#பித்ரு_சாபம்_நீக்கும் #திருப்பூந்துருத்தி_கோவில்_கிரிவலம்
தஞ்சாவூரில் இருந்து மேலைத் திருக்காட்டுப்பள்ளி வழியாக திருக்கண்டியூரில் இருந்து மேற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பூந்துருத்தி.
ஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக்கொண்டிருந்தனர். 'ஆடி அமாவாசை அன்று, வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம்,
திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடிஅமாவாசை அன்றைய தினத்தில் நீராடி வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் யாரால் இது சாத்தியமாகும்?' என ஏக்கத்தில் பரிதவித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த காசிப முனிவர், 'ஏன் முடியாது?. நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்' என்றார்.
பின்னர் காசிப முனிவர், ஈசனை வேண்டி தவம் இயற்றி, பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் ஈசனை வேண்டி தவம் இருந்தார்.அவரது தவத்தை மெச்சிய ஈசன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு திருக்காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார்.
(அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது). காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன்காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.
இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. அதிலும் ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால்,பித்ரு சாபங்கள் நீங்கும், செல்வ வளம் பெருகும், தடைகள் அகலும், தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். அதனால் ஆண்டுதோறும்
ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது.அன்றைய தினம் காசிப தீர்த்தத்தில் நீராடி, 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழுப் பலனும் கிடைக்கும். மேலும் இத்தலத்தை கிரிவலம் வந்து ஈசனையும், உமையாளையும் வழிபட்டால்,பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல தெய்வத்தின் அருளும் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.