“ஞான விடுதலை” மிக எளிதானது...
-------------------------------------------------------
சதா சர்வ காலமும் பேரின்பத்தில் திளைத்திருப்பதே “ஆத்மா ஞானம்” என்று கூறப்படுகிறதே, உங்கள் அனுபவம் என்ன ?
.
“நிலைகளை எதிர் நோக்கியே ‘ஞான விடுதலை’ ஒத்திப் போடப்படுகிறது என்பதையறிந்து கொண்டாய்... மிக உயர்ந்தவை என நீ நினைக்கும் எப்பேர்பட்ட நிலைகளுமே உன் மனதின் கற்பனைகளுக்குள்ளும், ஏற்கனவே அறிந்தவைகளுக்குள்ளும் அடங்கி விடுகிறது...
.
இயல்பிலிருந்து வேறுபடும் அவ்வித நிலைகளுமே அதன் எதிர்த்தன்மையை உள் வைத்துக்கொண்டே தோன்ற முடியும்.
.
பயிற்சி, முயற்சிகளின் மூலம் ஒருக்கால் பேரின்ப நிலையை எட்டிய மனம், அதன் தொடர்ச்சியாக பெருந்துக்க நிலையையும் சந்தித்தே தீரவேண்டும்...
.
“நிலைகளை” எப்போதும் அதன் எதிர்த் துருவங்கள் ஈர்த்துக் கொண்டேயிருக்கின்றன...
.
இயல்பான மையத்திலிருந்து ஒரு புறமாக இழுத்து நிறுத்திய ஊஞ்சலை விட்டு விட்டால் உடனடியாக மீண்டும் மையத்திற்கு வந்து நின்றுவிடுவதில்லை...
இப்படியும் அப்படியுமாக ஆடியே நிற்கிறது....
.
எல்லா நிலைகளுமே ஒரு வித இன்ப நாட்டமே...அது எல்லைகளுக்குட்பட்டது, இன்பங்கள் எல்லாவற்றிலும், துன்பங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளதை நீ அறிவாய்...
.
ஏற்கனவே நீ கற்றறிந்துள்ள, கேட்டறிந்துள்ள உன்னுடைய மனக் கற்பிதங்களுக்குட்பட்டே நீ கூறும் “பேரானந்த நிலையை” வரையறுத்துக் கொள்ள இயலும்...
எப்பேர்ப்பட்ட நிலையாயினும் அது வந்து போகக் கூடியதே என்பது உனக்கு தெளிவானதா...?”
.
“அப்படியானால் வந்து போகாத எப்போதும் உள்ள ஒரு நிலை உண்டா...?
.
“நிலைகள் மேல் உள்ள உன் காதல் இன்னும் தீர்ந்த பாடில்லை”
.
“ஞான விடுதலையை இயக்கமற்ற ஒரு நிலையாக மட்டுமே சுருக்கி வரையறுத்துக் கொள்ள முடியாது...
.
அது ஒரு ஒட்டு மொத்தமான இயக்கமும், இயக்கமற்ற தன்மையுமே, இயங்குதல் என்பது இயங்காமைக்கு எதிரல்ல என்கின்ற அடிப்படையைப் புரிந்து கொள்...
.
அது கடலாகவும், அலையாகவும் இருக்கிறது...
நிலையாகவும் நிலையற்றதாகவும் இருக்கிறது...
.
உன் எந்த கற்பனைகளுக்குள்ளும் அதை கொண்டு வர
முடியாது, ஏற்கனவே இக்கணத்தில் நடந்தேறிக் கொண்டிருக்கும் விஷயத்தை எப்படி நினைவுக்களுக்குள் அடக்க முடியும்...?
.
இப்போது வந்துபோய்க கொண்டிருக்கும் மூச்சுக் காற்றைக் அது எப்படியிருக்கும் என்று கற்பனை செய்வதைப் போலவே...
.
உண்மையை நீ உணர முடியாது, அனுபவிக்கவும் முடியாது....
.
.
அனுபவமின்றி பின் எப்படித்தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும் ஐயா ?
.
விடுதலையை நீ நுகர்ந்து அனுபவிக்கவே நாட்டம் கொள்கிறாய்...
அனுபவமே பிளவுபடுவதுதான்...
.
முதலில் அனுபவிப்பதற்கு
“நீ” அல்லது “நான்” என்று ஒன்று இல்லை...
.
அனுபவத்திலிருந்து உருவாகும் மயக்கமே அது...
‘நான் ஓய்வாக இருக்கிறேன்...’, ‘தளர்வாக இருக்கிறேன்...’, ‘மகிழ்ச்சியாக இருக்கிறேன்...’ என்று அனுபவித்து உணர மனம் இரட்டிப்பாகியே தீரவேண்டும்...
.
ஆனால் விடுதலை என்பதே உன் நிஜமான ஒருமனத் தன்மையை அறிந்து கொள்வதே...
.
இங்கே, இப்போதே... உன்னுள் வருவதையும் போவதையும் எதுவானாலும் சுதந்திரமாக கடந்து போக அனுமதிப்பதில் உள்ளது...
.
ஒட்டு மொத்த இயக்கமாக அது பிரவகித்துக் கொண்டிருக்கிறது... “நான்” உணர்வும் அதன் பாகமே...
.
சுதந்திரமான பிரவாகத்தில் ஒவ்வொரு நொடியும் “கற்றல்’ துவங்கி நீ எதிர்கொள்ளும் எல்லா சூழல்களுமே உனக்கு ஒரு மெய்ப் பாடமாகிவிடும்...
.
உன் அடையாளங்களை எதிர்ப்பற்று, ஏற்று அனுமதிக்கையில் அடிப்படை இயல்பில் மாற்றமடைந்து, உன் இருப்பினை எல்லைகளற்றதாக கண்டு கொள்ளலாம்..
.
முற்காலத்தில் அந்த எல்லயற்றதையே, “நிலை”களாக்கி வர்ணிக்கும்போது “பேரானந்தம்” என்று அழகுறக் குறிப்பிட்டிருக்கலாம், அல்லது யோக சாதனைகள் மூலம் அடையும் சில நிலைகளையும் அவ்வாறு குறிப்பிட்டிக்கலாம்.
.
எது எவ்வாறாயினும் “ஞான விடுதலை” மிக எளிதானது...
பூரண ஏற்புத் தன்மையில் எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்ற குளிர் நெருப்பு அது.
.
Wednesday, 24 February 2016
ஞான விடுதலை” மிக எளிதானது...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.