Sunday, 21 February 2016

ஞானம்பெற்ற மனிதருக்கும் சித்தி பெற்ற மனிதருக்குமான வித்தியாசம்

Enlightened Man Vs
Spiritual Man.
ஞானம்பெற்ற மனிதருக்கும்
சித்தி பெற்ற மனிதருக்குமான வித்தியாசம்

சித்திபெற்ற மனிதர்.
இத்தகைய மனிதர் பலவற்றை அடைகிறார். காரணம் நேர்மறை மனம் மில்லியன்கணக்கானவற்றை உங்களுக்கு அளிக்கக்கூடும். இத்தகைய மனிதர் மகிழ்ச்சியாக, சாந்தமாக, ஒருங்கிணைப்பாக, அமர்த்தலாக, அமைதியாக இருப்பார். இதனால், மனம் பூக்கும், பூத்து அதன் அத்தனை ஆக்கபூர்வ அம்சங்களையும் அவரிடம் அள்ளித் தரும். அவருக்குச் சில ஆற்றல்கள் கைவரப் பெறும். அவரால் உங்கள் எண்ணங்களை வாசித்தறிய முடியும். அவரால் உங்களை குணப்படுத்த முடியும். அவரது ஆசி, ஆற்றலாகும். சும்மா அவர் அருகில் இருப்பதாலேயே நீங்கள் பயனுற முடியும்.

நுட்பமான வழிகளில், அவர் ஓர் ஆசீர்வாதம். அனைத்து சித்திகளும், யோகாவும் பதஞ்சலியும் சொல்லும் அனைத்து சக்திகளும் அவருக்கு எளிதாகும். அவர் அதிசயங்கள் மிக்க மனிதராக இருப்பார். அவரது ஸ்பரிசம் மந்திரம்போல் இருக்கும். தொண்ணூற்று ஒன்பது விழுக்காட்டு நேர்மறை மனதால் அவருக்கு எதுவும் சாத்தியப்படும். நேர்மறைத் தன்மை ஓர் ஆற்றல், ஒரு சக்தி.

அவர் மிகுந்த சக்தி பெற்றவராக இருப்பார். இருந்தபோதிலும் அவர் ஞானம் பெற்றவராக இருக்கமாட்டார்.

எனினும் ஞானமுற்ற மனிதரை விட இத்தகைய மனிதரை ஞானி என எண்ணுவது உங்களுக்கு எளிதாக இருக்கும். ஏனெனில், ஞானமுற்ற மனிதர் சர்வசாதாரணமாக உங்கள் தளத்தைத் தாண்டிச் சென்றிருப்பார். உங்களால் அவரைப் புரிந்துகொள்ளமுடியாது. அவர் புரியவியலாதவராகி இருப்பார்.

உண்மையில் ஞானமுற்ற ஒரு மனிதரிடம் எந்த சக்தியும் இல்லை, ஏனெனில் அவரிடம் மனம் இல்லை. அவர் அதிசயவாதி அல்ல. அவரிடம் மனமில்லை; அவரால் எதையும் செய்ய முடியாது. ஏதும் செய்யாதிருப்பதில் அவர் இறுதியானவர்.

அவரைச் சுற்றி அதிசயங்கள் நிகழலாம். ஆனால் அவை நிகழ்வது உங்கள் மனதினால்தானே அன்றி அவரால் அல்ல, அதுதான் வித்தியாசம். சித்திபெற்ற மனிதரால் அதிசயங்கள் நிகழ்த்த முடியும்; ஞானமுற்ற மனிதரால் முடியாது. அதிசயங்கள் சாத்தியம் ஆனால் அவை நிகழ்வது உங்களாலேயே அன்றி அவரால் அல்ல. உங்கள் நம்பிக்கை, உங்கள் விசுவாசம் அவ்வதிசயத்தை நிகழ்த்தும்.

பல அதிசயங்கள் நிகழக்கூடும், ஆனால் ஞானமுற்ற மனிதர் எவரோ அவரால் எதையும் செய்ய முடியாது. செய்யும் காரியவாதி மனம்- மனமே அனைத்துக்கும் காரணமான காரியவாதி. மனம் இல்லாதபோது, நிகழ்வன இருக்கும் ஆனால் செய்வன இருக்காது.

ஞானமுற்ற மனிதர், உண்மையில் இல்லாதவராகி விடுகிறார். அவர் இல்பொருளாக, சூன்யமாக இருக்கிறார். மூலவர் இல்லாக் கருவறை போலிருக்கும் அவருள் நீங்கள் நுழைய முடியும், ஆனால் அவரைச் சந்திக்க முடியாது.

அவர் நேரெதிர் சார்பு நிலைகளுக்கு அப்பால் கடந்து சென்றுவிட்டவர். பெரியதொரு கடவுநிலை அவர். அவரில் நீங்கள் தொலைந்துபோவீர்கள் ஆனால் அவரை உங்களால் கண்டறிய முடியாது.

சித்து சக்திகள் பெற்ற மனிதர் உலகில் இருக்கத்தான் செய்கிறார். அவர் உங்களது நேரெதிர் பதமானவர்.

நீங்கள் கையறு நிலையை உணர்வீர்கள்; அவர் ஆற்றல்மிக்கவராய் உணர்வார். நீங்கள் நலமற்று இருப்பதாய் உணர்வீர்கள்; அவரால் உங்களை குணப்படுத்த முடியும். நீங்கள் 99 விழுக்காடு எதிர்மறையானவர்; அவர் 99 விழுக்காடு நேர்மறையானவர்.

இரு தரப்புக்குமான சந்திப்பே கையாலாகாத்தனத்துக்கும் கைநிறைந்த ஆற்றலுக்கும் இடையிலானதாகத்தான் இருக்கும். நேர்மறைத் தன்மை ஆற்றல். எதிர்மறைத் தன்மை கையாலாகாத்தனம். இந்நிலையில், அத்தகைய மனிதரை நீங்கள் மிகவும் சிலாகித்து வியப்பீர்கள். அது அவருக்கு ஆபத்தாகும். எவ்வளவு அதிகமாய் அவரை நீங்கள் வியக்கிறீரோ  அவ்வளவு அதிகமாக அவரது அகங்காரம் வலுவாகிறது.

அருட்தொண்டர்கள் எப்போதுமே அகங்காரமிக்கவர்கள். அவர்கள் குறிப்பிடத்தக்க ஒருவராக இருப்பர்-ஆற்றல்மிக்கோர், தேர்வுசெய்யப்பட்டோர், உயர்நிலையில் இருப்போர், இறை தூதர், தீர்க்கதரிசி- இப்படி யாரோ ஒருவர்.

ஒரு பாவி எளிமையானவர், தன் பாவத்துக்கு அஞ்சுபவர்; தான் யாரென அவருக்குத் தெரியும். ஒரு பாவி அந்நிலையில் இருந்து நேராக குதித்து ஞானம் பெற்றவரான நிகழ்வுகள் பல முறைகள் நடந்திருக்கின்றன; ஆனால் சித்து சக்தி கொண்டதொரு மனிதருக்கு அது எளிதல்ல, ஏனெனில் அவரது சக்தியே அவர் ஞானம் பெறுவதற்குத் தடுப்பாக ஆகிவிடும்.

நினைவில் வையுங்கள், சித்தியுற்றவராக முயலாதீர்கள். சித்து சக்திகளால் உங்களை ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களிடம் சித்து சக்திகள் தோன்றத் தொடங்கினால் முன்னெப்போதையும் விட நீங்கள் அதிக எச்சரிக்கையாகி விடவேண்டும்.

பிறகும் அவை எழும்! எவ்வளவு அதிகமாக தியானிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு மனம் பண்படும். மனம் பண்படும்போது நீங்கள் உங்களுடன் எப்போதும் சுமந்து கொண்டிருக்கும் விதைகள் முளைவிடத் துவங்கும். இப்போது மண் தயார், தக்க பருவமும் வந்துவிட்டது. அந்தப் பூக்களும் அழகானவை...

ஒருவரை உங்களால் தொட்டு உடனடியாக குணப்படுத்த முடியும்போது, அதைச் செய்யும் உந்துதலை மீறிச் செல்வது கடினம். உங்களால் மக்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்ய முடியும்போது நீங்கள் பெரும் சேவையாளராகிவிட முடியும். உந்துதலைக் கடந்து செல்வது மிகக் கடினம், உந்துதல் எழும், உடனே நீங்கள் அதை நியாயப்படுத்துவீர்கள், ஏனெனில் மக்கள் சேவைக்காக மட்டும்தானே நீங்கள் செய்வது.

ஆனால் அதற்குள் பாருங்கள். மக்கள் சேவை மூலம் அகங்காரம் எழுகிறது, அதனால் இப்போது ஆகப் பெரும் தடை அங்குள்ளது. எனவே நினைவில் கொள்ளுங்கள், உங்கள் மனம் சித்திமயமாக முயலும்.

குறிப்பிடத் தக்கோராய் இல்லாதோரால் ஆன உலகில் குறிப்பிடத் தக்க ஒருவராய் ஆகிவிட, அதிக சக்திமிக்கவராய் ஆகிவிட உங்கள் மனதில் பேரவா உள்ளது. அதுகுறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்.

அதன்மூலம் பெரும் நன்மை செய்ய முடியும் என்றபோதும், அது அபாயகரமானது. நன்மை மேலோட்டமானது மட்டுமே. அடியாழத்தில், உங்களை நீங்களே கொன்றுகொண்டிருக்கிறீர்கள், பிறகு அது தொலையும், பிறகு மீண்டும் நீங்கள் எதிர்மறைக்குள் விழுவீர்கள். அது கொஞ்சம் ஆற்றல். அதை நீங்கள் இழக்கக்கூடும்; பிறகு அது போய்விடும்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், எவ்வகை சித்து சக்திகளையும் அடைய ஒருபோதும் முயலாதீர்கள். உங்கள் வழியில் அத்தகையோர் தாமாக வந்தால்கூட, முடிந்தளவு உடனடியாக அவர்களை விட்டுவிலகுங்கள். அவர்களுடன் சேர வேண்டாம், அவர்களது தந்திரங்களுக்குச் செவிசாய்க்க வேண்டாம்.

ஞானமுற்ற மனிதர் என்ன செய்கிறார்? அவர் பாட்டுக்கு அங்கிருப்பார், ஒரு நதியைப்போல் கிடைக்குமாறு இருப்பார். தாகமுற்றோர் வருவர். எனினும் உங்கள் தாகத்தைத் தணிக்க ஒரு நதி முயன்றாலும், நீங்கள் தயாராக இல்லையெனில் அதற்கு சாத்தியமே இல்லை. நதி பாய்ந்தபடி இருக்கலாம், ஆனால் நீரை ஏற்க நீங்கள் தணிந்து மண்டியிடவில்லையெனில், நீங்கள் உங்கள் வாயைத் திறக்கவில்லை எனில், நீங்கள் தாகத்துடனேதான் இருக்க நேரிடும்.

அகங்காரம் தாகத்துடனே இருக்கும் எப்போதும், எதையெதையோ அடையும்போதும், அகங்காரம் என்பது தாகம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.