விட்டுக் கொடுத்தல்:-
சாக்ரடீஸுக்கு நீதிபதிகள் ஒரு வாய்ப்பு அளித்தார்கள். அவர் ஏதென்ஸை விட்டுச் சென்றுவிட்டால், ஏதென்ஸுக்கு வெளியில் வசித்தால் மரணதண்டனையிலிருந்து தப்பிக்கலாம். எவருமே, "இது ஒரு எளிய விட்டுக் கொடுத்தல், ஏதென்ஸின் எல்லைக்கு வெளியே நீங்கள் வசிக்கலாமே" என்றுதான் கூறுவார்கள். ஏனெனில் அந்த நாட்களில் நகர மாகாணங்கள் மட்டுமே இருந்தன. ஒவ்வொரு நகரமும் ஒரு மாநிலமாக இருந்தது. அந்த எல்லைக்கு வெளியே வாழ்ந்தால் நீங்கள் மாநிலத்திற்கு வெளியே வந்து விடுவீர்கள். அவர் அவ்வாறு நகரைச் சுற்றியுள்ள இடங்களில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் சாக்ரடீஸைப் போன்ற மனிதர்கள் பிடிவாதக்காரர்கள்.
"நான் தப்பிச் செல்வதைவிட மரணமடைவதை விரும்புகிறேன். எனினும், எனக்கு வயதாகி விட்டது. இன்னும் எத்தனை காலம் நான் வாழப் போகிறேன்? இன்றைய நாட்களின் மிக நாகரிகம் வாய்ந்த நகரம் என்னைச் சகித்துக் கொள்ளவில்லை என்றால் வேறு யார் என்னைச் சகித்துக் கொள்ளப் போகிறார்கள்? வேறு எங்கும் மரணமடைவதை விட ஏதென்ஸில் இறப்பது மேல். குறைந்தபட்சம் ஆதி நாகரிகம் வாய்ந்த மக்களால் நான் கொல்லப்படுகிறேன என்ற ஆறுதலாவது எனக்குக் கிடைக்கும்" என்றார் சாக்ரடீஸ்.
நீதிபதிகள் அவரை எப்படியாவது காப்பற்றப்பட வேண்டும் என்று முயன்றார்கள். ஏனெனில் அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. கூட்டம் அவர் கொல்லப்பட வேண்டும் என்று விரும்பியது. அவர் இளைஞர்களைக் கெடுத்துக் கொண்டிருந்தார்.
இப்போது, உலகத்திற்குப் புதிய சிந்தனைகளைக் கொண்டு வருகின்ற எவர்மேலும் இளைஞர்களைக் கெடுப்பதாகக் குற்றம் சாட்டலாம். ஏனெனில் அவரது கருத்துக்கள் நிச்சயமாகப் பழைய கருத்துக்களுக்கு எதிராக இருக்கும். பழைமைக்கு எதிராக அவர் போராடுவார். நீங்கள் அதைக் 'கெடுப்பது' என்று கூறலாம். அவர் நமது பாரம்பரியத்தை, மதத்தை, பண்பாட்டைக் கெடுக்கிறார்.
நீதிபதிகள் மற்றொரு பரிந்துரையை முன்வைத்தனர். "நீங்கள் தொடர்ந்து ஏதென்ஸில் இருக்கலாம். ஆனால் உண்மையைப் பற்றி பேசுவதை நிறுத்தி விடுங்கள் ".
அதற்கு சாக்ரடீஸ், "நீங்கள் என்னைச் செய்ய முடியாத காரியத்தைச் செய்யச் சொல்கிறீர்கள். நான் உண்மையைப் பற்றி, உண்மையைப் பற்றி மட்டுமே எனது இறுதி மூச்சுள்ளவரை பேசுவேன். என்னைப் பொய்கள் சொல்லச் சொல்கிறீர்களா? அல்லது என்னைப் பேசவே வேண்டாம் என்கிறீர்களா? அதுவும் கூட ஒரு பொய்தான். ஏனெனில் எனக்கு உண்மை தெரியும். அதை நான் பேசவில்லை. அந்தப் பொய் மனிதர்களின் மனதில் பரவிக் கொண்டு இருக்கிறது. முடியாது. நான் இங்கேதான் இருப்பேன், உண்மையைத்தான் பேசுவேன்.
"நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நீங்கள் என்னைக் கொன்று போடலாம். ஆனால் நான் விட்டுக் கொடுத்துச் சமரசமாகப் போக மாட்டேன் " என்றார்.
உங்களது தனித்தன்மையை, மெய்ம்மையைக் கண்டு பிடியுங்கள். விட்டுக் கொடுத்துப் போகாமலிருக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் நீங்கள் எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் தனித்தன்மையை இழக்கிறீர்கள். நீங்கள் ஒரு பெரிய யந்திரத்தின் ஒரு சிறு பாகமாக ஒரு கூட்டத்தின் பகுதியாக இருக்கிறீர்கள். உங்களது சொந்த அழகுடன் சொந்த உரிமையில் ஒரு தனி நபராக இருப்பதில்லை.
நான் விட்டுக் கொடுப்பதை முழுமையாக எதிர்க்கிறேன். விட்டுக் கொடுத்துச் சமரசம் செய்து கொண்டு வாழ்கின்ற ஒரு வாழ்க்கையை விட மரணம் மேலானது.
Saturday, 27 February 2016
விட்டுக் கொடுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.