மன இறுக்கமும் ஓய்வும்- ஓஷோ- பகுதி-5
நான் மலைப்பிரதேசங்களில் ஜிப்ரிஷ் தியானத்தை நடத்தும்போது ……….இந்த தியானத்தை நகரங்களில் அனுமதிப்பது கடினம். ஏனெனில் உங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அவர்கள் உடனே காவல்துறைக்கு தொலைபேசியில், எங்களது முழு வாழ்க்கையும் நாசமாகிக் கொண்டிருக்கிறது. என்று புகார் கொடுத்துவிடுவார்கள். அவர்களும் அவர்களுடைய வீடுகளில் இந்த தியானத்தைச் செய்தால், இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பைத்தியகாரத்தனத்திலிருந்து வெளிவந்து விடலாம் என்பதை அந்த பக்கத்து வீட்டு மக்கள் அறிய மாட்டார்கள். அவர்களது பைத்தியகாரத்தனமே முதலில் அவர்களுக்குத் தெரியாது.
ஜிப்ரிஷ் தியானம் என்பது ஒவ்வொருவரும் தங்களது மனதிற்குள் என்னவெல்லாம் வருகிறதோ, அதையெல்லாம் சத்தமாக வெளியே சொல்வதற்கு அனுமதிப்பதாகும். மேலும், இப்படி மக்கள் சம்பந்தம் இல்லாமல் முட்டாள்தனமாக உளருவதைக் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் அப்போது நான் மட்டுமே சாட்சியாக இருப்பேன். மக்கள் எல்லாவிதமான விஷயங்களையும் செய்து கொண்டிருப்பார்கள். மேலும், இதில் உள்ள ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், நீங்கள் வேறு யாரையும் தொடக் கூடாது என்பதுதான். நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்கள் செய்யலாம் – சிலர் தலைகீழாக நின்றுகொண்டிருப்பார்கள், சிலர் தங்களது ஆடைகளை கழற்றி எறிந்துவிட்டு நிர்வாணமாக இருப்பார்கள், சுற்றிலும் ஓடிக் கொண்டும் இருப்பார்கள். அந்த ஒருமணி நேரமும் இப்படி இருப்பார்கள்.
அப்போது, ஒருவர் எனது முன்னால் உட்கார்ந்திருப்பது வழக்கம். அவர் ஒரு பங்குச் சந்தை தரகரோ அல்லது வேறு எதுவோ தெரியாது. ஆனால், தியானம் ஆரம்பித்த உடன், முதலில் அவர் சிரிப்பார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை நினைத்து அவரே சிரிப்பார். அதன்பின்னர், தனது தொலைபேசியை எடுத்து ஹலோ, ஹலோ…. என்று பேசுவார். அவரது ஓரக்கண்ணால் என்னையும் பார்த்துக் கொண்டே இருப்பார். நானும், அவரது தியானத்தை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து விடுவேன். அவர் தொலைபேசியில் அவரது பங்குச் சந்தை பங்குகளை விற்பார், வாங்குவார்….. அந்த ஒருமணி நேரமும் அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டே இருப்பார்.
ஒவ்வொருவரும் இதுவரை தாங்கள் உள்ளடக்கி வைத்திருந்த விநோதமான செயல்களைச் செய்வார்கள். அந்த தியானம் முடியும்போது, அதில் பத்து நிமிட ஓய்வு இருக்கும். மேலும், அப்போது அந்த பத்து நிமிடத்தில் அந்த மக்கள் முற்றிலும் களைப்பாக இருப்பதால் எந்தவிதமான முயற்சியும் இல்லாமல் கீழே படுத்துக் கிடப்பதைக் காண முடியும். எல்லா குப்பைகளும் வெளியேற்றப் பட்டு விட்டதால், அவர்களுக்குள் ஒரு சுத்தமான தன்மை உருவாகிவிடுவதால், அவர்கள் ஓய்வுடன் இருப்பார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பார்கள். ஆனால், உங்களால் அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
மக்கள் என்னிடம் வந்து, அந்த பத்து நிமிடத்தை இன்னும் கொஞ்சம் நீட்டியுங்களேன். ஏனெனில் எங்களது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு ஓய்வு நிளையை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தது. விழிப்புணர்வு என்றால் என்னவென்று நாம் எப்போதாவது புரிந்துகொள்வோம் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததேயில்லை. ஆனால் அந்த விழிப்புணர்வு வருவதை எங்களால் உணர முடிந்தது. என்று கூறுவார்கள்.
உற்சாகம் தற்காலிகமானது. எப்போதும் உற்சாகத்திலேயே இருந்து விட முடியாது. அப்படி இருந்தால் இரத்த அழுத்தம் ஏறிவிடும். ஆளே காலியாகி விட வேண்டியது தான்!
குறிப்பிட்ட அளவுக்கு ஏறிவிட்டால், அப்புறம் இறங்குமுகம் தான். மேலும் கீழுமாகவே போய் வரும் உற்சாகம். சோகத்தில் வீழ்ந்து விட்டால் மனம் உற்சாகம் தேடும்..... சாதாரண வாழ்வின் ஓட்டம் இதுதான்.
ஆனால், தியானத்தின் மூலம் நிறைவு பெற்று விடும் போதும் உள் பிரதேசத்தில் அமைதி ஏற்படும்போது, எதுவுமே அசையாத போது, காலம் நின்று விடும் போது. ....ஆரம்பத்தில் அற்புதமான பரவச நிலை தோன்றும். அது வெறும் உற்சாகமன்று. பழகப் பழக ஆரம்பப் பரவசம் தோன்றாது. ஆனால், அது மந்தமும் அல்ல, எல்லாம் நின்று போன நிலையும் அல்ல. அது இயல்பு. அப்படித்தான் அது ஆகும்.
அதனால், உன்னுடைய நிறைவை, அமைதியை, மெளனத்தை, மகிழ்ச்சியை எப்படிப் பார்ப்பது என்று கலையை நீ கற்றுக் கொள்ள வேண்டும். நேற்றிருந்தது போல அது இன்றிருக்காது. இறந்த காலத்தைச் சுத்தமாய் மறந்து விட நீ கற்றுக் கொள்ள வேண்டும்.
சரியாக சொன்னால், இறந்த காலத்தில் நீ இறந்து விட வேண்டும். அப்போதுதான், உனது நிறைவும், அமைதியும், பரவசமும் புத்தம் புதிதாய், இப்போது கண்டு கொள்ளப்பட்டது போல் இருக்கும்.
ஒவ்வொரு இறந்த காலக் கணத்திலும் இறந்து போ!
ஒவ்வொரு புதிய நொடியிலும் புதிதாய்ப் பிற. மறுபடியும். ....மறுபடியும். .....
ஒவ்வொரு கணமும், இறப்பாகவும், புத்துயிர்ப்பாகவும் மாறி விட வேண்டும்.
செத்துப் பிழைக்கும் கலையைக் கற்றால்தான் பெற்றவை நிலைக்கும். இல்லாவிட்டால் சலிப்புதான். எதுவும் மாறாமல், ஒன்றே திரும்பத் திரும்ப நிகழ்வதாய்த் தோன்றும்.
மாற்றங்கள் மூலமாக உங்கள் இலட்சக் கணக்கான முன் வாழ்வுகளை வாழ்ந்திருக்கிறீர்கள், ஏதாவது உற்சாகம் ஏற்படும் என்ற நம்பிக்கையில். இனிப் புதிய கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும். உமது இருப்பில் இனிய புதிய பரிமாணம் திறக்கும்----நிரந்தரத்தில் எப்படி வாழ்வது என்பது.
தற்காலிகமான மாற்றங்கள் மூலமே வாழ்வை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் , அவை நிலையற்றவை. மாறாத, நிரந்தரம் என்ன, பரிபூரண அசைவின்மை என்ன, கால வெளியைக் கடந்து என்ன என்பதை இனிக் கற்றுக் கொள்ளுங்கள். அது புதிய கலை.
இந்தக் கலையைக் கற்ற பிறகு, உங்கள் நினைவில் நித்தமும் புது மலர்கள் பூக்கும். உங்கள் மெளனத்தில் புதிய விண்மீன்கள் உதிக்கும். பரவச மழை பெய்யும். ஆனால், நீங்கள் நேற்றைத் தினங்களை மறக்க வேண்டி வரும். இல்லாவிட்டால், ஒன்றே திரும்பத் திரும்ப வருவது போல் தோன்றும்.
எனக்குச் சலிப்பில்லை......நான் நிறைவில் வாழ்ந்தவன். பரிபூரண அமைதியில் வாழ்ந்தவன். எனக்குள் எதுவும் அசைவதில்லை. எல்லாம் முழுமையாக, அமைதியாக, அசையாமல் இருக்கின்றன. நான் நேற்றை நினைக்காததால்தான் அப்படி. போனது போனதுதான். நான் திரும்பிப் பார்ப்பதே இல்லை-----ஒவ்வொரு கணமும் நிறைந்த பரவசமே, எனக்கு. அதே நிறைவு, அதே அமைதி, அதே மெளனம். நான் இறந்தக் காலத்தைக் கை கழுவிக் கொண்டே இருப்பதால், எனக்கு எல்லாமே புதிது.
என்றும் புதிதான நிரந்தரத்தைப் பெறும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள். சாஸ்வதக் கண்ணாடி மீது புழுதிபடிய விடாதீர்கள்.
கவலைப்படுகிறவர்களுக்கே உற்சாகம் தேவை. உற்சாகமில்லாமல் அவர்களால் வாழ முடியாது. கவலை அவ்வளவு கனம்! சின்னதாய் ஓர் உற்சாகம், புதியதாய்ச் சிறிது காதல், ஒரு லாட்டரி கடை திறப்பு--- போன்றவைதாம் அவர்கள் தொடர்ந்து வாழத் தூண்டுதல்.
சிரமப்படும் வாழ்வில், சின்னச் சின்ன உற்சாகங்கள் மசகு எண்ணெய் போல. இன்னொரு உற்சாகத்தை எதிர் பார்த்து வாழ்வை நகர்த்தலாம்.
உங்களது உற்சாகங்கள் என்ன? புதிய வீட்டிற்குக் குடி போவதால் உற்சாகம் வருமா? புதிய கார் வாங்கினால் உற்சாகம் வருமா?
நான் கேள்விப்பட்ட நிகழ்ச்சி ஒன்றைச் சொல்கிறேன். அழகான வீட்டில் வாழ்ந்து வந்த ஒருவருக்கு அந்த வீடு சலித்து விட்டது. அந்த அழகான வீட்டிற்குப் பின்னால் ஓர் அழகான ஏரி இருந்தது. அதற்குப் பின்னால், காடும், மலைகளும். ஆனால் தினசரி அதே காட்சிதான். காலையும், பகலும், மாலையும் ஒரே காட்சி. சலித்துவிட்டது.
அதனால், அவர், ஒரு தரகரை அழைத்து, அதை விற்க ஏற்பாடு செய்யச் சொன்னார். தரகருக்கு வியப்பு. அவ்வளவு அழகான வீட்டை விற்பதா? எவ்வளவு மனோகரமான சூழல்! அந்த இடம் ஒரு சுவர்க்கம்! ஆனால், வீட்டுக்காரர் விற்றே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.
"சரி, உங்கள் இஷ்டம். பத்திரிகையில் விளம்பரம் செய்து, விற்று விடலாம்", என்றார் தரகர்.
மறுநாள், பத்திரிகையில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தார், வீட்டுக்காரர்.
"அழகான பளிங்கு மாளிகை. ஏரி சூழ்ந்த எழில் மனை. அருகில் பசுமை போர்த்தியக் காடு. நீல மலைச்சாரல். வீட்டைச் சுற்றி வளர்ந்திருக்கும் மரங்கள் வானத்தைத் தொடும். ..."என்றெல்லாம் கவித்துவம் வர்ணிக்கப்பட்டிருந்தது. விளம்பரத்தில் யார் பெயரும் இல்லை. ஒரு தொலைபேசி எண் மட்டும் காணப்பட்டது. அது அவரது தரகரின் எண்.
வீட்டுக்காரர் உடனே போன் செய்தார். "அந்த வீட்டைப் பேசி முடித்து விடுங்கள். அது எனக்கு வேண்டும், " என்றார்.
"அதை வாங்க முடியாது, ஐயா. அது உங்கள் வீடுதான், " என்றார் தரகர்.
"அட கடவுளே! என்ன கவித்துமான வர்ணனை! நான் இந்த ஏரியை மறந்தே போனேன். காடு, மலையெல்லாம் மறந்தே போயிற்று. நான் முதல் முதலாகக் குடி பெயர்ந்தபோது அந்த உற்சாகம் இருந்தது," என்றார் வீட்டுக்காரர்.
உற்சாகம் தற்காலிகமானது. எப்போதும் உற்சாகத்திலேயே இருந்து விட முடியாது. ஓஷோ