Wednesday 3 February 2016

நீங்கள் வாங்குவது ஆர்கானிக் தானா?

நீங்கள் வாங்குவது ஆர்கானிக் தானா?
கண்டறிய எளிய வழிகள்

ஆரோக்கியமான ‘ஆர்கானிக்’ உணவுப்பொருட்கள்

தி.நகரில் உள்ள ஒரு பெரிய கடையில், கருப்பட்டிக் காபிக்கு மிகப் பெரிய க்யூ. விலை அதிகம் என்றாலும், பலரும் காத்திருந்து அதை வாங்கிக் குடித்தனர். ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துவது ஒரு ஸ்டேட்டஸ் என்ற அளவுக்கு வந்துவிட்டதாலோ என்னவோ, முன்பு கவனிப்பாரின்றிக் கிடந்த கருப்பட்டி விலைகூட பல மடங்கு ஏறிவிட்டது.

பாலீஷ் செய்யப்பட்ட அரிசி, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள், ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் என கவனத்தைச் செலுத்திய நம் மக்கள், இப்போது கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், பனை வெல்லம், கருப்பட்டி, பூச்சிக்கொல்லி ரசாயனம் கலக்காத ஆர்கானிக் உணவுப் பொருள்கள் என்று தேடித்தேடி வாங்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், தெரு முனைக் கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை ஆர்கானிக், பாரம்பரியப் பொருட்களுக்கு மவுசு அதிகரிக்கிறது.

இப்படி, தெருவுக்குத் தெரு ஆர்கானிக் பொருட்கள் விற்பனை நடப்பதால், எது உண்மையான ஆர்கானிக் என்றே தெரிவதுஇல்லை. ஆர்கானிக் என்றால், செழுமையே இல்லாமல் இருக்கும் என்ற எண்ணமும் உள்ளது. ரசாயனம் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் காய்கறிகள் என்பதால் விலையும் மிக அதிகம் என்று சொல்லி அதிக விலைக்கு விற்கின்றனர். இந்த கடைகளில் விற்கப்படுவது உண்மையான ஆர்கானிக் பொருட்களா, ஆர்கானிக் பொருட்களை வாங்குவது எப்படி என்று பலருக்கும் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.

ஆர்கானிக் பொருட்களை கண்டறிவது எப்படி?

# வடிவம்:

இயற்கையாக இருக்கும் எதுவும் ஒரே அளவில், ஒரே நிறத்தில் இருக்காது. வடிவத்தில் மாறுபடும். சாக்கில் போட்டு கொண்டுவரும்போது, இடிபட்டு, நசுங்கி, அழுக்காகத்தான் வரும். காய்கறிகள், பறித்து ஒரு நாளுக்குள் சிறிது சுருங்கித்தான் போகும். வெண்டைக்காய், கத்திரிக்காயில் 20 சதவிகிதம் பூச்சிகள் இருக்கும். 10 மாம்பழங்கள் வாங்கினால், இரண்டில், வண்டு இருக்கத்தான் செய்யும். எனவே, இத்தகைய பொருட்களை பார்த்து வாங்கிப் பயன்படுத்தலாம். பூச்சி, புழு எதுவும் இல்லை என்றால், அதில் பூச்சி மருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பூச்சி, புழுக்களே பயந்து ஒதுங்கிய காய்கறிகளின் அழகைப் பார்த்து வாங்குவது ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

# சுவை:

பாலிஷ் செய்யப்பட்ட அரிசியால் செய்யப்பட்ட சாதத்தை மறுநாள் வைத்தால், நொதிந்துபோய், ஒருமாதிரியான வாடை வரும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசியில் சமைத்தால், சீக்கிரத்தில் கெடாது. பருப்பில் செய்யும் குழம்பு மணமும் சுவையும் வித்தியாசமாக இருக்கும். எண்ணெய், உப்பு, வெல்லத்தில்கூட வித்தியாசம் தெரியும். ஆர்கானிக் உணவைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களால் இதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். பழைய சோற்றை மறுநாள் சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். எனவே, ஆர்கானிக் என்று சொல்லும் பொருளை ஒருமுறை வாங்கி சமைத்துப் பார்த்து, ருசியின் வேறுபாடு தெரிந்தால் மட்டும் வாங்கலாம். நிறைய சமையல் நிபுணர்கள் ஆர்கானிக் பொருட்கள் மூலம் சமைக்கப்படும் உணவின் சுவை, நிறம், ஃபிளேவர் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். எனவே, சமைத்துப் பார்க்கும்போதுதான் அதன் வித்தியாசத்தை உணர முடியும்.

பழங்கள், காய்கறிகள், கீரைகள் பளிச் நிறத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. அப்படி நம்மை வசீகரிக்கத்தான் ரசாயன உரம் கலக்கப்படுகிறது.

ஆர்கானிக் காய்கறி, பழங்கள் ஒரு சில நாட்கள் மட்டும்தான் வைத்திருக்க முடியும். இதுவே பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள், வெந்தயம், மற்றும் பழங்கள் என 70 சதவிகிதம் காய்கறி, பழங்களை நாமே வீட்டில் பயிரிட முடியும். பயிரிட்ட 21 நாட்களில் கீரைகளைப் பறித்துக் கொள்ளலாம். தோட்டம் போட விரும்புபவர்களுக்கு விதைகளையும் ஆலோசனைகளையும் தமிழக அரசு தோட்டக்கலைத் துறையே தருகிறது.

ஆர்கானிக் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளைத் தேடிச் சென்று மொத்தமாக வாங்கலாம். தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இயற்கை விவசாயிகளின் பட்டியலை சேகரித்து அவர்களிடம் வாங்கலாம். இயற்கை முறையில் விளைவிக்கும் விவசாயிகள், உள்ளூர்ச் சந்தை மற்றும் விவசாயிகள் சந்தைக்கு சென்று விற்பனை செய்கின்றனர். இவர்களைக் கண்டறிந்து பொருட்களை வாங்கலாம். கிராமங்களில் நடக்கும் வாரச்சந்தைகளுக்குச் சென்றாலே, இயற்கை விவசாயப் பொருட்களை வாங்க முடியும்.

இயற்கையோடும் இயற்கை விவசாயத்தோடும் இணைவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு வசப்படும்.

நன்றி - ஆனந்து, ஒருங்கிணைப்பாளர், இயற்கை விவசாயிகள் தந்தை

நாம் வாங்கப்போவது ஆர்கானிக் பொருளா என பரிசோதிக்க எளிய வழிமுறைகள்?

# நேர்த்தியான, அழகான காய்கறிகளாக கண்களைக் கவர்ந்தால், அவற்றை சந்தேகப்பட்டுப் பரிசோதிப்பது நல்லது.

# புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை இதற்கே உரிய தனித்துவமான வாசம் வருகிறதா என முகர்ந்து பார்க்கலாம். மற்ற கீரைகளில் ‘பச்சையம்’ வாசம் வரவேண்டுமே தவிர, மருந்து வாசனை வரக் கூடாது

# காய், கனிகளில் அதற்கென வரும் வாசம் வருகிறதா எனப் பரிசோதியுங்கள். மிகவும் தளதளவென, பளபளப்பாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

# தக்காளி ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டும் சுருங்கினால், அது ஆர்கானிக். அதுபோல வெண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் சரிபார்த்து வாங்கவும்.

# கோணலாகவும் சுருக்கமாகவும் இருந்தாலும் முகர்ந்து பார்த்துத் தேர்ந்தெடுப்பது நல்லது.

# சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக். அளவில் பெரிதாக அதிகமான எடையில் நிற்பது ஆர்கானிக் அல்ல.

# கொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. சாம்பார், கூட்டிலோ பருப்பு கரைந்து மாவாகிவிடக் கூடாது. ஆர்கானிக் பருப்புகள் நன்கு வெந்து வெடித்திருப்பது போல காணப்படும். ஆனால், கரைந்துபோகாது.

# அரிசியைக் கைவிட்டு அள்ளும்போது மாவு போல கைகளில் பட்டால், அவை தீட்டப்பட்ட அரிசி அல்ல. மில்களில் அரிசி தீட்டும்போது எண்ணெய் சேர்ப்பதால், மாவு போல கைகளில் ஒட்டாமல் இருக்கும். இதுவே தீட்டப்படாத அரிசி கைகளில் வெள்ளை மாவாக ஒட்டிக்கொள்ளும்.

# அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்களில் ஓரிரண்டு வண்டுகள் இருந்தால், அந்த உணவைத் தாராளமாக வாங்கலாம். அதை சுத்தப்படுத்தி நம் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.

# சிறுதானியம் ‘பளீர் வெள்ளை’யில் இருக்கக் கூடாது. ஏனெனில், அதில் பச்சரிசி, ஜவ்வரிசி குருணை கலக்கப்பட்டிருந்தால், பளிச்சென இருக்கும். சிறிது பழுப்பு நிறத்தில் இருக்கும் சிறுதானியங்களைத் தேர்ந்தெடுங்கள்.

# அருகில் இருக்கும் மார்க்கெட்டோ, ஆர்கானிக் கடையோ, எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்று கேள்விகளை கேட்கும் பழக்கத்தை தொடங்குங்கள். எங்கிருந்து வருகிறது என தெரியாது என சொல்பவரிடம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

# பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, சிறிய வியாபாரிகளிடம் காய், கனிகளைப் பரிசோதித்து வாங்குவதே சரி.

# சீசன் பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். மார்ச் முதல் ஜூன் வரைதான் மாம்பழ சீசன். செப்டம்பர், அக்டோபரில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கக் கூடாது.

# அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்குங்கள். சீசன் அல்லாத காலங்களில் விளையக்கூடிய காய், கனிகள் அனைத்து சீசன்களிலும் விற்கப்பட்டால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதே சரி. வாழை மட்டுமே அனைத்து சீசன்களில் கிடைக்கும்.

# தேனை வாயில் வைத்தால், சிறு துவர்ப்புச் சுவை வரவேண்டும் அதுதான் ஆர்கானிக். தேனுக்கு காலாவதி தேதியே கிடையாது. ஆனால், தற்போது கடைகளில் வேகவைத்த தேனை அனுப்புகின்றனர். அதாவது சர்க்கரை, வெல்ல பாகைச் சேர்க்கின்றனர்.

# நாட்டு சர்க்கரை அடர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அடிநாக்கும், நடுநாக்கும் நாட்டு சர்க்கரையைச் சாப்பிட்ட பின் எரியக் கூடாது.

# கருப்பட்டி, கருப்பாக இருக்க வேண்டும். பளபளப்புடன் மின்னக் கூடாது. மின்னுவதால் அதனுள் சர்க்கரையோ, கற்கண்டோ சேர்ந்து இருக்கலாம். கருப்பட்டி எளிதில் உடையக் கூடாது. சிறுகசப்புச் சுவை இருக்கும். அதிகமாக இனிக்காது.

நன்றி - - ராஜ முருகன், ‘நல்லசோறு’ இயக்குனர்

எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.

# உப்பு:

இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்பு தான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இது தான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவை தான். ஆனால், அயோடின் சத்து உப்பில் செயற்கையாக சேர்க்கப்பட்டால் பிரச்னை தான்.

# ரீபைண்ட் ஆயில்:

செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்கு பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய் தானே. அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இது தான் நிபுணர்கள் கருத்து.

# வெண்ணெய், நெய், வனஸ்பதி:

மூன்றுமே கொழுப்பு சார்ந்தது தான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால் தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் தான் மிக நல்லது.

# உலர்ந்த தானியங்கள்:

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள் தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு , தானியங்கள் தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்பு தான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

# பாலிஷ் அரிசி:

அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம் தான் மிக நல்லது என்பது இப்போது தான் பலருக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில் தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

# சந்தை காய்கறி, பழங்கள்:

உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக் கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம்; விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல் தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.

# பால்:

பால் உடலுக்கு நல்லது தான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்பு சத்து நீக்கப் பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில் தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. எனவே முடிந்தவரை பால் உபயோகத்தை குறைத்துக்கொள்வது நல்லது.

# கோலா, காபி, டீ:

இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கது தான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள் தான்.
மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.

# சர்க்கரை:

சர்க்கரைக்கு பதில், வெல்லத்தை பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.

ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணை தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.