Monday 9 November 2020

அறிவுரை

இந்தப் பதிவைப் படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி பின் படியுங்கள் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்! (இது  ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை*)

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.

*உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.*

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்.

*ஒவ்வொரு மனிதனும்*
*தனித்தனி ஜென்மங்கள்.*

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே.அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்.
அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

இதுதான் வாழ்க்கையின் உண்மை.

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்,
நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற
குழந்தைகளாக இருந்தாலும்,
பேரன் பேத்திகளாக இருந்தாலும்,
உறவுகளாக இருந்தாலும்,
அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா?

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்! பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.

*அவர்களுக்கு அனுபவம் தான் குரு.*
அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.

செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார் ?,தன் குணம் என்ன ?,என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். 
எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம்வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம்.
அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது.
எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்.
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும் ,தீமை வந்தாலும் ,உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் .அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும் துன்பமானாலும்
அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.
அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

*உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்*

பெண்ணாக இருந்தாலும் ,ஆணாக இருந்தாலும் ,வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

*மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.*

உன் கண்ணீரும் உன் கவலையும்
உன்னை பலவீனமாக காட்டிவிடும்.

அழுவதாலும் சோர்ந்து போவதாலும்
ஒன்றும் நடக்கப்போவதில்லை.
எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும்.

அழுது சுமப்பதை காட்டிலும்.
ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் 
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள்.

இந்த பக்குவத்தை அடைந்துவிட்டால்
 எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.

                 வாழ்க🙌வளமுடன்

                   அன்பே🔥சிவம்

Wednesday 4 November 2020

சாப்பாட்டு சாஸ்திரம்

சாப்பாடும்  சாஸ்திரமும் 

1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது

2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.

3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. ஏன தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள்.

4. அளவிற்து அதிகமாக உண்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

5. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

6. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.

7. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.

8. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

9. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. 

10. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

11. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.

12. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

13. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது

14. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

15. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது.

16. சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

17. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

18. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.

19. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

20. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.

21. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

22. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

23. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;.

24. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

25. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

26. வெள்ளித் தட்டில் இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

27. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

28. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ;ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

29. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

30. அதே போல் முதலில் கீரையோ  வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.

  வாழ்வில் நாம் செய்யக் கூடாதவை

1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.

2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.

3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.

4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. 

5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.

6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.

7. கர்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.

8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது.

9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.

10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.

11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது. 

12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.

13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.

14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.

15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது. 
மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.

இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள்.

அதனால் தான் அவர்களின் ஆயுள் 120 வயது வரை திட காத்திரமாக இருந்தது.‌

ஆனால் இப்போது பல வகையான நோய்கள் சிறுவயதிலேயே தொற்றிக் கொள்கிறது.

முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

ஆரோக்கியம் உங்கள் கையில் இருக்கிறது.