மின்னலென வந்து செல்லும் மன அழுத்தங்கள்
அன்றாட வாழ்க்கையில் நம்மைக் கடந்து செல்லும் சின்னச் சின்ன மன அழுத்தங்கள் பற்றி நாம் அவ்வளவாய்க் கண்டுகொள்வதில்லை.
ஒரு நாளில் பல முறை விநாடி நேரங்களில் வந்து மறையும் மன அழுத்தங்கள் ஏராளம்.
பெரும்பாலும் இத்தகைய மனஅழுத்தங்கள் வெளிப்படுத்த முடியாத கோபங்களால் ஏற்படுபவை.
ஏனெனில் இவை யாரென்றே தெரியாத மூன்றாம் மனிதர்களோடு ஏற்படும் கோபங்கள். மூன்றாம் மனிதர்களிடம் கோபத்தை எப்படி வெளிப்படுத்த இயலும்? எனவே இந்தக் கோபங்கள் சின்னச் சின்ன உணர்ச்சி முடிச்சுகளாக மாறி மனதில் பதிந்து அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
சில உதாரணங்கள்
உங்கள் இரு சக்கர வாகனத்தில் பயணத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஓரிடத்தில் போக்குவரத்து நெரிசல். நகருவதற்கு இடமில்லை. உங்கள் பின்னால் நிற்கும் பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கிறார். இப்போது மனதிற்குள் அவரை “காட்டுமிராண்டிப் பய” என திட்டித் தீர்க்கிறீர்கள். ஆனால் இந்தக் கோபத்தை பெரும்பாலும் வெளியில் காட்ட இயலாது.
மதிய உணவிற்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என படுக்கைக்குச் செல்கிறீர்கள். உங்கள் வீட்டருகில் உள்ள மின்கம்பத்தில் கட்டப்பட்ட ஒலிப்பெருக்கி காதைப் பிளக்கிறது. ஏதோ ஒரு கட்சி மீட்டிங் நடக்கவிருக்கிறதாம். உங்கள் உறக்கத்தை, அமைதியைக் கெடுத்த அந்தக் கட்சித் தொண்டர்களின் மீது ஆத்திரமாய் வருகிறது. ஆனால் இதை வெளியில் காட்ட இயலாதே. என்ன செய்வது?
பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்யும்போது அருகில் அமர்ந்திருக்கும் ஒரு குண்டான நபர் உங்கள் இருக்கையில் கால்பங்கையும் அவரே ஆக்கிரமித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். நீங்கள் ஒப்புக்கு அமர வேண்டிய சூழ்நிலை. பார்த்தால் ரௌடி போல் தெரிகிறது. ஏதாவது சொன்னால் சண்டைக்கு வருவாரோ என பயப்பட்டு, உங்களில் எழுந்த கோபத்தை அடக்கி வைக்கிறீர்கள்.
நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறீர்கள். ஓட்டல் அறையில் உங்களுக்கு அவ்வளவாய் அறிமுகமில்லாத நண்பரின் நண்பரோடு தங்குமாறு நேருகிறது. அவருடைய குறட்டைச் சப்தத்தால் உங்களால் இரவு முழுவதும் உறங்க முடியவில்லை. அவரை எழுப்பிச் சொல்லவும் முடியவில்லை. இப்போது ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பை யாரிடம் எப்படிக் கொட்டித் தீர்ப்பது? (பிற்பாடு உங்கள் நண்பரிடம் புலம்பித் தீர்ப்பீர்கள் என்பது வேறு விசயம்)
அவசரமாய் நீங்கள் நடந்துசெல்லும்போது அல்லது மாடிப் படியிறங்கும்போது, உங்களுக்கு வழி விடாமல் ஆடி அசைந்து செல்லும் இருவர் மீது ஏற்படும் சினத்தை என்ன செய்வது?
இவைகளுக்கான தீர்வு என்ன?
இவற்றை எப்படிக் கையாள்வது?
இவைகளால் நேரும் தீமை என்ன?
இன்னும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த இத்தகைய நிகழ்வுகள் எவை.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.