Monday, 5 September 2016

மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

🌿 மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

🌿 சுவாமி விவேகானந்தர் 🌿

🌿 ஒரே மரத்தில் இரண்டு பறவைகள் இருக்கின்றன. ஒன்று மேல்கிளையிலும் மற்றொன்று கீழ்க் கிளையிலும் அமர்ந்துள்ளன. மேல்கிளைப் பறவை அமைதியாக சாந்தமாக, கம்பீரமாக தனது மகிமையில் தானே மூழ்கி இருக்கிறது. கீழ்க்கிளைப் பறவை கிளைக்கு கிளை தாவி பறந்து இனிப்பும் கசப்புமான பழங்களை மாறிமாறி உண்டு இன்பத்தையும் துன்பத்தையும் மாறிமாறி அனுபவித்துக் கொண்டிருக்கிறது .

சில காலத்திற்குபிறகு அது மிகவும் கசப்பான ஒரு பழத்தைத் தின்ன நேர்கிறது, அதனால் வெறுப்புற்று மேலே உள்ள மற்ற பறவையைப் பார்க்கிறது. அந்தப் பறவையின் சிறகுகள் தங்கமயமாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. அது இனிப்புப் பழங்களையும் சாப்பிடுவதில்லை,கசப்பு பழங்களையும் சாப்பிடுவதில்லை; அதற்கு இன்பமும் இல்லை துன்பமும் இல்லை. அது அமைதியாக தனக்குள் மூழ்கி இருக்கிறது தன்னைத் தவிர வேறு எதையும் அது காண்பதில்லை.

கீழ்க்கிளைப் பறவை இந்த நிலைக்கு ஏங்குகிறது. ஆனால் சீக்கிரமே இதை மறந்து மறுபடியும் இனிப்பு பழங்களைச் சாப்பிட ஆரம்பிக்கிறது. சிறிதுகாலம் கழிகிறது. விஷமாகக் கசக்கின்ற ஒரு பழத்தை மறுபடியும் தின்கிறது வெறுப்படைந்து மேலே பார்க்கிறது, மேல்கிளைப் பறவையின் நிலையைக் அடைய முயல்கிறது.

மறுபடியும் அதை மறக்கிறது, பழைய விஷயங்களில் ஈடுபடுகிறது மறுபடியும் மேலே பார்க்கிறது. இவ்வாறே நடந்து கொண்டிருக்கிறது. கடைசியில் மேல்கிளைப் பறவைக்கு மிக அருகில் சென்றுவிடுகிறது. அதன் சிறகொளி பிரதிபலித்து தன்மீது தழுவிச் செல்வதைக் காண்கிறது.

அப்போது கீழ்க்கிளைப் பறவை ஒரு மாற்றத்தை உணர்கிறது. தான் கரைந்து மறைந்து விடுவதை போல் அதற்குத் தோன்றுகிறது. அது இன்னும் பக்கத்தில் போகிறது. அப்போது முழுவதும் கரைகிறது, இறுதியில் இந்த அற்புதமான மாற்றத்தைப் புரிந்து கொள்கிறது. மேல்கிளைப் பறவையின் அதே தோற்றம் கொண்ட நிழலே, அதன் பிரதிபலிப்பே கீழ்க்கிளைப் பறவை அடிப்படையில் எப்போதுமே அது மேல்கிளைப் பறவையாகவேதான் இருந்து வந்திருக்கிறது.

கீழ்க்கிளையின் அந்தச் சின்னப்பறவை இனிப்புகசப்புப் பழங்களைச் சாப்பிட்டதும் மாறிமாறி இன்ப துன்பங்களை அனுபவித்ததும் எல்லாம் வெறும் கற்பனை, வெறும் கனவு உண்மையான பறவை மேல் கிளையில் எப்போதுமே அமைதியாக சாந்தமாக கம்பீரமாக மகிமைமிக்கதாக கவலைகளுக்கு அப்பாற்பட்டதாக, துன்பங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கிறது,

மேல் பறவைதான் பரமாத்மா , பிரபஞ்சத்தின் தலைவன் ; கீழ்ப்பறவை ஜீவாத்மா மனிதன் அவன்தான் இந்த உலகின் இனிப்புகசப்புப் பழங்களைத் தின்று கொண்டிருக்கிறான். அவனுக்கு அவ்வப்போது ஒரு பலத்த அடி விழுகிறது. சிறிது நேரத்திற்குப் பழங்களைத் தின்பதை விட்டுவிட்டு அறியாத கடவுளை நாடுகிறான். அப்போது வருகிறது ஒளிவெள்ளம். இந்த உலகம் வெறும் பகட்டுக் காட்சி என்பதை அவன் உணர்கிறான் ஆனால் மறுபடியும் புலன்கள் அவனைக் கீழே இழுக்கின்றன. மறுபடியும் அவன் உலகின் இனிப்புகசப்புப் பழங்களை முன்போலவே தின்னத் தொடங்குகிறான் மீண்டும் வருகிறது ஒரு பேரிடி. அவனது இதயம் திறக்கிறது, தெய்வீக பேரொளி அங்கே நிறைகிறது .

இவ்வாறு அவன் மெள்ளமெள்ள இறைவனை நெருங்குகிறான். நெருங்க நெருங்க பழைய அவன் கரையத் தொடங்குகிறான் . போதிய அளவு அருகில் வரும்போது தானே அந்த இறைவன் என்பதை உணர்கிறான் .
பிரபஞ்சத்தின் உயிர் என்றும் அணுவிலும் சூரியர்களிலும் சந்திரர்களிலும் இருப்பவன் நானே என்றும் . அவர் நமது அந்தராத்மா இன்னும் சொல்லப்போனால் நீயே அது என்று முழங்குகிறான்.நானே பரமாத்மா என்பதை உணர்கிறான்

🌿 மனிதன் அடிப்படையில் தெய்வீகமானவன். நாம் ஒவ்வொருவருமே பூமியில் பிறந்துள்ள கடவுள்தான் . நம் காலின் கீழ் ஊர்ந்து செல்லும் சாதாரணமான புழு முதல் பயபக்தி யோடும் ஆச்சரியத்தோடும் நாம் போற்றுகின்ற தெய்வங்கள் வரை எல்லோரும் ஒரு இறைவனின் வெளிப்பாடுகளே.

🌿 சுவாமி விவேகானந்தர் 🌿

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.