வெளிநாடு ஒன்றில் நடந்ததாகச் சொல்லப்படும் வேடிக்கையான ஒரு சம்பவம்.
இரவு நேரம். அந்தப் பெரிய வீட்டில் திருடன் ஒருவன் நுழைந்தான். ஒரு பக்கம் படுக்கை அறை. மற்றொரு பக்கம் பணப்பெட்டி இருக்கும் அறை. இதைச் சுலபமாக அடையாளம் கண்டு கொண்ட அந்த அனுபவசாலி திருடன், மெள்ள பணப்பெட்டி இருக்கும் அறைக்குள் நுழைந்தான். பீரோவை நெருங்கினான். அதன் கைப்பிடியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது!
'இந்த பீரோவைத் திறக்க நீங்கள் அதிகம் சிரமப்பட வேண்டாம். ஏனெனில், இது பூட்டப்படவே இல்லை. கைப்பிடியைத் திருகினால் போதும், பீரோ திறந்து கொள்ளும்!' என்ற அந்த வாசகத்தைப் படித்தவன் குஷியானான். 'ஆஹா... வேலை சுலபமாக முடிந்து விடும் போல் இருக்கிறதே!' என்று உற்சாகம் அடைந்தான்.
மீண்டும் ஒரு முறை படுக்கை அறையை நோட்டம் இட்டான். எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
'பணத்தை அள்ளிச் செல்வது ரொம்பவே சுலபம்!' என்ற எண்ணத்துடன், பீரோவின் கைப்பிடியை மெள்ள திருகினான். அவ்வளவுதான்!
உயரே இருந்த கனமான மண் மூட்டை ஒன்று 'பொத்'தென்று அவன் தலையில் விழுந்தது. வலியில் அலறினான் திருடன். இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டனர். எல்லா விளக்குகளும் எரிந்தன. அபாயச் சங்கும் ஒலித்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்தனர். விளைவு... காவல்கள் வந்து, திருடனைப் பிடித்துச் சென்று சிறையில் தள்ளினர். அங்கே... அந்தத் திருடன் அலுத்துக் கொண்டான்:
''ச்சே... இப்படியெல்லாம் செஞ்சாங்கன்னா, நான் எப்படி இந்த மனிதர்களை நம்ப முடியும்?''
நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள்!
திருடன், மற்றவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையா முக்கியம்? இவன்மீது மற்றவர்கள் வைக்கிற நம்பிக்கைதானே முக்கியம்!
பக்தன் ஒருவன், கோயிலில் தரிசனம் முடிந்து கர்வத்துடன் திரும்பிக் கொண்டிருந்தான்.
எதிரே வந்த பெரியவர் ஒருவர், ''இந்த அளவுக்கு தலை நிமிர்ந்து வருகிறாயே... என்ன காரணம் என்று கேட்டார். அவன், ''நான் கடவுளை நம்புகிறேன்!'' என்றான்.
உடனே, ''அது முக்கியம் இல்லையே!'' என்றார் பெரியவர்.
''எனில்... வேறு எதுதான் முக்கியம்?'' என்று கேட்டான் பக்தன்.
அந்தப் பெரியவர் அமைதியாக பதில் சொன்னார்: ''கடவுள், உன்னை நம்புகிறாரா என்பதே முக்கியம்!''
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.