Monday, 1 August 2016

பிரதோஷ_வேலையில்_பஞ்சபுராணம்_பாடுவோம்

#பிரதோஷ_வேலையில்_பஞ்சபுராணம்_பாடுவோம்
-
பஞ்சபுராணம் பாடுதல் என்ற வழக்கம் முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது. தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. சமயக் குரவர்கள், திருமூலர், சேக்கிழார், திருமாளிகைத் தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன. அவற்றில் #தேவாரம் (7 திருமுறைகள்), #திருவாசகம் (திருக்கோவையார்), #திருவிசைப்பா, #திருப்பல்லாண்டு, #திருத்தொண்டர்_புராணம் (பெரிய புராணம்) ஆகிய ஐந்தில் ஒவ்வொரு பாடல் பாடுவது இன்று வழக்காற்றில் உள்ளது. இதுவே பஞ்சபுராணம் பாடுதல் எனப்படுகிறது.
-
சமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழமை. பஞ்சபுராணம் பாடத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்ல வேண்டும். பஞ்சபுராணம் ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி, “வான்முகில் வழாது பெய்க” என்ற கந்தபுராண வாழ்த்து பாடி நிறைவு செய்வது வழமை.
-
சைவ நெறி பிறழா திருக்கோயில்களில் நாம் சென்று வழிபடுகின்ற நேரங்களில் அங்கே சில காட்சிகளைக் காண்பதுண்டு. பெரிய கோயில்களில் ஆறு கால பூஜைகள், நான்கு கால பூஜைகள், இரண்டு கால பூஜைகள் என வசதிக்கேற்றபடி நடைபெறுவது உண்டு. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தூப, தீப ஆராதனை நடைபெற்ற பிறகு, வேதங்களை இசைப்பார்கள் வேதியர்கள்.
-
அவர்கள் முடித்த பிறகு தமிழ் வேதமெனும் தமிழிசைப் பாக்களை ஓதுமாறு கூறுவார்கள். சிலர் பஞ்சபுராணம் பாடுங்கள் என்றும் கூறுவர். ஓதுவாரும் அவருக்கு தெரிந்த தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை இசைப்பார். அதன் பிறகு வேதியர்கள் தீபாராதனை நிறைவு செய்து விபூதி பிரசாதம் வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.
-
மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் ஐந்து பாடல் பாடி வழிபட்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்திடும் என்பர். தினமும் காலையில் சிவ ஸ்தலத்திற்கு சென்று அபிஷேகம் முடிந்த பின் இதனை பாடுவது சிறப்பு. இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே இந்த சுலப பஞ்சபுராணத்தை நீங்கள் பாரயணம் செய்யலாம்.
-
#விநாயகர்_வணக்கம்

"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே."
-

#திருஞானசம்பந்தர்_அருளிய_தேவாரம்

"தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே."
-

#மாணிக்கவாசகர்_அருளிய_திருவாசகம்

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே."
-

#சேந்தனார்_அருளிய_திருவிசைப்பா

"கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரஎன் கண் குளிர்ந்தனவே."
-

#சேந்தனார்_அருளிய_திருப்பல்லாண்டு

"பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கர அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே."
-

#சேக்கிழார்_அருளிய_பெரியபுராணம்

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்."
-

#அருணகிரிநாதர்_அருளிய_திருப்புகழ்

"ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே."
-

#கச்சியப்ப_சிவாச்சாரியார்_அருளிய_கந்தபுராணம்

"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்."
-

#திருஞானசம்பந்தர்_அருளியது

"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே."
-
"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"
-

-
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
-
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.