Tuesday 26 July 2016

அமாவாஸ்யா

அமாவாஸ்யா என்று பெயர் எப்படி வந்தது என்று பார்ப்போமா??
விஷ்ணு புராணத்தில் இதை பற்றி விளக்கமாகச் சொல்லப்படுகிறது.
அதற்கு முன், சந்திரன் (கிரஹம் ) பற்றித் தெரிந்துகொள்வோம்.
பதினாறு கலைகளைக் (கிரணங்களைக்) கொண்டவன் சந்திரன்.இவற்றில் பதினைந்து கலைகளை தேவர்கள் பானம் செய்து (பருகி) வருகிறார்கள். கடைசியில் ஒரு கலையோடு எஞ்சி நிற்கிறான் சந்திரன். இப்படி ஒரே ஒரு கலையுடன்  எஞ்சி நிற்கும் சந்திரனை   சூர்யன் ஸூஷூம்னை என்னும் நாடியினால் தேவர்கள் பானம் பண்ணிய முறையில் நாள்தோறும் வளர்க்கிறான்.அதாவது பதினைந்து நாட்களால் தேவர்களால் பருகப்பட்டுக் குறைந்த கலைகளை, சூரியனும் பதினைந்து நாட்களில் சந்திரனைக் கலைகளால் முழுமை அடையச் செய்கிறான். இவ்வகையில் முழுமை பெற்ற பூர்ணசந்திரனிடத்தில் உள்ள அமுதத்தைத்தான் முப்பத்து முக்கோடி தேவர்களும் பருகுகிறார்கள். இவ்வாறு இவர்கள் பருகப்  பருகத்  தேய்ந்து பதினைந்து நாட்கள் கழித்து ஒரே கலை மீதியிருக்கும்போது சூரியனால் மீண்டும் வளர்க்கப்பெற்று அடுத்த  பதினைந்து நாட்களில் இழந்துவிட்ட பதினைந்து கலைகளையும் பெற்று மொத்தம் பதினாறு கலைகளுடன் (கிரணங்களுடன்) விளங்குகிறது சந்திரன்.

இப்போது அமாவாஸ்யா என்ற சொல்லின் பொருளை மஹரிஷி இங்கு விளக்குகிறார்.
சந்திரனுடைய பதினாறு கிரணங்களில்   பதினான்கு  கிரணங்களை மேற்கண்டவாறு தேவர்கள் பானம் செய்ய, அதனால் சந்திரன் நாள்தோறும் தேய்ந்து வருகிறான்.இந்த நாட்களுக்கு கிருஷ்ண பக்ஷம் என்று பெயர். கடைசியில் பதினைந்தாம் நாள் இரண்டு கிரணங்களுடன்  எஞ்சி நிற்கிறான் சந்திரன்.  ஸூர்ய  கிரணங்கள் பலவற்றிற்கும் வெவ்வேறு பெயர்கள் உண்டு.'சுஷும்னா ' என்ற பெயர் உள்ள நாடி ஒன்று உண்டு.  அதே மாதிரி, 'அமா' என்ற பெயருடைய கிரணமும் ஒன்று உண்டு. கடைசியில் இரண்டே இரண்டு கிரணங்களுடன் எஞ்சி நிற்கும் சந்திரன் , ஸூர்ய கிரணங்களால் மறைக்கப்பட்டு, ஸூர்ய மண்டலத்திலேயே பிரவேசித்தவன் போலாகி, ஸூர்ய னுடைய 'அமா' என்ற கிரணத்தில்  வசிக்கிறான். ஆகையால், 'அமா' என்ற  கிரணத்தில்  சந்திரன் வசிப்பதனால் அதாவது வாஸம் செய்வதால், அந்த தினத்திற்கு 'அமாவாஸ்யா' என்ற பெயர் வந்தது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.