Monday, 1 August 2016

பகவான்ஸ்ரீ ரமணமகரிஷியின் குழந்தைகள்.

★பகவான்ஸ்ரீ ரமணமகரிஷியின் குழந்தைகள்..!★

ஆச்ரமத்தின் கூடத்தில் இருக்கும் கட்டிலிலபபகவான்் ஸ்ரீரமணமகரிஷி  சாய்ந்து அமர்ந்திருந்தார்.

வழக்கமாக அந்த நேரத்தில் வருகின்ற அணிற்பிள்ளைகள் வந்தன.

சிறிதும் பயமின்றி ஸ்ரீ ரமணரின் மேனியில் ஏறியும் இறங்கியும் விளையாடின.

ஸ்ரீ ரமணர் தமது அருகிலிருந்த டப்பாவைத் திறந்து பார்த்தபோது, அன்று முந்திரிப் பருப்புக்குப் பதிலாக அதில் வேர்க்கடலை இருந்தது.

தினந்தோறும் அணில்கள் ஸ்ரீ ரமணரின் கையிலிருந்து முந்திரிப் பருப்பை வாங்கி உண்ணும். அவரே ஊட்டவும் செய்வதுண்டு.

இன்று வேர்க்கடலையை அவர் ஊட்டியதும் அணிற்பிள்ளைகள் அதை ஏற்க மறுத்தன.

அது மட்டுமில்லாமல் முந்திரி கிடைக்காத கோபத்துடன் ‘கீச் கீச்’சென்று கத்திக் கொண்டே தாவித் தாவி அவருடைய உடம்பில் ஏறின.

“வேர்க்கடலையைச் சாப்பிடுங்கள்” என்று குழந்தையைக் கெஞ்சுவதுபோல ஸ்ரீ ரமணர் அணிற் பிள்ளைகளைக் கொஞ்சினார்.

அவையோ தொட மறுத்தன. முந்திரிப்பருப்பு வேண்டும் என்பதுபோல அடம் பிடித்தன.

ஸ்ரீ ரமணர் சமையலறையிலிருந்து முந்திரி இருந்தால் கொண்டு வருமாறு தொண்டர் கிருஷ்ணசாமியிடம் கூறினார்.

தொண்டர் சிறிதளவு முந்திரியைக் கொண்டுவந்து கொடுத்தார். “இவ்வளவுதான் இருக்கிறதா ?” என்றார் ஸ்ரீ ரமணர். தொண்டர், “பாயசத்திற்குப் போடணும்னு கொஞ்சம் வைத்திருக்கிறது” என்றார்.

“இந்தக் குழந்தைகள் எப்படி தவிக்கின்றன. போ போ. பாயசத்திற்கு முந்திரி போடணும்னு கட்டாயமில்லை” என்று ஸ்ரீ ரமணர் கோபமாகக் கூறியதும் தொண்டர் சமையலறையிலிருந்த முந்திரி முழுவதையும் கொண்டு வந்து கொடுத்தார்.

ஸ்ரீ ரமணர் ஆசையுடன் ஊட்ட, அணிற்பிள்ளைகள் சந்தோஷக்குரல்களுடன் உண்டபோது, ஸ்ரீ ரமணரின் வதனத்தில் கருணையொளி வீசியது.

மறுநாளே சென்னையிலிருந்து வந்த பக்தர் ஒருவர் ஸ்ரீ ரமணரிடம் இரண்டு பெரிய பொட்டலங்களில் முந்திரிப்பருப்பு கொண்டுவந்து, “அணிற்பிள்ளைகளுக்கு அளிப்பதற்காகவே கொண்டு வந்தேன்” என்றார்.

ஸ்ரீ ரமணர் அணிற்பிள்ளைகளுக்குத் தேவையானது கிடைத்ததில் ஆனந்தம் அடைந்தார்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!
நன்றி :இந்து  மத வரலாறு

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.