*கண்டுபிடிப்பு:* மின்சாரத்தின் இயல்பு (The Nature of Electricity)
*கண்டறிந்தவர்:* பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
*காலம்:*1755
*பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ஒரு மாபெரும் மேதை. அவர் கால் பதிக்காத துறையே இல்லை எனலாம். அவர் ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், அரசியல் தத்துவ வித்தகர், சித்தாந்தி, அரசியல்வாதி, தபால் தந்தி அலுவலர், கண்டுபிடிப்பாளர், சமூகக் காவலர், ராஜதந்திரி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அறிவியல் துறைக்கு அவர் ஆற்றிய அரிய சாதனைகளில் ஒன்று மின்சாரத்தின் இயல்பினைக் கண்டறிந்தது ஆகும். 19ம் நூற்றாண்டில் உலகின் தொழில்துறை வளர்ச்சிக்கு அடிகோலியதில் மின்சாரத்தின் பங்கு மிக அதிகம் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை.
*பெஞ்சமின் ஃப்ராங்க்ளினுக்கு முன்பே மின்சாரம் கண்டறியப்பட்டுவிட்டது. 18ம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் வரை மின்சாரம் என்பது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று விளையாட்டுத்தனமான நிலை மின்சாரம் (Static Electricity) (ஒரு சீப்பை வாரிக் கொண்டு கீழே கிடக்கும் தாளைத் தூக்குதல், வேகமாக வெளியில் சென்று வந்ததும் சட்டையிலிருந்து பட பட வென்ற சத்தம் கிளம்புதல், அருகில் கொண்டு சென்றால் மயிர்க்கூச்செரிதல் போன்றவை நாம் நிலைமின்சாரம் கொண்டு விளையாடியிருக்கக் கூடிய விளையாட்டுகள்!). மற்றொன்று அதிபயங்கரமான அழிவைத் தரக் கூடிய மின்சாரம் (எ.கா. மின்னலில் பாய்வது).
*1746ல் பெஞ்சமின் தான் மின்சாரத்தைத் தனது முக்கியமான ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட விஞ்ஞானியாவார். இவர் தான் முதன்முதலில் நிலைமின்சாரமும், மின்னலில் பாயும் மின்சாரமும் இரு வடிவத்திலிருக்கும் ஒரே பொருள் என்று யூகித்தவரும் ஆவார்.
*ஃப்ராங்க்ளினின் தனது சோதனைகளுக்கு Leyden jars எனப்படும் ஜாடிகளைப் பயன்படுத்தினார்.
*ஒரு கண்ணாடிக் குடுவையின் உள்ளும் புறமும் மின்கடத்தும் உலோகப் பூச்சு பூசப்பட்டிருக்கும். (படத்தில் A மற்றும் B) இந்த ஜாடிகளில் பாதி அளவுக்கு நீர் நிரப்பப்பட்டிருக்கும். ஒரு கம்பி (எலெக்ட்ரோட்) உட்பக்கமாக இந்த B உலோகப்பூச்சைத் தொடும் வண்ணம் வைக்கப்பட்டிருக்கும். ஒரு சிறிய கைப்பிடி கொண்ட மின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தின் மூலம் இந்த ஜாடியின் உட்பூச்சில் மின்சாரத்தைச் சேமித்துக் கொள்ள முடியும்! இது தான் ஆரம்ப கால மின்கலனாகும். தற்போதைய capacitor என்றும் கொள்ளலாம்.
*யாராவது இந்த மேல்பகுதியைத் தொட்டால் மின்சாரம் தாக்குவதை உணர முடியும்! ஃப்ராங்க்ளின் இது போன்ற ஜாடிகளை வரிசையாக வைத்து அதற்குத் தொடர்பை ஏற்படுத்தி விட்டால், அதிக அளவிலான ஆளையே தூக்கி எறியக் கூடிய அளவு மின்சாரம் உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார்.
*1752ல் தனது நண்பர்களுக்கு அப்படி ஒரு சோதனையைச் செய்து காட்ட முயலும் போது அவர் தற்செயலாக ஜாடியின் மேற்பகுதியைத் தொட்டுவிட ஊதா நிறத்தில் ஒளி ரூபத்தில் மின்சாரம் பாய்ந்து சில அடிகளுக்குத் தூக்கிவீசப்பட்டார். இது கிட்டத்தட்ட மின்னல் போலவே இருப்பதைக் கண்டு அதிசயப்பட்டார் ஃப்ராங்க்ளின். ஆக, ஜாடிக்குள் இருக்கும் நிலைமின்சாரமும், வானத்தின் மேகத்திலிருந்து வெளியாகும் மின்சாரமும் ஒன்றே என்று நிரூபிக்க முனைந்தார் ஃப்ராங்க்ளின்.
*ஒரு பெரிய பட்டம் ஒன்றைத் தயாரித்து அதில் ஒரு மெல்லிய மின்கடத்தும் கம்பியை நூலுடன் சேர்த்துப் பயன்படுத்திக் கீழே ஒரு பெரிய இரும்புச்சாவியைக் கட்டினார். இரும்புச்சாவியில் மின்சாரம் வந்து தங்கிவிடும் என்பது அவரது கணிப்பு. அந்த இரும்புச்சாவியை ஒரு பட்டுத் துணியால் கட்டி அதைத் தன் கையில் பிடித்துக் கொண்டார் ஃப்ராங்க்ளின்.
*இதை உருவாக்கிய சில நாட்களில் மின்னல் வெட்டியபடி பெரிய மழை பெய்ய ஆரம்பித்தது. தனது பட்டத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிய ஃப்ராங்க்ளின் அதைப் பறக்கவிட்டார். வரலாற்றில் எழுதி வைத்திருப்பது போல் நிகழவில்லை. அந்தோ பரிதாபம்! பட்டத்தின் நூல் அறுந்து விட்டது! அன்று மிக நல்லதொரு காரியம் நிகழ்ந்திருக்கின்றது. இதே போன்ற ஒரு சோதனையைச் செய்ய முயன்ற ப்ரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் மின்னல் தாக்கிப் பரிதாபமாக உயிரை விட்டுவிட்டார்!
*அன்று ஃப்ராங்க்ளின் கதை என்னவாயிற்று? மின்னல் அடித்ததும், நீல வண்ணத்தில் பட்டத்தின் கயிறு வழியாக மின்சாரம் நீர் போல் இறங்கி வருவதைக் கண்டார் ஃப்ராங்க்ளின். அடுத்த விநாடியே பட்டத்தின் நூல் பிரிந்து அறுந்து விட்டது. ஃப்ராங்க்ளின் மிக மிகக் கவனத்துடன் இரும்புச் சாவியின் அருகில் கையைக் கொண்டு சென்றார். எவ்வாறு அவரை முன்பு மின்சாரம் தாக்கியபோது உணர்ந்தாரோ அதே போன்று இப்போதும் உணர்ந்தார்! மின்னலின் மின்சாரமும், நிலைமின்சாரமும் ஒன்றே என்ற அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.
*அவரது இந்தத் தத்துவத்தின் படியே தான் இடிதாங்கிகள் உருவாக்கப்படுகின்றன. இவரது கண்டுபிடிப்பு பின்னாளில் வோல்டா, ஃபாரடே மற்றும் ஓர்ஸ்டெட் போன்ற பலரும் மின்சாரத்தைச் சார்ந்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தக் காரணமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.