திருநெல்வேலி மாவட்டம் - ஆழ்வார்குறிச்சியை அடுத்த சிவசைலம் என்கிற கிராமத்தில் உலக நல்வாழ்வு ஆசிரமம் உள்ளது. கடந்த ஆண்டு அய்யா. பழ.நெடுமாறன் அவர்கள் தனது துணைவியார் பார்வதி அம்மையாருடன் சென்று 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று திரும்பியதும் தனது அனுபவத்தை தென்செய்தி இதழில் கட்டுரையாகவும் எழுதினார். இதைப் படித்த எனக்குள் ஆர்வம் அதிகரிக்க மேலும் செய்திகளை அய்யாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். மேலும் மயிலாடுதுறை பேராசிரியர் த.செயராமனும் அவரது துணைவியார் சித்ரா அம்மையாருடன் சென்று சில நாட்கள் சிவசைலதில் தங்கி சிகிச்சை பெற்ற அனுபவத்தை எளிமையாக எனக்கு விளக்கினார். இதன் பிறகே கடந்த ஏப்ரல் 10 முதல் 19ம் தேதி வரை நானும், எனது மனைவி மங்கையர்க்கரசியும் சிவசைலத்தில் தங்கி சிகிச்சை பெற்றுத் திரும்பினோம்.
சிகிச்சை என்றால் மருந்து, மாத்திரை, ஊசி என கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இயற்கையான முறையிலேயே சிகிச்சை நடைபெறுகின்றன. இது குறித்து விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.
ஆசிரமத்தில் காலை 6-00 மணிக்கெல்லாம் சூடான பார்லி கஞ்சி, சுக்குமல்லி காப்பி, கருவேப்பிலைச் சாறு குடிப்பதற்குக் கிடைக்கும். 7-00 மணிமுதல் 8-00 மணிவரை யோகா பயிற்சி தருகிறார்கள். பயிற்சிக்குப்பிறகு மண்பட்டியை வயிற்றில் வைத்துக் கொண்டு 20 நிமிடம் படுத்திருக்க வேண்டும். ஈர மண்ணை குழப்பி துணியில் நிரப்பி அதை செவ்வக வடிவில் மடித்து வயிற்றில் வைத்து விடுவார்கள். இதைத்தான் மண்பட்டி என்று சொல்கிறார்கள். அடிவயிற்றுச்சூட்டை அள்ளிக்கொண்டு சென்று விடும் இந்த மண்பட்டி.
காலை 8-00 மணியளவில் மருத்துவர் நல்வாழ்வு (பெயரே நல்வாழ்வு தான்) உங்கள் எடையை பரிசோதிப்பார். பிறகு உங்கள் உடல் நலம் குறித்து விசாரிப்பார். உடன் செவிலியர்கள் இருப்பார்கள். அன்றைய நாளில் உங்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து மருத்துவர் செவிலியரிடம் தெரிவிப்பார். மண் குளியல், வாழை இலைக் குளியல், ஆயில் மசாஜ், முதுகுக் குளியல், முழுத் தொட்டிக்குளியல், இடுப்புக் குளியல், நீராவிக் குளியல் என்று நாள் தோறும் சிகிச்சைகள் மாறிமாறி தொடர்ந்த வண்ணம் இருக்கும்.
மண் குளியல் என்பது ஈர மண்ணை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் பூசி விடுவது. பிறகு 1 மணிநேரம் வெயிலில் நிற்பது. இப்படி நிற்கும் போது உடலில் உள்ள சேறு கொஞ்சம் கொஞ்மாக காய்ந்து விடும். பிறகு உடல் இருக்கும் இந்த மண் குளியலால் உடலில் உள்ள இரத்த ஓட்டம் சரிசெய்யப்படும் தோல் நோய் குணமடையும். உடலில் வெப்பம் குறையும். தோலில் உள்ள வியர்வை அடைப்புகள் அகற்றப்பட்டு வியர்வை தடையின்றி வெளிப்படும். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அழகான இதமான ஒரு குளியல் காத்திருக்கும். குளிப்பதற்கு மின் மோட்டார் போட்டு விடுவார்கள். காய்ந்த மண் உடலில் இருந்து சுலபமாக வெளியேறும் விதமாக அருவியில் குளிப்பது போன்று உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டும்படி அமைத்துள்ள முறை உங்களை நீண்டநேரம் நீராடத் தூண்டும்.
வாழை இலைக்குளியல் என்பது நண்பகல் மொட்டை மாடி வெயிலில் பாய் விரித்து அதன்மேல் வாழைஇலையை பரப்பி, அதன்மேல் படுக்க வைத்து, வாழைஇலை கொண்டு நம்மை மூடி மூச்சுக்காற்றுக்கு தடை ஏற்படாதவாறு கட்டிவிடுவார்கள். 10-15 நிமிடங்களில் வெப்பத்தின் தாக்கத்தினால் உடலில் உள்ள நாட்பட்ட வியர்வைக் கழிவுகள் லிட்டர் கணக்கில் வெளியேறும். இதேபோல வியர்வைக் கழிவுகளை வெளியேற்ற நீராவிக்குளியலும் நடைபெறும்.
இதுபோக சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஆயில் மசாஜ் மற்றும் உடலில் உள்ள வெப்பத்தை எளிதான முறையில் வெளியேற்ற முதுகுக்குளியல், முழுத் தொட்டிக் குளியல், இடுப்புக்குளியல் என்று இயற்கையான இனிமையான தனித்தனி சிகிச்சை முறைகளும் உண்டு.
உணவு முறைகளில் குறிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியது உப்பு, புளிப்பு, காரம் தவிர்த்தும் சமைக்காத இயற்கை உணவுகள் மட்டுமே. காலை 11 மணிக்கு வெல்லம் கலந்த அவல், கூடவே தயிர், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, கொஞ்சம் மிளகுதூள் கலந்த அவல் அதுபோக தேங்காய் துருவல் போட்ட அவல், மற்றும் வாழைப்பழம் கிடைக்கும். இதன்பிறகு நண்பகல் 12-30 மணி, 2-00 மணி, 3-30 மணி, மாலை 4-30 மணி, 5-30 மணிகளுக்கு திரவ உணவு வழங்குவார்கள். கேரட் சாறு, தர்பூசணி சாறு, மோர் + கலந்த சாறு, வெந்தயம் + மோர் கலவை, இளநீர், வில்வ இலைச் சாறு, நெல்லிச்சாறு, சாத்துக்குடி சாறு, பார்லி, சுக்குமல்லி, காபி, மோர் மற்றும் வேகவைத்த உப்பிடாத கேழ்வரகு கூழ் கிடைக்கும். உரிய நேரத்தில் அவரவர்களுக்கு என்ன திரவு உணவு உள்ளது என குறிப்பேட்டில் பார்த்து அதன்படி நமக்கு உரியதை எடுத்துச் சுவைக்கலாம்.
மாலை 4-30 மணிமுதல் 5-30 மணிவரை யோகாப்பயிற்சி நடைபெறும். பிறகு இரவு 7-00 மணிக்கு இரவு உணவு தயாராகிவிடும். இரவு உணவு எப்போதும் பழங்கள் மட்டுமே. தேங்காய் பேரிச்சம்பழம், திராட்சை, கொய்யா, தர்பூசணி, மாம்பழம், பலாப்பழம், அண்ணாச்சி, வெள்ளரி, பப்பாளி, வாழைப்பழம் என அந்தந்த பருவத்தில் கிடைக்கக் கூடிய பழங்களும், மலிவு விலையில் சந்தையில் கிடைக்கும். பழங்களுமாக வைத்திருப்பார்கள். தேவையான அளவு பழங்கள் சாப்பிடலாம். நம்முடைய அறைக்கு கொண்டு வந்தும் சாப்பிடலாம். தேங்காய் துருவலுடன் முளைகட்டிய ஏதாவதொரு பயறும் இரவு உணவில் உண்டு.
இதன்பிறகும் இரவில் பசிக்கும் உணர்வு ஏற்பட்டால், இதனால் தூக்கம் தடைபட்டால், சோர்வு ஏற்பட்டால் வெந்நீரில் சிறிதளவு தேன்கலந்து தருவார்கள். அதைக் கலந்து குடித்ததும் பத்தாவது நிமிடத்தில் பசி மறைந்து, சோர்வு களைந்து தூக்கம் உங்களைத் தழுவிச் செல்லும்.
சிகிச்சை பெறும் அனைத்து நாட்களிலும் காலை, மாலை கட்டாயம் எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். எனிமா என்பது டியூப் வழியாக ஆசனவாயில் தண்ணீரை செலுத்தி மலக்குடலில் இருகிக் கிடக்கும் நாட்பட்ட மலக்கழிவுகளை வெளியேற்றும் இயற்கையான முறையாகும். இதனால் மலக்குடல் குளிச்சியடைந்து மலச்சிக்கல் தொந்தரவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சிகிச்சை நாட்களில் மூன்று முதல் 5 நாட்கள் வரை உண்ணாநோன்பு (பாஸ்டிங்) இருக்க வேண்டி வரலாம். இந்த நாட்களில் உங்கள் உடலிலிருந்து நிறைய நாட்பட்ட மலக்கழிவுகள் வெளியேறுவதைக் கவனிக்கலாம். இப்படி 10 நாட்கள் சிகிச்சை முடிந்து வெளியேறும்போது உங்கள் உடலில் புதுரத்தம் ஓடும் உணர்வை உங்களால் கவனிக்க முடியும். காலை, மாலை யோகாப் பயிற்சியின் மூலமாக வளையாத உடல் நாணலாய் வளையும் வியப்பைக் காணலாம்.
தங்கும் அறை இருபது உள்ளன. அறை வாடகை ரூ.200, 400, 600 என மூன்று தரத்தில் உள்ளன. 600 ரூபாய் கொண்ட அறையில் இருவர் தங்கினால் முதல் நபருக்கு ரூ.600ம் இரண்டாம் நபருக்கு ரூ.300ம் என 900 ரூபாய் நாளொன்றுக்கு வசூலிக்கிறார்கள். இந்த நடைமுறையைத்தான் மற்ற அறைகளுக்கும் கடைபிடிக்கிறார்கள். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் இவ்விரு மாதங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே மற்ற மாதங்களில் செல்வது சிறப்பு. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆசிரமம் அமைந்திருந்தாலும் கோடைக் காலங்களில் கடும் வெப்பத்தை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் கோரைச்சித்தர் வாழ்ந்த மலைக்கு நடந்தே அழைத்துச் செல்கிறார்கள். இந்தப் பயண அனுபவம் மிகவும் சுவையானது என சென்று வந்தவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
யோகப் பயிற்சியும், இயற்கை உணவும் சாத்தியமாகிவிட்டால் நாம் எப்போதும் இனிமையாக வாழலாம். எனவே உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட, ஒருமுறை நல்வாழ்வு ஆசிரமத்திற்கு சென்று தங்கி வருவது நல்லது. 10 நாட்களில் எனக்கும் என் மனைவிக்கும் சிகிச்சைக்கான மொத்த செலவு ரூ.12,500 மட்டுமே. (இதில் அறை வாடகை மட்டும ரூ.9000) தென்னையும், பழமரத்தோப்புகளுமாக பூத்துக்குலுங்கும் இயற்கை அழகில் அமைந்துள்ள காற்றின் தீண்டலும், பறவைகளின் விதவிதமான மொழிகளையும் தவிர வேறெதையும் உணரமுடியாத, கேட்க முடியாத இனிமையான சூழலை கண்டு களித்து வாருங்கள்... சென்னையிலிருந்து தென்காசி சென்று அங்கிருந்து ஆழ்வார்குறிச்சிக்குச் சென்றால் அடுத்த நான்காவது கி.மீ. தூரத்தில் உள்ளது, சிவசைலத்தில் நலவாழ்வு ஆசிரமம்.
முகவரி :
மருத்துவர். இரா.நல்வாழ்வு, பி.என்.ஒய்.எஸ்.,
உலக நல்வாழ்வு ஆசிரமம்,
சிவசைலம் - 627412, ஆழ்வார்குறிச்சி (வழி), திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி : 04634 - 283484, 94430 43074, 9360 869 867
www.universalgoodlife.com, Email :
goodlifeashram@yahoo.co.in
****
*நண்பர் ஒருவரின் பதிவிலிருந்து*