Friday, 5 August 2016

தன்னலத்தின் பல வடிவங்கள் ! 

தன்னலத்தின் பல வடிவங்கள் ! 
பெருமைக்கு உரிய நன்மகன் 
புகழுரையில் பாதி பொய்யுரை !
இனம் வெள்ளை-உள்ளம் தூயது ! 
விந்தையான மாறுதல்....

தம்பி,

"மனிதன்' என்ற தலைப்பிட்டு இந்த ஏடு எழுதப்பட்டி ருப்பதன் நோக்கம் மனிதத் தன்மை இன, மத, குலப் பற்று வெறியாகிடும்போதும், சுகபோகத்தில் நாட்டம், சுயநலத்தில் விருப்பம் எழும்போதும், மாய்க்கப்பட்டுவிடுகிறது; அத்தகைய நிலையிலும் வீழாமல், நிமிர்ந்து நின்று, நேர்மையுடன் யார் நடந்துகொள்கிறார்களோ, "இதயசுத்தி' யுடன் நடந்துகொள்கி றார்களோ, அவர்களையே "மனிதன்' என்ற பட்டியலில் சேர்க்க முடியும்; "மனிதன்' என்ற தகுதியை அவர்களே பெறுகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் தூய நோக்கமே காரணமாக அமைந்திருக்கிறது. இந்த ஏட்டின் தனிச் சிறப்புக்கு இதுவே காரணமாகவும் அமைகிறது.

தன்னலம் தலைகாட்டவே செய்யாது என்று கூறிவிடுவதோ, என்னிடம் தன்னல உணர்ச்சி வெற்றிகொள்ளவே செய்யாது என்று இறுமாந்து கூறிடுவதோ பொருளற்றதாகும்.

தன்னலம் என்பதற்கே வடிவங்கள் பலப்பல.

தன்னலத்தை ஊட்டிடும் நிலைகளும் பலப்பல.

தன்னலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான முறைகளும் பலப்பல.

தன்னலத்தைத் துளியும் கருதாதவன் என்றோ, தன்னல நோக்கமே எழாத நிலையினன் என்றோ ஒருவரைப் பற்றிக் கூறி, பெருமைப்படுத்துவதைக் காட்டிலும், உண்மையான பெருமை, தன்னலத்தை வென்றவன், தன்னல உணர்ச்சியால் தாக்கப்பட்டும் தாழ்ந்துவிட மறுத்தவன், தன்னல உணர்ச்சியுடன் போரிட்டு வெற்றி கண்டவன் என்பதிலேதான் இருக்கிறது.

தன் வாழ்க்கை, அதிலே குளிர்ச்சி; தன் குடும்பம், அதிலே ஏற்றம்; தன் நிலை, அதிலே பெருமிதம் பெற்றிட வேண்டும் என்று உணர்ச்சி, கெட்டவர்களுக்கும் மட்டுமே தோன்றிடக்கூடியது என்று கூறிவிடுவதும் முற்றிலும் உண்மையாகிவிடாது. இயற்கையாகவே அனைவருக்கும் எழக்கூடிய உணர்ச்சியே அது.

அவ்விதமான உணர்ச்சியே இல்லை, கற்சிலை போன்ற உறுதி இவருக்கு என்று பெருமைப்படுத்தக் கூறிடலாம்; அது கேட்டுச் சிலர் பெருமகிழ்ச்சியும் கொண்டிடலாம். ஆனால் உண்மையான பெருமை, தன்னல உணர்ச்சி எழவே எழாது என்ற நிலையில் இல்லை; தன்னல உணர்ச்சி எழுகிறது; எதைச் செய்தாகிலும், எவரைக் கெடுத்தாகிலும், நேர்மையை மறந்தாகிலும் தன்னலத்தைப் பெருக்கிக்கொள்ளலாம் என்று கருதிவிடாமல், தன்னல உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், பொது நன்மைக்காக விட்டுக் கொடுக்கவும், நீதியாக நடப்பதன் மூலம் தன்னலம் பெற்றிட முடியாது என்ற நிலை ஏற்படின் நீதி பெரிது, தன்னலம் அல்ல என்ற உறுதி கொள்வதும், அதன்படி ஒழுகி இன்னலை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதுமாகிய நிலைமை இருக்கிறதே, அதிலேதான் உண்மையான, நிலையான பெருமை இருக்க முடியும்.

அதிலும், அடிப்படைத் தேவைகளைப் பெறும் முயற்சியிலேயே அநீதிக்கு அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறபோது, யார் அடிப்படைத் தேவைகளையும் கூட இழந்திடுவேன், இன்னலை ஏற்பேன், வாழ்வதற்காக நீதியை இழந்திட மாட்டேன் என்று கூறுகிறானோ கூறியபடி செயல் படுகிறானோ, அவனே எல்லாப் பெருமைக்கும் உரியவனாகிறான்.

தம்பி! நமது செவிகளிலே விழுகிறதல்லவா, பெரிய இடத்தைப் பிடித்துக் கொண்டவர்களைப் பற்றிய புகழுரை; அவற்றிலே மிகப்பெரும் அளவு வெற்றுரையே; அல்லது பலன்பெற விழைந்து செய்யப்படும் அர்ச்சனையேயாகும்.

அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா! தன்னலம் துளியும் அற்றவர்! தன் குடும்பம், தன் குழந்தைகள் இதைப் பெற வேண்டும் அதைப் பெறவேண்டும் என்று அலைபவர் அல்ல, குடும்பம் அல்ல அவருடைய கண்முன் தெரிவது; நாடு, மக்கள்; அத்தகைய தியாகி அவர் என்று ஒருவரைப் பற்றிப் புகழ் சொரிவது எப்போது பொருளுள்ள பேச்சாக முடியும்? அவருக்குக் குடும்பம் இருந்து, அதனைக் காத்திடவும், ஏற்றம் பெறச் செய்திடவும் அவர் தமது முழுநேரத்தையும் நினைப்பையும், ஆற்றலையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டிருந்துவிடும் போக்கிலே செல்லாமல், தன் குடும்பம் நாட்டு மக்கள் சமுதாயத்திலே ஒரு அங்கம் என்ற அளவிலே கருதி, பொதுநலனைப் புறக்கணிக்காமல் தமது பணியினை நடாத்திச் செல்லும்போது; குடும்பத்திடம் இயற்கையாக ஏற்படும் பாசத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு விடாமல், சமுதாயத்தை மனதிலே கொண்டு பணியாற்றும்போது; தன் குடும்ப நலனை மட்டுமே கவனித்துக் கொண்டு பிறர் நலனைப் பேணிடத் தவறாமல், பொது நலனுக்காக உழைத்திடும் போது. அவ்விதமின்றி, குழந்தை குட்டிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் போக்கு கொண்டவரல்ல அவர்; எப்போதும் பொதுத் தொண்டிலே நாட்டம் காட்டுபவர் என்று ஒருவரைக் குறித்துப் புகழ்ந்துவிட்டு அவருக்கு எத்தனைக் குழந்தைகள்? என்று கேட்கும் போது, அவருக்குத் திருமணமே ஆகவில்லையே! என்று பதிலளித்தால், தியாகி என்றும், தன்னலம் மறுத்தவர் என்றும் புகழ்ந்து பேசியது என்ன பொருளைத் தரும்?

அவர் தன் குழந்தைகளைக் கவனிப்பதிலே காலத்தைத் தள்ளிவிடவில்லை! ஏனென்றால், அவருக்குக் குழந்தைகளே இல்லை!! ஏனென்றால் அவருக்குத் திருமணமே ஆகவில்லை!!

இந்த நிலையிலே அவரைப் புகழ்ந்து பேசுவதிலே பொருளோ பொருத்தமோ எப்படி இருக்கமுடியும்!

அவருடன் நீச்சல் போட்டியிலே எவனும் வெற்றி காண முடியாது; ஆனால் அவருக்கு நீச்சலே தெரியாது.

அவள் மலரைத்தொட்டுத் தன் கொண்டையில் செருகிக்கொள்ளவே மாட்டாள்; ஏனெனில் அவள் தலை மொட்டை.

அவன் பசும்பாலே சாப்பிடமாட்டான்; ஏனெனில் அவன் இருக்கும் இடத்தில் உள்ளவை அவ்வளவும் எருமைகள்?

அவன் எந்த அழகியையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; ஏனேனில் அவன் பிறவிக்குருடன்!

தம்பி! இந்த வரிசையிலேதான் சேர்க்கவேண்டும், திருமணம் செய்துகொள்ளாத ஒருவரைப் பற்றிப் பேசும்போது அவர் தமது குழந்தை குட்டிகளின் நலனுக்காகப் பாடுபடுபவர் அல்ல என்று புகழ்வது! இல்லை ஆகவே தேவை இல்லை! குழந்தைகள் இருந்து, அவை காகூவெனக்கூவி, அவைகளுக்காகப் பாடுபடாமல், நாட்டுத் தொண்டுக்கே என் நேரம் முழுவதும என்று கூறிச் செயலாற்றினவரா? இல்லையே! குழந்தைகள் இல்லை, ஆகவே குழந்தைகளைக் கவனிப்பதா சமுதாயத்தைக் கவனிப்பதா என்ற சிக்கல் எழவே காரணம் இல்லை.

என்றாலும் புகழ்கிறார்களே! ஏன்? மகிழச் செய்திடலாம் என்ற எண்ணம். அந்த எண்ணம் எழக்காரணம்? ஏதாவது கிடைக்காதா என்ற ஆசைதான்!

தம்பி! தன்னலத்துக்கும் பொதுநலனுக்கும் இடையிலே சிக்கி, தத்தளித்து இறுதியில் பொதுநலனுக்காகத் தன்னலத்தை இழந்திட உறுதிகொள்பவனே, மனிதன்!

நிறம் கருப்பு என்ற போதிலும், குடியரசுத் தலைவர் நிலை என்றபோதிலும், நான் ஓர் மனிதன் என்பதை எத்தனையோ இடர்ப்பாடுகள் இடித்தபோதும் கலங்காது எடுத்துக்காட்டினாரே டக்ளஸ் டில்மன், அவருக்கு மற்றோர் "மனிதன்' துணை நிற்க முன்வருகிறான்.

ஓர் வழக்கறிஞன்; டில்மனுக்கு நெடுநாளைய நண்பன்; வெள்ளை இனம்; ஆனாலும் தூய உள்ளம்.

திறமைமிக்க வழக்கறிஞர்! ஆனால் வருவாய் அதிகம் இல்லை! காரணம் அவர் ஏழை எளியோருக்காகவே வாழ்ந்து வந்தவர்.

குடும்பம் இல்லாதவர் அல்ல! வாழத் தெரியாதவர் அல்ல, வாழ்ந்திட வேண்டிய அவசியமே அற்றவர் அல்ல! ஒண்டிக் கட்டை அல்ல; நான் எதற்காகவும் எவரிடமும் தயவு கேட்கத் தேவையில்லை; நாலு முழத் துண்டு போதும் இடுப்புக்கு; நாளைக்கு ஒரு வேளை சோறு போதும்; படுத்து உறங்க எந்தத் தெருத்திண்ணை கிடைத்தாலும் போதும் என்று "வக்கணை' பேச.

தன்னையொத்த வழக்கறிஞர்கள், தன்னிலும் திறமை குறைவானவர்கள் பொருள் திரட்டி, தனவானாகி, கனவானாகி, மாளிகையிலே வாழ்ந்திடக் காணும்போதுகூட, நாம் ஏன் பணம் திரட்டக் கூடாது என்ற எண்ணம் கொள்ளவில்லை.

"உழைப்பு அதிகம். இதயம் பலகீனமாக இருக்கிறது. இதே அளவிலும் வேகத்திலும் வேலை செய்து கொண்டி ருந்தால், நல்லதல்ல; ஆபத்தாகிடக் கூடும்.''

மருத்துவர் கூறுகிறார் இதுபோல. இதுகேட்ட துணைவர் தன் துணைவியின் கண்களைக் காண்கிறார்; சோகம் கப்பிக் கொண்டிருக்கிறது! ஆகவே ஒரு புது முடிவுக்கு வருகிறார், நல்ல வருவாய் தரத்தக்க முறையில் தொழிலை' அமைத்து நடத்தி, பிறகு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். சிற்றூரில் ஒரு வசதியான வீடு அமைத்துக்கொண்டு, இயற்கைச் சூழ்நிலையில் தனது முதுமையைக் கழித்திட வேண்டும் என்று விரும்புகிறார். இந்த எண்ணத்தை, அனுமதிக்கப்பட முடியாத தன்னலம் என்றோ பொறுத்துக் கொள்ளக்கூடாது கெடு நினைப்பு என்றோ பேதையும் கூறிடான்.

நாலுமுழத் துண்டு போதும் என்று "தன்னலமற்றவர்' பேசுகிறாரே, அவருக்கு நாளைக்கு மூன்று வேளை குளியல்'! ஒவ்வொரு குளிப்பாட்டுக்குப் பிறகும் புதிதாக வெளுக்கப் பட்ட ஆடை! என்றால் அவர் நாலு முழத்துண்டு போதும் என்று பேசியது, தன்னலமற்ற தன்மையா அல்லது ஏழையைத் தடவிக் கொடுக்கும் தந்திரமா என்பது பற்றிய விளக்கம் கூற வேண்டும்.

பெரியதோர் மாளிகையில், திண்டுமீது சாய்ந்தபடி பேசலாம், எனக்கென்னய்யா? படுத்துத் தூங்கத் தெருத் திண்ணை போதும்! என்று. தந்திரப்பேச்சன்றி வேறென்ன வாக அது இருக்க முடியும்?

கடினமாகப் பல ஆண்டுகள் ஏழைகளுக்காக உழைத்தான பிறகு, மேலும் அதுபோலவே உழைத்துக் கொண்டிருக்க உடல் இடம் தராது என்று மருத்துவர் எச்சரிக்கை தந்தான பிறகு, வாழ்க்கையை இனிச் சற்று நிம்மதியாக நடத்திச் செல்ல வழி தேடிக்கொள்ள வேண்டும் என்ற நிலையினைக் கொள்வது - "தன்னலம்' என்று இழிவாகக் கூறப்பட வேண்டியதாகிடுமா! பேதையும் அங்ஙனம் கூறிடக் கூசுவான்.

ஒரு வாய்ப்பும் தன்னாலே வந்தது, அந்த வழக் கறிஞருக்கு.

செல்வாக்கு மிக்க ஒரு வணிக நிறுவனம், குறிப்பிட்ட சில ஆண்டுகள், சட்ட ஆலோசகராக இருக்க அழைத்தது, ஊதியம் அதிக அளவில்! கட்டு திட்டங்கள் குறைவு, கண்ணியமாக நடத்துவார்கள்! இந்த வணிக அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சில ஆண்டுகள் வேலை பார்த்தால், பிறகு பலப்பல ஆண்டுகள் இன்னலற்ற வாழ்க்கை நடத்திச் செல்வதற்கு ஏற்ற பொருள் கிடைத்துவிடும். சிங்காரச் சிற்றூர்! வயல் வெளி! இயற்கை அழகு! ஓய்வு தரும் மகிழ்ச்சி!

வழக்கறிஞர் இசைவு தருகிறார்! துணைவியார் மெத்தவும் மகிழ்ச்சி கொள்கிறார்கள்; வணிக அமைப்பின் பொறுப்பாளர் வேலை சம்பந்தமான ஒப்பந்தம் அச்சடித்துத் தருகிறார்; படித்துப் பார்க்கிறார் வழக்கறிஞர்; திருப்தியாகவே இருக்கிறது; கையொப்பமிட முனைகிறார்; தொலைபேசி மணி அடிக்கிறது.

இன்ப நிகழ்ச்சிகள் காண்கிறாள் வழக்கறிஞரின் மனைவி, வணிகக் கோட்டத்துப் பொறுப்பாளன், விழா நடத்த விரும்புகிறான்; உயர்தரமான உணவு விடுதியில்! இனி அவர் உடலுக்கு ஆபத்தின்றி வாழ்க்கை நடத்தலாம்; நிம்மதி பெறலாம் என்பதிலே அவளுக்கு மகிழ்ச்சி; சிற்றூரும் சிங்காரச் சிற்றிலும் மனக் கண்ணால் காணுகின்றாள்; இதழ்களில் புன்னகை தவழ்கிறது.

கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுகிறார் வழக்கறிஞர்.

என்ன! என்ன! தொலைபேசியில் யார்? என்ன திடுக்கிடத்தக்க செய்தி? ஏன் இந்தக் கலக்கம்?

யார் பேசினார்கள் தொலைபேசி மூலம்.

என் நண்பர் டக்லஸ் டில்மன் குடியரசுத் தலைவர்.

என்ன சொல்கிறார் உங்கள் நண்பர்?

அவர்மீது வழக்குத் தொடுத்திருக்கிறார்களல்லவா....?

ஆமாம்! பயங்கரமான குற்றச்சாட்டுக்கள், கடினமான வழக்கு!

அந்த வழக்கில், அவர் சார்பாக வாதாட அழைக்கி றார், என்னை; நம்பிக்கையுடன்; நட்பு உரிமை யுடன்....

என்ன! என்ன! டில்மனுக்காக நீர் வாதாடுவதா? நன்றாய் இருக்கிறது வேடிக்கை. வேடிக்கைகூட அல்ல; இது விபரீதம்! நமது கம்பெனி, டில்மன் வீழ்த்தப்பட வேண்டும் இந்த வழக்கின் மூலம் என்று விரும்புகிறது; திட்டமிட்டிருக்கிறது; அதற்காகப் பணம் செலவிடவும் முனைந்திருக்கிறது.

நான் உமது வணிகக் கோட்டத்திலே பணி புரிய ஒப்பந்தம் செய்துகொள்வது என்றால், என் இச்சையாக வேறு வழக்குகளை கவனிக்கக் கூடாதா? அப்படி ஒரு நிபந்தனையா....!

எந்த வழக்கையும் கவனிக்கலாம், இந்த வழக்கைத் தவிர! டில்மன் ஆட்சியில் இருப்பது எமது கம்பெனிக்கு இடையூறாக இருக்கிறது.

குடியரசுத் தலைவருக்காக வாதாட எத்தனையோ வழக்கறிஞர்கள் கிடைப்பார்களே...

கிடைப்பார்கள்.... ஆனால், அவர் என்னை அழைக்கிறார்; நம்பிக்கையுடன்; நான் மறுக்க மாட்டேன் என்ற நம்பிக்கையுடன்...

மறுக்கத்தான் வேண்டும்.... உம்மையே டில்மனுக்கு எதிராக வாதாடச் செய்திட விரும்பினோம். நண்பர் என்கிறீர். ஆகவே வற்புறுத்த விரும்பவிலலை. ஆனால் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதானால், டில்மனுக்காக வாதாடக்கூடாது...

ஒப்பந்தம் நமக்கு நிரம்பச் சாதகமானது என்பதை மறவாதீர். உமது துணைவியாக உள்ள நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்; இத்தனை ஆண்டுகள் உழைத்தது போதும்; இனிக் குடும்பத்தைச் சற்று கவனித்திட வேண்டுகிறேன். மருத்துவர் கூறினதை மறந்திடலாமா.... உங்கள் நண்பர் புரிந்து கொள்வார் நிலைமையை.... கூறிவிடுங்கள் வேறு ஒருவரை வழக்கை நடத்தச் சொல்லி....

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதானால், இந்த நிபந்தனையை மறவாதீர்; டில்மனுக்காக வாதாடக் கூடாது....

கையொப்பமிட்டால்தானே, நிபந்தனை....?

அப்படியானால் எமது கம்பெனி அழைப்பை மறுத்து விடப்போகிறீரா.....

வேண்டாம்... வேண்டாம்... என் பேச்சைக் கேளுங்கள். குடும்பத்தை நாசமாக்காதீர்கள். மனைவி என்ற உரிமையுடன் உங்கள் நலனில் அக்கறை கொண்டவள் என்ற முறையில், உம்மைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்....

ஒப்பந்தத்திலே கையெழுத்திடும் ஐயா! ஏன் ஓராயிரம் யோசனை. உம்மாலும் முடியாது, உம்மைப்போன்ற பலர் கூடினாலும் முடியாது டில்மனைக் காப்பாற்ற....

நிலைமை மோசமாக இருப்பதால்தான், டில்மன் என்னை அழைத்திருக்கிறார்; புரிகிறது. நான் ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்யப்போவதில்லை.

வணிகக் கோட்டத்தானுக்குக் கடுங்கோபம். ஒப்பந்தத் தாளை மடித்து எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறான். கண்ணீர் பொழிந்த நிலையில் துணைவி இருக்கிறாள். ஒரு புறம் அவளுடைய கண்ணீர் தெரிகிறது! மற்றோர் புறம் டில்மனுடைய குரல் காதிலே விழுகிறது! மனக்கண்ணால் பார்க்கும்போது ஒரு பக்கம், மாளிகை, பைபையாகப் பணம், பளபளப்பான வாழ்க்கை, பொன்னகையும் புன்னகையும் துலங்கிடும் நிலையில் மனைவி; சிற்றூர்; சாலை; சோலை; இன்பச் சூழ்நிலை தெரிகிறது; மற்றோர் புறமோ, துயரம் தோய்ந்த முகத்துடன் டில்மன்; அவன் கண்கள் அனுப்பும் அழைப்பு! நான் துரத்தப்படுகிறேன்! என்னை வேட்டையாடுகிறார்கள் - கருநிறம் என்பதால்! பழிசுமத்து கிறார்கள் என்னைச் சூழ்ந்து நிற்கும் நிறவெறியர்! என் கண்களுக்கு ஒரே ஒரு நண்பன் தெரிகிறான்! அதனால்தான் அழைக்கிறேன்; நம்பிக்கையுடன் என்று அந்தக் கண்கள் பேசுகின்றன.

தத்தளிக்கும் நிலையினளான அம்மாதரசி விழிநீரைத் துடைத்திடவும் மனமின்றி, எழுந்து செல்கிறாள் வெளியே....

எங்கே? இந்த நேரத்தில்? தனியாக! என்னிடம் சொல்விக் கொள்ளாமல்! அவன் கேட்கிறான்.

எங்கே என்றா கேட்கிறீர்கள் - நெடுஞ்சாலை நோக்கிச் செல்கிறேன்; ஏதாவது ஒரு மோட்டார் கிடைக்காதா... விழுந்து செத்துத் தொலைக்கிறேன். அவள் கூறுகிறாள், மனம் உடைந்த நிலையில்.

தம்பி! இது அல்லவா சிக்கல்! இது அல்லவா சோதனை! திருமணமே ஆகாத ஒரு திருவாளர், நான் என்ன என் பிள்ளை குட்டிகளுக்காகவா பாடுபடுகிறேன், எல்லாம் உங்களுக்காகத் தானே என்று பேசுகிறாரே, அந்த நிலைமையா இது!

ஒரு புறம் உள்ளம் உருகிக் கசிந்திடும் மனைவி.

மற்றோர் புறம், திகைத்துக் கிடக்கும் நண்பன்.

மனைவியின் கண்ணீரையும் துச்சமென்று கருதிவிட முடியாது; அந்த மாதரசியும் அக்கிரமம் எதனைச் செய்தாகிலும் எனக்குச் சுகபோக வாழ்வு அமைத்துக் கொடு என்று கேட்க வில்லை. நிம்மதியாக வாழக் கிடைத்திடும் ஒரே வாய்ப்பை இழந்துவிட வேண்டாம் என்றுதான் கெஞ்சுகிறாள்.

மனைவியின் வேண்டுகோளை மதித்திடுவதும், குடும்பத் திற்கு நிம்மதியான நிலையை அமைத்திடுவதும், ஒரு குடும்பத் தலைவன் மேற்கொண்டாக வேண்டிய கடமைகளிலே ஒன்று! அநீதியல்ல, அக்கிரமம் அல்ல! பிறரைக் கெடுப்பது அல்ல!

நண்பன் அழைப்பை ஏற்றுக்கொண்டால், அந்த நல்லவன் கண்களிலே ஒரு களிப்பு ஒளிவிடும்! மறுத்தால், அந்தக் கண்களிலே இரண்டொரு சொட்டு கண்ணீர் சிந்திடும்.

நண்பனுடைய கண்களிலே நம்பிக்கை ஒளி எழக் காண வேண்டுமானால், மனைவியின் கண்ணீரைக் கண்டு கலங்கக் கூடாது.

மனைவியை மகிழக் செய்திடும் கடமையைக் காட்டிலும் நண்பனைக் காத்திடும் கடமை பெரிது.

குடும்பம் - தன்னை ஒட்டியது! நண்பன் பிரச்சினையோ, பொதுவானது!

தன்னலம் விரண்டோடிற்று! பொதுநல உணர்ச்சி வென்றது. வெளியே புறப்பட்ட மனைவியைத் தடுக்கக் கூட இல்லை.

தம்பி! இதனை ஒத்த சிக்கல் எழும்போது, தன்னலத்தைத் துறந்திடும் உறுதி பிறந்திட வேண்டும். இந்த நிகழ்ச்சியைத் திருப்பித் திருப்பிப் படித்துக்கொண்டே இருக்கவேண்டும்போலத் தோன்றுகிறது.

குடும்ப நலனைப் பற்றிய கவலையை உதறித் தள்ளி விட்டு கண்ணீர் பொழியும் மனைவியின் மனம் நொந்து போகிறதே என்பது பற்றிய சங்கடத்தையும் தாங்கிக் கொண்டு, அந்த வழக்கறிஞர் டில்மனுக்காக வாதாடியே தீருவேன் என்று உறுதி கொண்டாரே, அது எவருடைய மனதிலே முளைத்திடும் தன்னல உணர்ச்சியையும் பொசுக்கிக் கருக்கி விடத் தக்கது. எவரும் வியந்து பாராட்டுவர் அந்த வழக்கறிஞர் மேற்கொண்ட தன்னல மறுப்பினை.

ஆனால் அவரே கண்டு வியந்து பாராட்டும் விதமாக அமைகிறது அவருடைய துணைவியாரின் செயல். என்ன செயல்; அந்த மாதரசிதான் குடும்பத்தைக் கவனிக்கும்படி வற்புறுத்தினார்களே; வணிகக் கோட்டப் பணியை மேற்கொள்ளச் சொன்னார்களே; சிக்கலை ஏற்படுத்தினார்களே; அப்படிப்பட்ட செயலுக்காகவா பாராட்ட முடியும் என்று கேட்கிறாய்!

இல்லை, தம்பி! வெளியே சென்ற மாதரசி, ஒரு மணி நேரம் கழித்த பிறகு வீடு திரும்பினார்கள்; திரும்பியதும், "கண்ணாளா! என்னை மன்னித்துவிடும்! டில்மனுக்காக வாதாடச் சம்மதம் தெரிவித்துவிடும்! எப்படியும் டில்மனைக் காப்பாற்றியாக வேண்டும்'' என்று கூறினார்கள். எதனால் ஏற்பட்டது இந்த விந்தையான மாறுதல் என்று கேட்கிறாய்.

எதனால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பது பற்றி, தம்பி! நீயேதான் சிறிதளவு சிந்தித்துப் பாரேன். நடந்ததை நான் அடுத்த கிழமை தெரிவிக்கிறேன்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.