Wednesday 24 June 2015

வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்

ஒருநாள் புத்தர் தனது மாணவர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார்.
மாணவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தனர்.
முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவன் புதியவன்; ஒரு நாட்டின் மன்னன். தரையில் உட்கார்ந்து பழக்கமில்லாதவன். உடல் நெளிந்தும், கால்களை மாற்றியும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். தான் படும் சிரமத்தை, புத்தர் அறிந்து விடக் கூடாதென்பதற்காக, அதை மறைக்கவும் முயற்ச்சித்தான். இதனை ஜாடையாக புத்தரும் கவனித்தார். அவர் மற்றொன்றையும் பார்த்தார். அவனுடைய கால் கட்டைவிரல் ஆடிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். அந்த ஆட்டம் அவனை அறியாமல் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டார்.
பின் தனது பேச்சை நிறுத்தினார்.
“உன் காலின் கட்டைவிரல் ஆடிக் கொண்டிருப்பதைக் கவனித்தாயா?” என்று மன்னனைப் பார்த்து கேட்டார்.
மன்னன் அப்பொழுதுதான் தன் கால் கட்டை விரல் ஆடிக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.
அவன் பார்த்தவுடன் கட்டை விரலின் ஆட்டம் நின்று விட்டது.
அங்கிருந்த அனைவரும் “என்ன ஆச்சரியம்!” என்று வியந்தனர்.
“இப்பொழுது கட்டைவிரலின் ஆட்டம் நின்றுவிட்டது! ஏன் தெரியுமா?” அனைத்து மாணவர்களிடமிருந்து தனது கேள்விக்குப் பதிலை எதிர்பார்த்தார்.
ஒருவரிடமிருந்தும் பதில் வராமல் போகவே, அவரே பேச ஆரம்பித்தார். “அவன் தனது கால் விரலின் ஆட்டத்தை உற்றுப் பார்த்தவுடன் அதாவது விழிப்புணர்வுடன் (கவனத்துடன்) பார்த்தவுடன் கட்டைவிரலின் ஆட்டம் நின்றுவிட்டது! விழிப்புணர்வு மட்டும் இருந்தால் போதும். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்!” என்றார் புத்தர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.