Saturday 16 July 2016

உனக்குள்ளே இருப்பது எது...?*

💥 *உனக்குள்ளே இருப்பது எது...?*💥

🌹 *மெளனம் என்பது என்ன?*🌹

   சத்தமில்லாமல் ஓசை எழுப்பாமல் அமைதியாக இருப்பதை மெளனம் என்று நினைக்கிறோம். உண்மை அதுவல்ல யார் மனதில் எண்ண அலைகள் உற்பத்தி ஆகாமல் சஞ்சலம் சலனம் இல்லாமல் இருக்கிறதோ அங்கே மெளனம் குடிகொண்டிருக்கும் எண்ணங்கள் இல்லாமல் இருப்பதே மெளனம்.

🌹 *ஒரு மனிதனால் எண்ணங்கள் இல்லாமல் மெளனமாக இருக்க முடியுமா?*🌹

   உறங்கும் போதும் விழித்திருக்கும் போதும் ஏன் பிறந்தது முதல் இறப்பு வரையிலும் இதயம் துடித்து கொண்டே இருக்கிறது ரத்தமும் அப்படியே ஓடிகொண்டே இருக்கிறது. நாம் நினைத்தாலும் அவைகளை நிறுத்தி விட முடியாது. நிறுத்தி விட்டால் மரணம் சம்பவிக்கும் எண்ணங்கள் என்பது அப்படி அல்ல நினைவிலும் கனவிலும் அவைகள் உற்பத்தி ஆகிக்கொண்டே இருந்தாலும் நம்மால் அதை நிறுத்த முடியும். ஒன்றையே நினைத்து ஒன்றிலே கரைந்து ஒன்றிலேயே ஐக்கியமாகி விட்டால் அந்த ஒன்றும் மறைந்து எதுவுமற்ற மோன நிலை சித்திக்கும்

🌹 *மோன நிலை அடைய என்ன செய்ய வேண்டும்?*🌹

   அறிவு, ஆராய்ச்சி, கேள்விகள், பதில்கள் எல்லாவற்றையும் காலணிகளை கழற்றி போடுவதை போல் போடுங்கள் இப்படி சொல்வது எளிது செய்வது கடினம் கடினமானது என்றால் அதை விட்டு விடலாமா? விட்டு விட்டால் மோன நிலையை அடைய முடியாதே என்று கேட்பது புரிகிறது. அறிவும் ஆராய்ச்சியும் எதற்க்காக? எதோ ஒன்றை தெரிந்து கொள்வதற்காக. அந்த எதோ ஒன்று எது என்பதில் தான் போராட்டம் இருக்கிறது. எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியுமோ அதை அறிய முயல வேண்டும். அறிந்த பிறகு மோன நிலை தானாக கிடைக்கும்.

🌹 *எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறியலாம்?*🌹

   பூமி சுற்றுவது எதனால்? சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் ஒழுங்கு முறைப்படி இயங்குவது எதனால்? கண்ணுக்கு தெரியாமல் கருத்துக்கு புலப்படாமல் எங்கோ இருந்து இயக்குவிக்கும் ஒரு மூலபொருளே அதற்கு காரணம். அந்த மூல பொருளை அறிந்தால் அறிய முயற்சித்தால் எல்லாவற்றையும் அறியலாம்.

🌹 *இதற்கு எளிய விளக்கம் என்ன?*🌹

   கண்ணுக்கு தெரியாத கடவுளை காண முயலுங்கள் கருத்துக்கு அகப்பாத கடவுளை அகப்படுத்த அதாவது உள்ளத்திற்குள் உணர துவங்குங்கள் அறியாதது எல்லாம் அறியப்படும். அறிந்த பிறகு ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் வராது. கேள்விகள் இல்லை என்றால் சிந்தனை குளத்தில் அலைகள் இல்லை அதாவது எண்ணங்கள் இல்லை எண்ணங்கள் இல்லாத போது மெளனம் வரும். மெளனத்தின் உள்ளே மோன வடிவமாக கடவுள் இருப்பான். கடவுளை கண்டவன் கடவுளே ஆவான்.

🌹 *அப்படி என்றால் மனிதனும் கடவுள் ஆகலாமா?*🌹

   கடவுள் இருக்கிறார் அவர் இல்லை என்பதை வாதங்களால் எண்ணங்களால் வார்த்தைகளால் நிரூபிக்க முடியாது உணர்வுகளால் மட்டுமே நிரூபிக்க முடியும். கடவுள் உணர்வு மிக ஆழமானது அது உனக்குள்ளே புதைந்து கிடக்கிறது. உன்னை தோண்டி பார்த்தால் கடவுள் கிடைப்பார் அதாவது உனக்குள்ளே கிடைப்பார். அப்படி என்றால் நீயும் அவரும் வேறு வேறல்ல வேறு வேறாக தெரிகிறீர்கள் அவ்வளவே.

குருவே சரணம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.