Tuesday 29 March 2016

ஜென் கதையும் - ஜென் தத்துவமும்

ஜென் கதையும் - ஜென் தத்துவமும்

ஞானம் பெற்ற பின் என்ன செய்கிறீர்கள்? என்று ஒரு ஜென் குருவிடம் ஒருவர் கேட்டார்.

ஞானம் பெறுவதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தேனோ, அதையேதான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். என்று அவர் கூறினார்

”ஓ. ஞானம் பெறுவதற்கு முன்னால் என்ன செய்வீர்கள்?”

”காலையில் எழுந்ததும் கோடாறியை எடுத்துத் தீட்டுவேன். காட்டுக்குச் செல்வேன். தேவையான மரத்தை வெட்டிப் பிளப்பேன். சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பேன். சமையலுக்குத் தேவையானதை வாங்கி வருவேன்”.

”சரி இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதிலேயே மனம் ஒன்றி அதனையே தியானமாகச் செய்வீர்களா?”

”மனம் ஒன்றாமல் எந்த வேலையைத்தான் செய்ய முடியும்:) மனம் ஒன்றிய நிலையில் தான் முன்பும் எனது வேலைகளைச் செய்தேன். இப்போதும் எனது வேலைகளைச் செய்கிறேன்.”

”அப்படியானால் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?”

அந்த ஜென்குரு விளக்கமாக கூறலானார்.

”முன்பு இப்படி நான் செய்வதை உலக வாழ்க்கையாகவும், இதுதவிர வேறு ஏதோ ஓர் அனுபவநிலையை ஆன்மீக வாழ்வாகவும் எண்ணி வந்தேன்.

ஆனால் இப்போது அப்படி ஒரு பிரிவு கிடையாது. யதார்த்த உலகம் மட்டுமே உள்ளது. ஆன்மீக உலகம் எனத் தனியாக எந்த உலகமும் கிடையாது.”

”ஆன்மீகத்தோடு தொடர்பில்லாத ஒரு சாதாரண மனிதனும் இப்படித்தானே இருக்கிறான்.
அவனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் கிடையாதா?”

”ஆன்மீக உலகம் என்பது ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமே உள்ள உலகம் அல்ல.. ஆன்மீக உலகம் என்பது மனோரீதியான உலகத்தையே குறிக்கிறது. ஆன்மீகவாதிகளுக்கு மனோ உலகம் உண்டு.

சராசரி மனிதனுக்கும் மனோ உலகம் உண்டு. ஆன்மீகவாதி ஆன்மீக அனுபவங்களோடு பற்று உடையவனாக இருப்பான்.

சராசரி மனிதன் இன்பதுன்ப அனுபவங்களோடு பற்று உள்ளவனாக இருப்பான்.

எனக்கு ஆன்மீக உலகமும் கிடையாது.

மன உலகமும் கிடையாது.

அதன் போக்கில் இயங்கும் மன இயக்கம் மட்டுமே உண்டு.

இது ஜென் தத்துவத்தை விளக்கும் கதை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.