Saturday 30 July 2016

இராமகிருஷ்ண மடம

🌹இராமகிருஷ்ண மடம்🌹

🍁சுவாமி விவேகானந்தர்

🌾பிரபஞ்சம் சூன்யத்திலிருந்து படைக்கப்பட்டதா

🍂இது எங்கிருந்து வந்தது? இருப்பு, இல்லாமை எதுவுமே இன்றி இருள் இருளில் மறைந்திருந்தபோது, இந்தப் பிரபஞ்சத்தை யார் படைத்தது? எப்படிப் படைத்தார்கள்? இந்த ரகசியம் யாருக்குத் தெரியும்? மனிதன் படைத்தவற்றுள் மிகமிகப் பழமையான வேதங்களில்கூட இதே கேள்வி எழுவதைக் காண்கிறோம்

🍂இந்தக் கேள்விகள் இன்றும் நம்மிடையே கேட்கப்பட்டு வருகின்றன. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்குப் பலகோடி முயற்சிகள் நடந்திருக்கின்றன. இன்னும் பலகோடி முயற்சிகள் நடந்துகொண்டேயிருக்கும்.

🍂இந்தியாவின் புராதனமான தத்துவ ஞானிகள் இந்தக் கேள்விக்கு அளித்த பதிலைத் தற்கால அறிவுடன் இணைத்து உங்கள் முன் வைக்க நான் முயல்கிறேன்.

🍂இருப்பு, இல்லாமை இரண்டுமற்ற காலம் ஒன்று இருந்தது என்பது முதல் அம்சம். அப்போது இந்த உலகம் இருக்கவில்லை. கடல்கள், சமுத்திரங்கள், ஆறுகள், மலைகள், நகரங்கள், கிராமங்கள், மனிதர்கள், மிருகங்கள், செடிகொடிகள், பறவைகள் இவற்றையெல்லாம் தன்னுள் அடக்கிய நமது அன்னை பூமி, கிரகங்கள், நட்சத்திர மண்டலங்கள், மற்றும் படைப்பின் எல்லையற்ற பல விசித்திரங்கள் எவையுமே அப்போது இருக்கவில்லை. இது நமக்கு நிச்சயமாகத் தெரியுமா? இந்த முடிவு எப்படி வந்தது என்பதை ஆராய முயல்வோம்.

🍂ஒரு மனிதன் தன்னைச் சுற்றிக் காண்பது என்ன? ஒரு சிறிய செடியை எடுத்துக் கொள்வோம். மனிதன் ஒரு விதையைப் பூமியில் நட்டுத் தண்ணீர் விடுகிறான். சிறிது காலம் கழித்து, ஒரு சிறிய செடி பூமியிலிருந்து தலை நீட்டி, வளர்ந்து, பெரிய மரமாகிறது. பிறகு விதையை விட்டுவிட்டு அது அழிகிறது. விதையிலிருந்து முளைத்து, மரமாகி, மறுபடியும் விதையாகி, இப்படி ஒரு சுழற்சியை அது நிறைவு செய்கிறது.

🍂ஒரு பறவையைப் பார்த்தால், அது முட்டையிலிருந்து பிறந்து, வளர்ந்து, எதிர்காலப் பறவைகளை உண்டாக்கும் விதைகளான முட்டைகளை இட்டுவிட்டு இறக்கிறது. மிருகங்கள், மனிதர்கள், ஆகிய அனைவரின் விஷயமும் இப்படித்தான்.

🍂இயற்கையிலுள்ள எல்லாமே சில விதைகள், சில மூலப்பொருட்கள், சில நுட்பமான உருவங்கள் இவற்றிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன. சிறிதுசிறிதாகப் பருத்தன்மை அடைந்து, வளர்ந்து, சிலகாலம் அப்படியே தொடர்ந்து, பின்னர் மறுபடியும் பழைய நுட்பமான ஆரம்ப நிலையை அடைந்து, அடங்கிவிடுகின்றன

🍂ஓர் அணு எப்படி அமைக்கப்பட்டிருக்கிறதோ, அதே முறையில்தான் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கிறது .

🍂பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே விதிதான் நிலவுகிறது . ஒரு பிடி மண்ணை அறிந்துகொள்வதன் மூலம், இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா மண்ணின் இயல்பையும் நாம் அறிந்துகொள்ள முடியும் என்று வேதங்கள் கூறுவது சரியானதே ஆகும்.

🍂இதே தர்க்கத்தை இயற்கை நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பொருத்திப் பார்த்தால், எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் முடிவும் ஒரேமாதிரி இருப்பதை நாம் காணலாம்.

🍂ஆறு, நீராவியிலிருந்து தோன்றி மீண்டும் நீராவியாக மாறுகிறது. தாவரம் விதையிலிருந்து தோன்றி விதையிலேயே முடிகிறது. மனித உயிர், மனித உயிரணுக்களிலிருந்து தோன்றி மனித உயிரணுக்களாக முடிகிறது.

🍂இதோ, இங்கே இருக்கும் மேஜையை உடைத்து, அழித்துவிட்டால், அது, நாம் மேஜை என்று சொல்லும் இந்த உருவத்தை அமைப்பதற்குக் காரணமாக இருந்த அதன் நுட்பமான துகள்களாகிய காரண நிலையை அடைந்துவிடுகிறது.

🍂இந்தப் பூமி அழிந்தால், அதற்கு உருவம் அளித்த மூலகாரணத்தை அடைந்துவிடுகிறது. மூலகாரண நிலையை அடைவதையே நாம் அழிவு என்கிறோம்.

🍂ஆகவே அழிவு என்பது ஒரு பொருளை முற்றிலுமாக இல்லாமல் ஆக்குவது அல்லது.எந்த பொருளையும் முற்றிலுமாக இல்லாமல் ஆக்க முடியாது.ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுவதையே நாம் அழிவு என்கிறோம்.

🍂ஆகவே மேஜையாகிய பொருளும் அது துகழ்களாக மாறிய மூலமும் ஒன்றே, வேறு பட்டவை அல்ல என்பது தெரிகிறது. இரண்டும் உருவத்தில்தான் வேறுபடுகின்றன.

🍂விதை மரத்தை உண்டாக்குகிறது. மரம் விதையை உண்டாக்குகிறது. இப்படியே மாறிமாறி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முடிவே இல்லை.

🍂நீர்த்துளிகள், அருவிகளாக மலைகளிலிருந்து இறங்கி ஓடி, கடலில் கலக்கின்றன. அங்கிருந்து நீராவியாக மேலே போய், மறுபடியும் மழையாக மலை உச்சியில் பொழிகின்றன. இதுவும் மாறிமாறி நடந்து வருகிறது.

🍂இப்படி எழுவதும் விழுவதுமாக இந்தச் சுழற்சி நடந்துகொண்டே இருக்கிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமே இப்படித்தான் நடைபெறுகின்றன.

🍂சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பூமி, உடல், மனம் மற்றும் பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே மறைந்து, அழிந்ததுபோலாக வேண்டுமானால் தங்கள் நுட்பமான மூல காரணநிலையை அடைய வேண்டும்.

🍂ஆனால் அவை மூல காரணங்களில் நுட்ப உருவத்துடன் இருக்கவே செய்யும். இந்த நுட்ப உருவங்களிலிருந்து மறுபடியும் அவை, புதிய பூமிகள், சூரிய சந்திரர்கள், மற்றும் நட்சத்திரங்களாகத் தோன்றுகின்றன.

🍂மரத்திலிருந்து விதை வருகிறது. அது உடனே மரமாக மாறுவதில்லை. அது சிலநாள் இயக்கமில்லாமல் இருக்கிறது. இதையே வேறுவிதமாகச் சொன்னால், வெளிப்படையாகத் தெரியாத ஒரு நுட்பமான இயக்கத்தில் அது ஈடுபட்டிருக்கிறது. விதை மண்ணுக்கு அடியில் தான் சிலகாலம் இயங்க வேண்டும். அங்கே அது பல துண்டுகளாக உடைந்து, சிதறி, அனேகமாக உருத்தெரியாமல் அழிகிறது. அந்த அழிவிலிருந்துதான், புத்துயிர் பெற்ற தாவரம் உற்பத்தியாகிறது.

🍂பிரபஞ்சமும் ஆரம்பத்தில் சிலகாலம் இதேபோல் தான் நுட்பமான உருவத்துடன் வெளியில் தெரியாமலும் வெளிப்படாமலும் இயங்க வேண்டும். அந்த நிலையிலிருந்துதான் புதிய படைப்பு தோன்றுகிறது.

🍂ஆகவே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் சூன்யத்திலிருந்து வெளிவந்திருக்க முடியாது.

🍂அதாவது ஒன்றுமே இல்லாமல் இருந்து பிறகு புதிதாக உருவாகவில்லை.

🍂அப்படியானால் எதிலிருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றியது? அதற்கு முன்னால் இருந்த நுட்பமான பிரபஞ்சத்திலிருந்துதான்

🍂ஆகவே நுட்பமான உருவில் இருந்த பிரபஞ்சத்திலிருந்து தான் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே தோன்றியிருக்கிறது. அது இப்போது வெளிப்பட்டிருக்கிறது; பின்னர் தன்னுடைய நுட்பமான உருவத்திற்குத் திரும்பிச் சென்றுவிடும், மறுபடியும் வெளிப்படும். நுட்பமான உருவங்கள் வெளிப்பட்டுச் சிறிதுசிறிதாகத் தூலத் தன்மையை அடைகிறது. தூல நிலையிலேயே வளர்ந்து அந்தத் தன்மையின் எல்லையை அடைந்தவுடன், பின்னோக்கிப் போக ஆரம்பித்து, மறுபடியும் சிறிதுசிறிதாக நுட்ப நிலையை அடைகின்றன.

🍂ஆகவே சூன்யத்திலிருந்து எதுவும் தோன்ற முடியாது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். எல்லாம் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது; இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் இயக்கம்தான் நுட்பத்திற்குச் செல்வதும், அதிலிருந்து தூலமாக வெளிப்படுவதும், மறுபடியும் நுட்பத்திற்குச் செல்வதுமாக, அலைபோல் எழுவதும் விழுவதுமாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

🍂இந்தக் கால அளவு சமஸ்கிருதத்தில் ஒரு கல்பம் அதாவது சுழற்சி என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.