி , அதில் ஒரு 0 .0000001 % கருத்து உண்மையாய் இருந்ததால் , இன்றும் ஆலயங்கள், வழிபாடுகள், தியானங்கள் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன..
எதுவும் கேலிப் பொருள் அல்ல. அதை உணர நமக்கு நேரம் ஆகலாம்.
பூமி அந்தரத்தில், ஏதோ ஒரு விசைக்கு கட்டுப் பட்டு - ஒரு குறிப்பிட்ட சாய்வில் - பந்து போல , தானும் சுற்றிக் கொண்டு - ஒரு குறிப்பிட்ட பாதையில் - பயணித்துக் கொண்டும் இருக்கிறது...
ஒரு மேஜை இருந்தால், அதை செய்த ஒரு தச்சர் இருந்து தானே ஆக வேண்டும் . பூமி, சூரியன் , பிற கோள்கள் என்று இருந்தால் - அதைப் படைத்தவர் , ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும்.. அந்த சக்தி , எந்த சக்திக்கு கட்டுப்பட்டு - இந்த பிரபஞ்சம் இயங்குகிறதோ, அந்த சக்தி - கோடி சமுத்திரம் போன்றது.. அந்த சக்திக் கடலில் இருந்து, தெறித்த துளிகள் போல இயங்குபவை தான் உலகமும், நாமும்... நாமும் நம்மை உணரும் போது , அந்த சமுத்திரத்தில் நமது ஐக்கியம் புரிய வரும்..
இப்படி ஏராளமான ரகசியங்களை, சக்தியை உள்ளடக்கி இருப்பவை தான் , சதுரகிரி, திருவண்ணாமலை, திருப்பதி, பழனி போன்ற மலைகளும், இதைப் போன்ற பிற ஆலயங்களும்...!! மன நிம்மதி உங்களுக்கு கிடைப்பது உறுதி. அவனின்றி ஓர் அணுவும் அசையாது.
அவன் என்பது அவர் அவரின் புனித பரிசுத்தமான ஆத்மாவே ஆகும்.
அது நினைக்காமல் இவ்வுலகில் எதுவும் நடக்காது.
அதுதான் அண்டத்தின் அசைவுகளுக்கும் இப்பிண்டத்தின் அசைவுகளுக்கும் காரணமாக அமைகிறது.
அதனுடன் இணைந்து விடுங்கள்.
இந்த கட்டுரையை படிக்கும் அன்பர்களில் யாரேனும் ஒருத்தருக்காவது , ஒரு சிறிய ஆன்மீக அதிர்வு ஏற்பட்டது என்றால் பகிருங்கள்!
மற்றவர்களையும் ஆன்மீக பயணத்தில் அழைத்துச் செல்வோம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.