Monday 11 July 2016

ஓஷோவின் வாழ்வில்!

ஓஷோவின் வாழ்வில்!

ஓஷோவின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அவரே கூறி இருக்கிறார். அதைப் பார்ப்போம்.
ஓஷோ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது.
அவர் வகுப்புகளுக்குச் செல்வதே இல்லை. இதனால் பேராசிரியர்களுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. ஒரு நாள் தலைமைப் பேராசிரியர் ஓஷோவை அழைத்தார்.
"நீ ஏன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வந்தாய்? உன்னை ஒரு நாளும் எந்த புரபஸரும் வகுப்பறையில் பார்த்ததே இல்லையாம்! தேர்வு வரும் சமயத்தில் அட்டண்டன்ஸ் இல்லை என்று என்னைப் பார்க்க வராதே! இப்போதே சொல்லி விட்டேன்; 75 சதவிகித அட்டண்டன்ஸ் இருந்தால்தான் பரிட்சை எழுத முடியும்" என்றார் அவர்.
.
அவர் கையைப் பிடித்தார் ஓஷோ.
"சார்! என்னுடன் கொஞ்சம் வாருங்கள்! நான் பல்கலைக்கழகத்தில் எங்கு இருந்தேன், என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தெரியவரும்" என்றார் ஓஷோ.
முதலில் கொஞ்சம் பயந்த அவர் ‘இந்தக் கிறுக்கு நம்மை என்ன செய்யுமோ’ என்று நினைத்தார்.
"என்னை எங்கே அழைத்துச் செல்லப் போகிறாய்?"
ஓஷோ கூறினார்: "நீங்கள் 100 சதவிகித அட்டண்டன்ஸ் நிச்சயம் தருவீர்கள். அந்த இடத்திற்குத்தான்! என்னுடன் தயவுசெய்து வாருங்கள்!"
ஓஷோ அவரைப் பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். நூலகரைப் பார்த்துச் சொன்னார். "தயவுசெய்து இவரிடம் சொல்லுங்கள்! நான் நூலகம் வராத நாள் ஏதேனும் உண்டா?"
நூலகர் சொன்னார்: "பல்கலைக்கழக விடுமுறை நாட்களிலும் கூட இவர் இங்கு வந்து விடுவார். ஒருவேளை நூலகத்திற்கும் விடுமுறை என்றால் எதிரில் இருக்கும் தோட்டத்தில், புல்வெளியில் அமர்ந்து கொள்வார். ஆனால், தினந்தோறும் நிச்சயம் வந்து விடுவார். ஒவ்வொரு நாளும், 'கிளம்பப்பா, நூலகத்தை மூட வேண்டும்' என்று சொல்லி வலுக்கட்டாயமாக இவரை அனுப்புவோம்."
.
ஓஷோ பேராசிரியரைப் பார்த்துச் சொன்னார்: "உங்கள் பேராசிரியர்களை விடப் புத்தகங்கள் தெளிவாக அனைத்தையும் சொல்லித் தருவது மட்டும் நிச்சயம்! இந்தப் புத்தகங்களில் உள்ளவற்றைத்தான் அவர்கள் திருப்பிச் சொல்கின்றனர். ஆகவே, இரண்டாம் தரமாக உள்ள அந்தப் பேச்சைக் கேட்க நான் ஏன் தினமும் வகுப்பறைக்குப் போக வேண்டும்? நேரடியாக புத்தகங்களிலிருந்தே நான் வேண்டியவற்றைத் தெரிந்து கொள்கிறேனே! இந்தப் புத்தகங்களில் இல்லாத எந்த விஷயத்தையாவது உங்கள் பேராசிரியர்கள் சொல்வதாக நீங்கள் எனக்கு நிரூபித்துக் காட்டினால், நான் வகுப்புகளுக்கு வரத் தயார்! அப்படி நிரூபிக்க முடியவில்லை எனில், நீங்கள் நிச்சயம் எனக்கு 100 சதவிகித அட்டண்டன்ஸ் தரவேண்டும்! தரவில்லை எனில் உங்களுக்கு நான் தொந்தரவு தருவது மட்டும் நிச்சயம்!"
.
ஓஷோ மீண்டும் அவரைப் பார்க்கவே இல்லை. ஆனால், அவர் 100 சதவிகித அட்டண்டன்ஸை ஓஷோவிற்குத் தந்தார். அவருக்கு விஷயம் நன்கு புரிந்து விட்டது.
அவர் கூறினார்: “நீ சொல்வது சரிதான்! எதற்காக இரண்டாம் தர அறிவைப் பெற வேண்டும்? நீ நேரடியாகப் புத்தகத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம். எனக்கு இந்தப் பேராசிரியர்களைப் பற்றி நன்கு தெரியும். ஏன், நானே ஒரு கிராமபோன் ரிகார்டுதான்! என்னுடைய பழைய நோட்ஸை வைத்துத்தான் நானே வகுப்பை எடுக்கிறேன்!”
முப்பது வருடங்களாக அவர் தனது பழைய நோட்டை வைத்துக் கொண்டு சொன்னதையே சொல்லி வருகிறார். ஆனால், இந்த முப்பது வருடங்களில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்து விட்டன!
800க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய ஓஷோ பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டி. அவர் படித்த புத்தகங்களின் எண்ணிக்கையோ பல ஆயிரம்!
ஓஷோவின் அறிவுரை, புத்தகங்களைப் படியுங்கள் என்பதுதான்! ஒரு நூலிலிருந்து நாம் பெறுவது ஏராளம்!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.