Wednesday 13 July 2016

நான் யார் ?

நான் யார் ?
நீ யார் என்று கேட்டால் எல்லோரும் தன் பெயரை கூறுவார்கள் . பெயர் என்பது நான் என்றால் திருமணத்திற்கோ அல்லது விசேசத்திற்கோ நான் செல்லாமல் அவரவர் பெயரை ஒரு காகித்தில் எழுதி அனுப்பலாமே ? அப்படி என்றால் நான் பெயர் அல்ல
என் பெயரை வைத்து அழைத்தால் என் உடல் திரும்பிப் பார்க்கிறது. நான் உடலில் இருந்து வெளியே சென்ற பின் என் உடல் அசைவதில்லை, தொட்டால் உணர்வதில்லை, அழைத்தால் திரும்பி பார்ப்பதில்லை. அப்படி ஆனால் உடல் நான் அல்ல.
நான் மனித உடலில் இருப்பதால் நான் மனிதன் எனக் கூறுகிறேன். ஒரு மிருகம் தன்னை மிருகம் என கூறிக்கொள்ளும். மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்றால் மனித உடல் மேல்நோக்கி வளரும், விலங்கின் பக்கவாட்டில் வளரும். நான் மனிதனோ தேவனோ விலங்கோ எது என்றாலும் நான் உடல் அல்ல. பிறக்கும் முன்பு நான் எங்கே இருந்தேன். எனக்கோ, என் தாய் தந்தைக்கோ அல்லது யாருக்கும் அறியார்கள்.நாம் தாயின் வயிற்றின் மூலம் பிறந்துள்ளோம். ஒரு நாள் மறைந்து விடுவோம். நான் உடலை விட்டுப் பிரிந்த பிறகு என்னுடைய உடல் இயங்குவது இல்லை. என் பெயர் கொண்டு அழைத்தாலும் தெரிவதில்லை. அப்படியானால் என் உடலில் இருந்து என்னை நடத்தியது யார்?
நமது நடைமுறை வாழ்வில் நாம் இவ்வாறாக பார்த்திருப்போம். யாரோ ஒருவருக்கு உடல் நிலை மோசமாக இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் அவர் மரணம் அடைந்து விட்டார். அவரை விட்டிலிருந்து போகும் போது அழைத்துச் சென்றனர் என்று (உயிரள்ளவர்) உயர்தினையில் கூறுவார்கள். ஆனால் அவர் இறந்து அழைத்து வரும் போது அந்த உடலை எடுத்து வந்தனா என்று (உயிரற்றதாக) அற்றிணையில் கூறுவார்கள். இதில் இருந்து தெரியும் நான் உள்ளே இருக்கும் வரை மட்டுமே எல்லா செயலும் இந்த உடல் செய்யும். நான் இந்த உடலில் இல்லாத போது இது வெறும் பிணம் (சவம்) தான்
என் தாய் அல்லது தந்தை உயிருடன் இருக்கும் போது அவர்களை அடித்தாலோ எரித்தாலோ என்னை திட்டுவார்கள் சிறையில் அடைப்பார்கள். அதுவே அவர்கள் இறந்த உடன் அவரின் உடலை எரித்தால் என்னை நன்றாக ஈமக்கடமை செய்தான் என பாராட்டுவார்கள். இந்த விசயத்தை அரசாங்கமும் சரி என கூறும். ஆனால் உயிருடன் எரித்தால் சிறையில் அடைப்பார்கள்.
இவ்வாறாக நான் கூறுவேன் : நான் பிறந்த போது குழந்தை அதன் பிறகு நான் பாலகன், அதன் பிறகு நான் குமாரன், அதன் பிறகு நான் இளைஞன் அதன் பிறகு முதியவன் என கூறுவேன். உடல் மாறும் ஆனால் நான் என்பது மாறாது. மாறாது எதுவோ அது தான் நான்.
இதை வேறு விதமாக பார்போம். என் தாய் அல்லது தந்தைக்கு நான் மகன், என் அண்ணனுக்கு நான் தம்பி, என் தம்பிக்கு நான் அண்ணன், என் மனைவிக்கு நான் கணவன், அல்லது என் கணவனுக்கு நான் மனைவி, என் மகன் அல்லது மகளுக்கு நான் தந்தை அல்லது தாய், என் பேரன் அல்லது பேத்திக்கு நான் தாத்தா அல்லது பாட்டி இவ்வாறு உறவுக்கு ஒரு பெயர் கூறிக் கொண்டே போகலாம். இதில் கூறும் எந்த உறவும் நான் அல்ல. இந்த உறவுகள் எல்லாம் என்னுடைய உடலால் உண்டான உறவே தவிர வேறு ஒன்று இல்லை.
நான் என்பது வேறு என்னுடையது என்பது வேறு. உதாரணமாக எனக்கு ஒரு பூ மாலை கொடுத்தார்கள். அதை நான் என்னுடைய பூ மாலை என்று கூறுவேன். அந்த பூ மாலை எனக்கு கொடுத்தார்கள் தவிர நானும் பூ மாலையும் ஒன்று அல்ல.
இது போல தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, கணவன், மகன், மகள், பேரன், பேத்தி, தாத்தா, பாட்டி இவர்கள் அனைவரையும் என்னுடைய உறவு என்று கூறுவேன் நானே இந்த உறவு என கூற மாட்டேன். இதில் நான் என்பது வேறு உறவு என்பது வேறு.
இது போல என்னுடைய உடல் உறுப்புகளில்
என்னுடைய கண்,காது, மூக்கு, கை, கால் மற்றும் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் என்னுடையது என கூறுவேன் உடல் உட்பட என்னுடையது என கூறமாட்டேன். மேலே கூறப்பட்ட அனைத்தும் என்னுடையதே தவிர நான் அல்ல.
நான் தலை, நான் கண், நான் மூக்கு, நான் உடல் என்று யாரும் கூறுவதில்லை. என்னுடையது என்று தான் நான் கூறுவேன். என்னுடைய தலை வலிக்கிறது என்று கூறுவோம். நான் தலைவலி என்று யாரும் கூற மாட்டார்கள். என்னுடைய தலைக்கு வலி உள்ளது நான் என்னும் உணர்வுக்கு அல்ல. அடுத்தது நான் மனமும் அல்ல, புத்தியும் அல்ல. மனமும், புத்தியும் என்னுடைய என கூறுவோம். மனமும், புத்தியும் மூளையிலிருந்து வருகிறது என்றால் நான் உடலை விட்டு சென்ற பிறகு மூளை முழுமையாக உடலில் இருந்தாலும் என்னை அழைத்தாலோ அடித்தாலோ எரித்தாலோ தெரிவது இல்லை. எனவே மூளையும் நான் அல்ல. மூளைக்கு புத்தியோ அறிவோ இல்லை. நான் உடலில் இருப்பதால் மட்டுமே மூளைக்கு புத்தியுள்ளது போல தெரிகிறது.
உலக அறிவு வளர நாம் சிறு வயது முதல் பள்ளிக்கு கல்வி கற்க செல்கிறோம். ஆனால் பள்ளியிலோ கல்லூரியிலோ பல்கலைக் கழகத்திலோ நான் யார் என்று கூறுவதில்லை. சிறு வயது முதல் படித்தும் யாருக்கும் முழுமையாக அறிவு கிடைத்த்தாக தெரியவில்லை.
மேலே கூறியவைகள் எல்லாம் நான் யார் என்று கூறவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறவில்லை. நான் இந்த உடல், நான் பேசும் பொழி, எந்த குடும்பத்தில் பிறந்தோமோ அந்த குடும்பத்தினர். எந்த இனத்தில் பிறந்தோமோ அந்த இனத்தினர் எந்த நாட்டில் பிறந்தோமோ அந்த நாட்டினர் இதை தான் இந்த உலகத்தினர் அறிவுறுத்துகிறார்கள். உண்மையில் நான் ஆனந்தமடைய என்னுடைய உடல் உதவுகிறது. நான் உள்ளே இல்லாத போது ஆனந்தமோ துக்கமோ உடல் உணர்வதில்லை.
நான் யார் என்று உண்மையான கல்வி கற்க 4 வேதங்கள், 2 இதிஹாசங்கள், 108 உபநிஷத்துகள் , 18 புராணங்கள் போன்ற ஆன்மீக நூல்களில் மட்டும் இருக்கிறது. அதிலும் மிகமிக புனிதமான பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவத புராணம் போன்ற ஆன்மீக நூல்களில் தெளிவாக புரிந்து கொள்ளுமாறு விளக்கங்கள் உள்ளது. இதில் கூறியது போல நடந்தால் உயர்ந்த ஆனந்த்த்தை அனுபவிக்கலாம்.
நான் யார் என்று சிறு விளக்கம்.
நான் யார் என்றால் இப்பொழுது மனித உடலோடு கூடிய உயிர்.
நான் உயிர், எது நானோ அது(உயிர்) பற்றி யாரும் படிப்பதில்லை. பேசுவதில்லை. பல நாட்கள் பயிற்சி செய்தாலும் நான் உயிர் என்று புரிந்து கொள்வது சிறிது கடினம். ஆனால் தூய பக்தர்களுடன் தொடர்பு (சத்சங்கம்) ஏற்படுத்திக் கொள்ளும் போது மிக விரைவில் நான் உயிர் என உணரலாம்.
உயிர் இது எப்படிப்பட்டது? உயிர் என்பது ஜடவுலகை (அசித்தை) விட உயர்ந்தவன், நித்யமானவன்(சாஸ்வதன்),ஞானமே உருவானவன்(சைதன்யம்), அழிவற்றவன், மாறுதலுக்கு உட்படாதவன்,
உயிர் அறிவோடு கூடியது அழியாதது. ஆனால் உடலோ பிறந்து, வளர்ந்து, இனவிருத்தி செய்து, சிறிது காலம் இருந்து. தேய்ந்து, மறைந்து போகும் என்ற ஆறு வித நிலையை அடையும். உடல் அறிவற்றது, அழியக்கூடியது, மாறுவது.
உயிரை நீரால் நனைத்து அல்லது கரைத்து, நெருப்பால் எரித்து, காற்றால் உலர்த்தி, எந்த விதமான ஆயுதங்களாலும் வெட்டி அழிக்க முடியாது. உயிர் எப்படி செய்யப்பட்டது என பலர் கேட்பார்கள். உயிரை ஜடப்புலன்களால் உணர முடியாது. உயிர் அணுமாத்திரமாக இருப்பவன் என வேதம் கூறுகிறது. அதாவது உயிர் ஒரு தலை முடியின் நுனியில் (1 கீழ் 10000 ) பத்தாயிரத்தில் ஒரு பங்கு மட்டுமே ஆகும். உயிரின் இயல்பு உயிர்கள் அனைவரும் ஒரே வகையை சேர்ந்தவை மற்றும் சம்மானவர்கள். பிறரை சார்ந்து வாழ்பவர்கள். எல்லா உயிர்களுக்கும் ஞானி ஆவதே குறிக்கோள்
ஞானம் உள்ளவரையே ஞானி என்பார்கள், அறிவாளி(ஞானி)
நான் (உயிர்) அறிவுடையவனா அல்லது அடிமையா இதில் எது சிறந்த்து. ஞானம் மாறுபடும். ஒவ்வொரு உயிருக்கும் ஞானம் வேறுபடும். எனவே உயிர்கள் அனைத்தும் ஒன்றே

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.