Friday, 12 February 2016

அடையாளம்

அடையாளம்
************************

ஒருவன் கலை அழகுடன் அரண்மனையைவிடச் சிறப்பாக மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தான்.அதை அந்த நாட்டு மன்னர் விலைக்குக் கேட்டும் அவன் கொடுக்கவில்லை.ஒருநாள் அவன் வெளிய போய்விட்டுத் திரும்பும்போது வீடு பற்றி எரிந்து கொண்டிருந்தது.மன்னன் செய்த சதியோ என நினைத்து அவன் அழுது புலம்பினான்.அப்போது அவன் மகன் அங்கே ஓடி வந்தான்.

அவன் சொன்னான்,''அப்பா,கவலைப் படாதீர்கள்.இந்த வீட்டை நான் நேற்று மன்னருக்கு மூன்று பங்கு விலைக்கு விற்றுவிட்டேன்.வரும் பணத்தைக் கொண்டு இதை விட அழகான வீடு ஒன்று கட்டிக்கொள்ளலாம்.''தந்தையின் கண்ணீர் சட்டெனக் காணாமல் போயிற்று.அவன் சிரிக்கத் தொடங்கினான்.

அவன் எதிரே வீடு எரிந்து கொண்டிருந்தது.அவன் கண்களிலோ எதிர் காலக் கனவு!அப்போது அவன் இளைய மகன் ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,அண்ணன் சொன்னது உண்மைதான்.ஆனால் விற்றது பேச்சளவில்தான்.

பத்திரம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.பணமும் வாங்கவில்லை.''தந்தை மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டான்.
இதுதான் பற்று...அடையாளம்.ஒருவன் உயிருடன் இருக்கும்போது எல்லாவற்றையும் தன்னுடன் அடையாள படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

எல்லாவற்றையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பற்றில் விழுந்து விடக் கூடாது.உடைமை கொள்ள முயலக்கூடாது.
விலகி இருங்கள்!விழித்திருங்கள்!மௌனமாய்ப் பார்த்திருங்கள்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.