மன இறுக்கமும் ஓய்வும்.
-------------------------------------------
🔥 இப்போது ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மனோவசியம் செய்பவர்கள், ஒரு அடிப்படை விதியைக் கண்டு பிடித்துள்ளார்கள். அவர்கள் அந்த விதியை, எதிரிடை விதி என்று அழைக்கிறார்கள்.
ஒன்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் நீங்கள் ஏதாவது செய்வதற்கு, நீங்கள் கடின முயற்சி மேற்கொண்டால்,
வெறுமனே அதற்கு எதிரான முடிவுதான் ஏற்படும்.
🔥 இது, நீங்கள் ஒரு சைக்கிளை முதன்முதலாக ஓட்டுவதற்கு கற்றுக் கொள்வதைப் போன்றது.
அப்படிக் கற்றுக் கொடுக்கும்போது நீங்கள் ஒரு அமைதியான, போக்குவரத்து இல்லாத சாலையில், அதிகாலையில் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.
🔥 அப்போது நீங்கள் சாலையின் ஓரத்தில் சிவப்பு நிறத்தில் நிறுத்தப் பட்டுள்ள மைல்கல்லைப் பார்க்கிறீர்கள். சாலையோ அறுபது அடி அகலம் இருக்கும்.
ஆனால், அந்த மைல்கல் மிகவும் சிறியதாக சாலை ஓரத்தில் நிற்கும்.
ஆனால், நீங்கள் அதைப் பார்த்து பயப்படுவீர்கள். நீங்கள் சைக்கிளில் அந்த மைல்கல்லில் மோதிவிடுவோமோ என்று பயப்படுவீர்கள்.
இப்போது நீங்கள் அந்த அறுபது அடி சாலையை மறந்துவிடுவீர்கள். உண்மையில் கண்ணைக் கட்டிக் கொண்டு சென்றாலும்கூட அந்த மைல்கல்லில் மோதுவதற்கு அதிக சந்தர்ப்பம் கிடையாது. ஆனால் இப்போதோ, கண்களை திறந்து கொண்டு இருக்கும்போதே அந்த அறுபது அடி சாலை மறக்கப் பட்டு உங்களது மனம் அந்த மைல்கல்லில்மீது குவிக்கப்பட்டு விட்டது.
🔥 முதலில் அதன் சிவப்பு நிறம் மனதில் குவிகிறது. எனவே நீங்கள் அதைப் பார்த்து பயப்படுகிறீர்கள். எனவே அதன்மீது மோதுவதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு சைக்கிளின் மீது இருப்பதையும் மறந்துவிடுவீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள்.
இப்போது உங்களுக்கு உள்ள ஒரே பிரச்சனை அந்த மைல்கல்லில் மோதாமல் இருப்பது எப்படி என்பதுதான். இல்லையெனில் அதன்மீது மோதி உங்களது கை காலை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
🔥 இப்போது நீங்கள் அந்த மைல்கல்லின் மீது மோதுவது தவிர்க்கமுடியாமல் போய்விடும்.
நீங்கள் நிச்சயம் அந்த கல்லின்மீது மோதிவிடுவீர்கள். அதன்பிறகு நீங்களே,
நான் இந்தக் கல்லின் மீது இடிக்காமல் இருப்பதற்கு கவனமாக முயற்சி செய்தேன். என்றாலும் தோற்று விட்டேன்... என்று நினைத்து ஆச்சரியப்படுவீர்கள்.
🔥 உண்மையில் நீங்கள் கடினமாக முயற்சி செய்ததால்தான் நீங்கள் அந்த கல்லின்மீது மோதினீர்கள். நீங்கள் அதை நெருங்கி வர வர, அதன்மீது மோதாமல் இருப்பதற்கு நீங்கள் கடினமாக முயற்சி செய்தீர்கள்.
ஆனால், நீங்கள் எந்த அளவுக்கு அந்த கல்லை தவிர்த்துவிட முயற்சி செய்தீர்களோ அந்த அளவுக்கு உங்களது மனம் அதன்மீது குவிந்துவிட்டது.
அது ஒரு மனோவசிய சக்தியாக ஆகிவிட்டது.
அது உங்களை மனோவசியம் செய்துவிட்டது.
அது ஒரு காந்தம் போல் ஆகிவிட்டது.
🔥 இது வாழ்க்கையின் ஒரு அடிப்படை விதி.
அநேக மக்கள், அநேக விஷயங்களை தவிர்ப்பதற்கு விரும்புகின்றனர்.
ஆனால், அவர்கள் அதே விஷயங்களில் விழுந்து விடுகிறார்கள்.
அதிக முயற்சி செய்து, ஏதாவது ஒன்றை தவிர்த்துவிடப் பாருங்கள். நிச்சயமாக நீங்கள் அதே குழியில் விழுந்துவிடுவீர்கள். அதை நீங்கள் தவிர்க்கமுடியாது.
அதை தவிர்ப்பதற்கான வழி அது அல்ல.
🔥 ஓய்வாக இருங்கள்.
கடின முயற்சி செய்யாதீர்கள். ஏனெனில் ஓய்வாக இருப்பதன் மூலமே நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க முடியும்.
கடினமாக முயற்சி செய்வதால் இருக்க முடியாது.
எனவே, அமைதியாக, ஓய்வாக, அடக்கமாக இருங்கள்.
♡ ஓஷோ 🌺🌿
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.