Wednesday 31 August 2016

நல்லதையே பேசுங்கள்...!

நல்லதையே பேசுங்கள்...!

விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்திற்கு வசிஷ்டர் வந்திருந்தார். இருவரும் பல விஷயங்களைப் பேசினர். வசிஷ்டர் விடை பெறும் போது விஸ்வாமித்திரர் அவருக்கு மறக்க முடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க விரும்பி ஆயிரம் ஆண்டு தவத்தால் தனக்குக் கிடைத்த சக்தியை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார்.

இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் வர நேர்ந்தது. வசிஷ்டரும் அவரை அன்புடன் உபசரித்தார். புண்ணியம் தரும் ஆன்மிக விஷயங்களை மட்டுமே பேசினார். விடை பெறும்  நேரத்தில் வசிஷ்டரும் விஸ்வாமித்திரருக்கு அன்பளிப்பு வழங்க விரும்பினார்.

இவ்வளவு நேரம் நல்ல விஷயங்களை பேசியதற்கு கிடைத்த புண்ணிய பலனை உமக்கு அளிக்கிறேன் என்றார். இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் சுருங்கியது.  “ நீங்கள் எனக்கு அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பயனுக்கு இந்த அரை நாள் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியமும் எப்படி சமமாகும் என்று தானே யோசிக்கிறீர்கள்? என்று கேட்டார்.  விஸ்வாமித்திரரும் தலையாட்டினார்.

எது உயர்ந்தது என்பதை நாம் பிரம்மாவிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவு செய்து பிரம்மலோகம் சென்றனர். பிரம்மாவிடம் நடந்ததை விளக்கினர். இது விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. விஷ்ணுவிடம் முறையிடுங்கள் என்றார் பிரம்மா.

அவர்களும் விஷ்ணுவிடம் சென்று கேட்டனர். தவ வாழ்வில் என்னை விட சிவனுக்குத் தான் நிறைய அனுபவம் உண்டு. அவரிடம் விசாரித்தால் உண்மை விளங்கும் என்றார் விஷ்ணு.  கைலாயம் சென்று சிவனிடம் விளக்கம் தர வேண்டினர். சிவனும் உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாள லோகத்திலுள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள் என்றார். விஸ்வாமித்திரரும் வசிஷ்டரும் பாதாளலோகம் வந்தனர். தங்கள் சந்தேகத்தை எடுத்துக்கூறினர்.

இதற்கு யோசித்தே பதில் சொல்ல வேண்டும் அதுவரை இந்த பூலோகத்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள் தலையில் சுமக்க கடினமாக இருக்கும் எனவே இதை ஆகாயத்தில் நிலை நிறுத்தி வையுங்கள் என்றார். உடனே விஸ்வாமித்திரர் நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன் அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும் என்றார். ஆனால் பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்றுகொண்டிருந்தது.

வசிஷ்டர் தன் பங்குக்கு அரைமணி நேரம் நல்ல விஷயங்களை பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன் இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும் என்றார்   இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி கிளம்பி அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து மீண்டும் வைத்துக்கொண்டு நல்லது நீங்கள் இருவரும் வந்த வேலை முடிந்துவிட்டது  போய் வரலாம் என்றார். கேட்ட விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லாமல் வழியனுப்பினால் எப்படி என்றனர் ரிஷிகள் இருவரும் ஒருமித்த குரலில்.

உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை  ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது பார்த்தீர்களா?  நல்லவர் உறவால் கிடைக்கும் புண்ணியமே தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறந்தது. என்றார் ஆதிசேஷன்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.