கணுப்பொங்கல்
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்:-
பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டுவார்கள் இல்லையா ! அதனை எடுத்து முதிய சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசிப் பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
அதென்ன கணுப்பிடி? அதன் சிறப்பம்சம் என்ன?
அது ஒருவகை நோன்பு ஆகும்...
உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்தித்து செய்யும் நோன்பு.
"கார்த்திகை எண்ணெயும் கணுப்பிடியும் உடன் பிறந்தானுக்கு" என்பது பழமொழி.
அதாவது கார்த்திகை மாதம் எண்ணெய்த் தேய்த்துக்குளித்து விளக்கு வைப்பதும், பொங்கலில் பொங்கிய பால் சாதத்தை காணும்பொங்கல் தினத்தில் காக்கா, குருவிகளுக்கு அன்னமிடுவதும் உடன்பிறந்த சகோதரர்களின் நலனுக்காக என்பதே இந்தப்பழமொழியின் விளக்கம்.
இரண்டு மஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்குமுகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டின் மொட்டைமாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும்.
முதல்நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள் பொடிதூவி மஞ்சள்சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால்சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப்பொங்கல் கொஞ்சம், லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என 5 வகை அன்னங்களை தயாரிக்க வேண்டும்,
ஒவ்வொன்றிலும் 5 அல்லது 7 பிடி எடுத்து இலை மீது வரிசையாய் வைக்கும்போது, "காக்காப்பிடி வச்சேன் கணூப்பிடி வச்சேன்... காக்கைக்கு எல்லாம் கல்யாணம்.. கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்... கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்" என்று சொல்லிக்கொண்டே வைக்கவேண்டும்.
பின் தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விட வேண்டும்.. வீட்டிலென்றால் வீட்டின் வாசலில் கொட்டவேண்டும்.
உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து கலந்த சாதம், பாயசம் செய்து விருந்து போடணும்.
அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள்.
அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால் இது காணும் பொங்கல் ஆகி இருக்கலாம்.
பாசமுள்ள சகோதரிகளே
உங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் மட்டுமல்லாது உடன்பிறவா முகநூல் சகோதரர்களும் நலமோடு இருக்க வேண்டுமென இன்று நோன்பிருந்து பிரார்த்தனை செய்து செய்யுங்களேன்...!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.