Saturday 26 August 2017

அனுபவங்கள் மறக்காது.

இன்றைய சிந்தனை..(25.08.2017)
...............................

''அனுபவமே உயர்ந்தது...''
............................................

பார்வையற்ற இளைஞன் ஒருவனை சிலர் புத்தரிடம் அழைத்து வந்தனர்.

அவர்கள் “இந்த இளைஞன் வெளிச்சத்தை பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுக்கிறான்” என்று கூறினர்.

அப்போது பார்வையற்ற இளைஞன், “வெளிச்சத்தை நான் தொட்டு பார்க்க வேண்டும். சுவைத்து பார்க்க வேண்டும்.

அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும்.இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?” என்றான்.

அவனுடன் வந்தவர்கள் புத்தரிடம்,“நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்” என்று கூறினர்.

அதற்கு புத்தர், “அவன் உணர முடியாத ஒன்றை அவனை நம்ப வைக்கும் செயலை நான் செய்ய மாட்டேன்.

இப்போது அவனுக்கு தேவை பார்வை. வெளிச்சம் பற்றிய விளக்கமல்ல. அவனுக்கு பார்வை வந்து விட்டால், விளக்கம் தேவைபடாது.

அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்வை கிடைக்கச் செய்யுங்கள்” என்று கூறி அனுப்பினார்.

புத்தர் கூறியதை ஏற்று பார்வையற்ற இளைஞனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சை முலம் அவனுக்கு பார்வையும் கிடைத்தது.

உடனே அந்த இளைஞன் புத்தரிடம் ஓடி வந்து, “வெளிச்சம் இருக்கிறது” என்று கூறினான்.

உடனே, புத்தர், “வெளிச்சம் இருக்கிறது என்று அவர்கள் கூறிய போது ஏன் நம்ப மறுத்து விட்டாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன்,

“கண் தெரியாத என்னால், எவ்வாறு வெளிச்சத்தை உணர முடியும்? அவர்கள் சொன்னதை அப்படியே நான் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்னும் நான் கண் தெரியாதவனாகவே இருந்திருப்பேன்” என்றான்.

அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது என்பதை புத்தர் இந்த நிகழ்ச்சியின் முலம் சீடர்களுக்கு புரிய வைத்தார்..

ஆம், நண்பர்களே..!

'அனுபவமே சிறந்த ஆசான்'! அனுபவமே ஒரு மனிதனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தரும்...

எங்கு வேலை பார்த்தாலும் அதை வேலையாகக் கருதாமல், அதை ஒரு அனுபவமாக தெரிந்து கொள்ளக்கூடிய ஓரு வாய்ப்பாக நினைத்து, அதில் ஈடுபாடு காட்ட வேண்டும்.

இந்த அனுபவப் பாடம்தான் மனிதர்கள் உயர்வதற்கான
தாரக மந்திரம்''நெருப்பு சுடும் என்பதும், நீர் குளிரும் என்பதும் நம் அனுபவங்கள் மூலமாகக் கற்றுக் கொண்டவைதானே.

பக்கம் பக்கமாகப் படித்த பாடங்கள் மறந்து போகலாம்.

ஆனால்,

பசுமரத்தாணிபோல மனதில் படிந்த அனுபவங்கள் மறக்காது..🌺🙏🌹

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.