வீட்டு பூஜை குறிப்புகள்-80
1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.
2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.
4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.
6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.
7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.
8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.
10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.
11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.
13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.
14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.
17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.
20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.
21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.
22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.
24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.
25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.
26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.
29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.
32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.
33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.
34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.
35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.
37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.
38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது. 39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.
40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.
41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.
42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.
43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.
46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.
47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.
48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.
49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.
53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.
56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.
57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.
59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.
60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.
61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.
64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.
65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.
66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.
67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.
68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.
70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.
71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.
72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.
79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.