Wednesday 14 March 2018

சிரியுங்கள்

*_சிரிப்பு என்னும் உயர் நிலை_*

ஒ ருவித பரவச நிலையில் இருந்தார் குரு. குருவின் தெய்வீக அனுபவத்தை தெரிந்து கொள்ள இதுவே சரியான நேரம் என்று சீடர்கள் நினைத்தனர்.
சீடர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குரு தனது அனுபவத்தை கூறத்தொடங்கினார்.
“கடவுள் என்னை முதன் முதலில் ‘மகிழ்ச்சி’ என்னும் இடத்துக்கு கைபிடித்து அழைத்துச் சென்றார். அங்கே நான் பல வருடங்கள் தங்கியிருந்தேன்.”
திடீரென்று ஒருநாள் கடவுள் வந்து என்னை ‘துயரம்’ என்னும் இடத்துக்கு கூட்டிச் சென்றார். காரணமற்ற பற்றுதல்களிலிருந்து என் மனம் முழுமையாக விடுதலை பெறும் வரையிலும் நான் அங்கேயே இருந்தேன். அங்குதான் ‘அன்பு’ என்னும் கரங்களுக்குள் நான் அகப்பட்டுக்கொண்டதை உணர்ந்தேன். அந்தக் கரங்களின் தீப்பிழம்புகள் எனக்குள் எஞ்சியிருந்த ‘நான்’ என்னும் அழுக்கு படலத்தை எரித்து சாம்பலாக்கியது.
அதன்பின் கடவுள் என்னை ‘அமைதி’ என்னும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே வாழ்வு–மரணம் என்னும் புதிர்கள், என் கண்களின் முன்னால் தம்மை வௌிப்படுத்தி நின்றன.
“அதுதான் உங்கள் நெடும்பயணத்தின் இறுதி நிலையா?” சீடர்கள் கேட்டார்கள்.
“இல்லை” குரு தொடர்ந்து பேசினார்...
கேள்விகள்
1.குரு தன் சீடர்களிடம் என்ன சொல்லியிருப்பார்?
2.இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன?
விடைகள்
1.ஒருநாள் கடவுள் என்னிடம் சொன்னார்: “இன்று நான் உன்னை புனிதக் கோவிலின் கருவறையான என் இதயத்துக்குள் அழைத்துப் போகிறேன்” என்றார். தொடர்ந்து ‘பெருஞ்சிரிப்பு’ என்னும் இடத்துக்கு நான் கொண்டு செல்லப்பட்டேன்’.
2.சிரிக்கும் போது நீ மகிழ்ச்சியடைகிறாய். நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது உன்னிடம் வெறுப்பு, வன்மம், பொறாமை.. என்று எந்தவிதமான எதிர்மறை உணர்வுகளுமே இருக்காது. எதிர்மறை எண்ணங்கள் இல்லாத இடத்தில் அன்பும், பரிவுமே ஆட்சி செய்யும். இதுதான் ஆன்மிக வாழ்வின் இறுதி நிலை. இதை ஒருவர் மிக எளிதாக எட்டிவிடலாம். எப்படி? சிரியுங்கள், மனம் விட்டு சிரியுங்கள், சிரித்துக் கொண்டே இருங்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.