Thursday 24 August 2017

_ஒரு ஜென் கதை

🎗 *_ஒரு ஜென் கதை_* 🎗

⚜ டோஜன் என்பவர் புகழ் பெற்ற ஒரு ஜென் குரு.

தனது போதனைகளின் வழியே பல முக்கியமான ஜென் சிந்தனைகளைப் பரப்பியவர்.

ஒருநாள் அவரைப் பார்ப்பதற்காக ஒரு மாணவர் வந்திருந்தார்.

‘குருவே, எனக்கு ஒரு பெரிய குழப்பம்!’ என்றார்.

‘என்னது...???’

‘நான் பெரிய அரசு அதிகாரியாக வேண்டும் என்று என்னுடைய தந்தை விரும்புகிறார்.

ஆனால் என்னுடைய தாய் நான் ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

எனக்கோ உங்களைப்போல் ஒரு துறவியாகவேண்டும் என்றுதான் ஆசை’ என்று அந்த மாணவன் சொன்னான்.

‘இப்போது நான் என்ன செய்யவேண்டும்...??? நீங்களே சொல்லுங்கள்!’

டோஜன் மெல்லச் சிரித்தார்.

‘பள்ளித் தேர்வுகளில் நீ எத்தனை மதிப்பெண்கள் எடுத்தாய் என்று உன்னுடைய தந்தை எப்படித் தெரிந்துகொள்வார்...???’

‘அதற்கென்று ஒரு மதிப்பெண் அட்டை உண்டு’ என்றான் அந்த மாணவன்.

‘ஒவ்வொரு தேர்வும் முடிந்த பிறகு அந்த அட்டையில் என்னுடைய மதிப்பெண்களை நிரப்பித் தருவார்கள்.

அதை நான் என் தந்தையிடம் காண்பித்துக் கையெழுத்து வாங்கிவரவேண்டும்!’

’நல்லது. அந்த அட்டையில் உன்னுடைய தந்தையின் கையொப்பத்தை நீயே போட்டுவிடுவாயா...???’

அந்த மாணவன் முகத்தில் அதிர்ச்சி. ‘குருவே, ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்....???

என் தந்தையுடைய கையெழுத்தை நான் எப்படிப் போடமுடியும்....???

அது அவருடைய தனித்துவமான அடையாளமாயிற்றே.....!!!’

‘உண்மைதான். அடுத்தவர்களுடைய கையெழுத்தைப் போடுவதற்கு விரும்பாத நீ,

அவர்கள் தங்களுடைய சிந்தனைகளை உன்மீது திணிக்கும்போது ஏன் அதை ஏற்றுக்கொள்கிறாய்.....???

உன்னுடைய தனித்துவத்தை நீ ஏன் காட்டுவதில்லை....???’ என்றார் டோஜன்.

‘நீ அடுத்தவர்களாகமுடியாது.

அடுத்தவர்கள் நீயாகமுடியாது.

இந்த ஒரு விஷயத்தை என்றைக்கும் மறந்துவிடாதே.

அது உன்னை வழிநடத்தும்" ⚜

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.