தமிழர் வாழ்வில் வளர்ந்த சித்த மருத்துவ உத்திகள் அறிவியல் நோக்கு
சித்த மருத்துவ முறை
தமிழ் மருத்துவம் தொன்மையான இயற்கையானது. அது தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றுடன் இணைத்து வளர்ந்தது. பழங்காலத் தமிழர்கள் பூதவியல் (Five Elements) வானவியல்(Astronomy), வனவியல் (Forest Science), விலங்கியல் (Zoology), தாவரவியல்(Botany), கணியவியல்(Astrology), இயற்கையியல் (natural Science), குமுகாயவியல் (social Science), செயல்முறையியல் (Applied Science), மனித உடலியல் (Human Physiology), உயிர் நுட்பியல் (Bio-technology), நோய்க்குண குறியியல் (Pathology) போன்ற பல துறைகளில் அடைந்த தேர்ச்சியினால் தமிழ் மருத்துவத்தை உருவாக்கினார்கள் என்பதற்குச் சங்க நூல்களும் மருத்துவ நூல்களும் சான்றாக விளங்குகின்றன.
திணையும் மருத்துவமும்
நிலத்தின் பண்புகளுக்கேற்ப உலகை நானிலம் எனப் பகுத்து மலையை, காட்டை, வயலை, கடல் சார்ந்த நிலத்தை, ‘முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’ – தொல்.பொருள். 5.
என வழங்கியதுடன், அந்நிலங்களைத் திணையென்றும் அந்நிலங்களில் சிறந்து விளங்கிய மருத்துவப் பூக்களை அந்நிலங்களின் பெயரென வழங்கினர்.
தொல்காப்பியம் உரைக்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானிலமும், குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்திணையும், வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, காஞ்சி ஆகிய புறத்திணையும் மரம், கொடி (செடி – தொல்காப்பியத்தில் இடம் பெறவில்லை) ஆகிய மூலிகைகளின் பெயர்களால் வழங்கப்படுகின்றன. திணைக்குப் பெயர் சூட்டும் காலத்திலிருந்தே தமிழ் மருத்துவ வளர்ச்சி தொடங்குகின்றது.
திணையும் நோயும்
மலை,காடு,வயல்,கடல் ஆகிய நான்கென நிலத்தைக் குறிப்பிட்டதைப் போல, அவற்றின் குணத்தை அவற்றால் கிடைக்கும் நலத்தை மருத்துவம் குறிப்பிடுகிறது.
குறிஞ்சி நிலம் ஐய நோயையும், இரத்தத்தை உறிஞ்சுகின்ற சுரத்தையும், வயிற்றில் ஆமைக் கட்டியையும் உண்டாக்கும்; முல்லை நிலம் பித்த நோயையும், வல்லை நோயையும் வாத நோயையும் உண்டாகும். நெய்தல் நிலம் வாத நோயையும் மெலிந்த உடலைப் பெருக்கச் செய்யும். ஈரலில் வீக்கத்தையும் குடலில் வாயுவையும் வாத நோயையும் உருவாக்கும். பாலை நிலத்தில் வாத, பித்த, ஐயம் ஆகிய மூன்று வகை நோயையும் வளர்க்கும். மருத நிலம் வாதம், பித்தம், ஐயம் ஆகிய அனைத்தையும் தணிக்கும், குணமாக்கும். (தேரையர் வெண்பா. செய்.286.) எனவே. மருத நிலம் ஒன்றே நோயின்றி வாழத் தகுந்த நிலமாகும் (சித்த மருத்துவாங்கச் சுருக்கம். பக். 101-102) என்று குறிப்பிடப்படுகிறது.
குறிஞ்சி நிலம்
மனித இனம் தோன்றிய முதல் நிலத்தில் பூத்த மலர், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்ந்தது. அதே போல், அம்மண்ணில் தோன்றிய பெண்ணும் பன்னிரண்டாண்டு நிறைந்த பின்பே மலர்ந்தாள். மண்ணில் தோன்றிய செடியும் கொடியும் (பெண்) பன்னிரண்டு ஆண்டுகள் நிறைந்த பின்பே தன்னினப் பெருக்கத்தைத் தொடங்கின என்பதால், இயற்கைக்கும் மனித இனத்திற்கும் இணங்கிய தொடர்பு இருக்கிறது என்பது தெரிந்தது என்பதால், நானிலத்தில் குறிஞ்சி அறிவியல் சார்புடையதாக இருப்பதை அறிந்து அந்நிலத்திற்குக் குறிஞ்சி என்று பெயரிட்டனர்.
சித்த மருந்து
மருந்து என்னும் சொல்லுக்கு ஒளடதம் (Medicine), பரிகாரம் (Remedy), அமிர்தம் (Ambrosia), வசியமருந்து (Pitter), சோறு (Cooked Rice), இனிமை (Sweetness), குடிநீர் (Drinking Water) ஆகிய பொருள்கள் உள்ளன.
துன்பத்தை வேருடன் களைந்து பிணி, மூப்பு, சாக்காடு என்னும் இவற்றை யொழித்து, உடலில் எக்காலமும் உயிர் நிலைத்திருக்கச் செய்யும் கருவியே மருந்து எனவும், அது பயன்படுத்தப்படும் முறையே மருத்துவம் எனவும் கூறுவர். இதனால் மருத்துவத்தின் பயனும், சிறப்பும் கூறக் காண்கிறோம்.
சித்த மருத்துவக் கோட்பாடு
சித்த மருத்துவம் மருந்து, வாதம், யோகம், ஞானம் என்னும் நான்கு நிலைகளைக் கொண்டது. இந்நான்கு படிநிலைகளும் மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுவதற்கான முறைகளாகவும் ஒழுக்கச் செயல்களாகவும் கருதுவர். இதன் முதல் நிலையான மருந்து என்றால் அது, உடல் நோயைத் தடுக்கவும், மன நோயை நீக்கவும், நோய் வராமல் காக்கவும், மரணமில்லாப் பெருவாழ்வை அளிக்கவும் உரியதாக வேண்டும். அவ்வாறு அமையக்கூடியதே மருந்து என்கிறது, திருமந்திரம்.
“மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும்
மறுப்பது இனிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே” – திருமந்திரம்.
சித்த மருத்துவச் செயல்முறை விதிகள்
நோயாளியைக் கண்டவுடன் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவத்தின் செயல்முறை விதிகளில் காணப்பட வில்லை. மாறாக, நோயாளியைக் கண்ட மருத்துவன், நோயாளியின் உடல் பருமன்–மெலிவு இவற்றின் தன்மை, நோயின் தன்மை, நோயின் ஆற்றல், நோய் குணமாகுமா? குணமாகாதா என்னும் கணிப்பு, நோயாளி தூங்கிய தூக்கத்தின் அளவு, நோயுற்ற பின் நோயாளிக்கு உண்டாகும் பெண் மயக்கத்தின் அளவு, நான்கு வகையான உடலின் இலக்கணத்தில் நோயாளி உடலின் வகை, ஆள், நாள், குணம், நோய், நாடு, பேதம், நிலை, கோள்களின் ஆட்சி–வீழ்ச்சி ஆகிய அனைத்தும் பார்த்தறிந்து, அதன்பின் மருத்துவம் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றிய பின்னர், வேர்களைக் கொண்டு மருந்துகளைக் கொடுக்கவும், அதன்பின்னர் மூலிகைகளைக் கொண்டு மருந்து செய்து கொடுக்கவும். இவற்றினாலும் நோயின் குணம் தணியவில்லை என்றால், பற்பம், செந்தூரம் என்னும் மருந்து வகைகளைப் பயன்படுத்தலாம் என்று செயல்முறை விதிகள் கூறப்படுகின்றன. (அகத்தியர் பின் – 80. பா. 38, 39. )
பஞ்சபூதமும் உடம்பும்
உடம்பைப் பஞ்சபூதங்கள் ஆட்சி செய்கின்றன. அவற்றின் அளவு சிறிது மாறினாலும் உயிர்க்குக் கேடு வந்து நேரும் என்கிறது சித்த மருத்துவம். (யூகி கும்மி – 1000. பா.861).
உடல் பஞ்ச பூத மயமானது
மண் – எலும்பு தசை தோல் நரம்பு மயிர்
நீர் – மூளை சிறுநீர் கொழுப்பு வெண்ணீர் குருதி
தீ – புணர்ச்சி சோம்பல் தூக்கம் ஆணவம் பயம்
வளி – கிடத்தல் இருத்தல் நடத்தல் ஓடல் தாண்டல்
விண் – மாச்சரியம் மதம் மோகம் உலோபம் காமம்
என, பூதங்களின் ஆட்சி நடைபெறுகின்றன.
ஆறு சுவையும் ஐம்பூதமும்
இனிப்பு = மண் + நீர்
புளிப்பு = மண் + தீ
உவர்ப்பு = நீர் + தீ
கைப்பு = காற்று + விண்
கார்ப்பு = தீ + காற்று
துவர்ப்பு = மண் + காற்று
உறுப்புகளில் கோள்கள்
அண்டத்திலுள்ள கோள்களின், ஆற்றலுக்கும், மனித உடலிலுள்ள உறுப்புகளின் ஆற்றலுக்கும் தொடர்பு இருக்கின்றன. அவை,
தமரகம் – ஞாயிற்று ஆற்றல்
மூளை – திங்கள் ஆற்றல்
பித்தப்பை – செவ்வாய் ஆற்றல்
நுரையீரல் – அறிவன் ஆற்றல்
கல்லிரல் – வியாழன் ஆற்றல்
நீர்க்குண்டிக்காய் – வெள்ளி ஆற்றல்
மண்ணீரல் – காரி ஆற்றல்
என்று சித்த மருத்துவம் கணித்துள்ளது.
உறுப்புகளில் விண்மீன்கள்.
விண்மீன்களும் மனித உடலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆதலினால், உடல் உறுப்புகளில் உண்டாகும் நோய்க் குற்றங்களுக்கும் விண்மீன்களுக்கும் தொடர்பு உள்ளன என்பது தெரிகிறது. அவற்றின் விபரம் வருமாறு; –
புரவி (அசுவினி) : புறங்கால்
அடுப்பு (பரணி) : உள்ளங்கால்
ஆரல் (கிருத்திகை) : தலை
சகடு (ரோகிணி) : நெற்றி
மான்தலை (மிருகசீரிடம்) : புருவம்
மூதிரை (திருவாதிரை) : கண்
கழை (புனர்பூசம்) : மூக்கு
காற்குளம் (பூசம்) : முகம்
கட்செலி (ஆயில்யம்) : காது
கொடுநுகம் (மகம்) : உதடு மேவாய்
கணை (பூரம்) : வலது கை
உத்தரம் (உத்திரம்) : இடது கை
ஐவிரல் (அஃசதம்) : கை விரல்
அறுவை (சித்திரை) : கழுத்து
விளக்கு (சுவாதி) : மார்பு
முறம் (விசாகம்) : மூளை
முடப்பனை (அனுசம்) : வயிறு
துளங்கொளி (கேட்டை) : வலப் பக்கம்
குருகு (மூலம்) : இடப் பக்கம்
உடைகுளம் (பூராடம்) : முதுகு
கடைக்குளம் (உத்திராடம்) : இடை
முக்கோல் (திருவோணம்) : குய்யம்
காக்கை (அவிட்டம்) : குதம்
செக்கு (சதயம்) : வலது தொடை
நாழி (பூரட்டாதி) : இடது தொடை
முரசு (உத்திரட்டாதி) : முழங்கால்
தோணி (ரேவதி) : கணைக்கால்
மனிதனின் உடலில் இருபத்தேழு விண்மீன்களும் தங்களின் இயக்கத்தைச் செலுத்தி வருகின்றன. மனிதன் பிறக்கும் போது விண்மீன் மண்டலத்தில் சந்திரனின் இடம் எந்த விண்மீனில் இருக்கிறதோ அதுவே அம்மனிதன் பிறந்த விண்மீனாகக் கொள்ளப்படுகிறது. அந்த விண்மீன், அவனின் உடல் உறுப்புகளில் எந்த உறுப்பின் ஆதிக்கத்தில் உள்ளதோ அந்த உறுப்பே அம்மனிதனின் உயிர் உறையும் இடமாக இருக்கும் என்பது விதி.
கோள்களும் நோய்களும்
ஞாயிறு : வலக்கண் நோய், இதய நோய், மூல நோய், வயிற்றுக் கடுப்பு.
சந்திரன் : இடக்கண் நோய், ஐயநோய், நுளம்புக் காய்ச்சல்(மலேரியா), மன நோய், கழிச்சல்.
செவ்வாய் : தீக்காயம், நஞ்சு அபாயம், வெட்டைச் சூடு, இரத்த வாந்தி.
அறிவன் : கழுத்து வலி, வெண்குட்டம், மூளைக் காய்ச்சல், காது வலி, ஒற்றைத் தலைவலி.
வியாழன் : வாயுக் கோளாறு, உடல் பருமன், மூச்சடைப்பு, புற்று நோய், தலை வழுக்கை
வெள்ளி : நீர்த்தாரை,பிறப்புறுப்புக் குறைபாடு, வேட்டைநோய்(எய்ட்ஸ்), தேமல், வெள்ளைப் படுதல், வீரியக் குறைவு,
காரி : வயிற்று வலி, சளித் தொல்லை, மூட்டுவலி, யானைக்கால், பக்கவாதம், வலிப்பு நோய்,நீரிழிவு.
இராகு : புற்று நோய், இரைப்பு, விசக்கடி.
கேது : அசீரணம், மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச் சிதைவு, இரைப்பு.
அண்டத்தில் இயங்கும் ஆற்றலுக்கும் உடலுக்கும் தொடர்பு இருப்பதால் அண்டம் வேறு, பிண்டம் வேறு என்னும் பாகுபாடு இயற்கை நியதியில் இல்லை. என்பதை,
” அண்டத்தி லுள்ளதே பிண்டம்
பிண்டத்தி லுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே”
என்று, சட்டமுனிஞானம் உரைக்கிறது.
பூதமும் பிறப்பும்
பஞ்சபூதங்கள் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் நிறைந்திருக்கின்றன. எந்த இடத்தில் பூதங்கள் அனைத்தும் இல்லையோ, அந்த இடத்தில் உயிரினங்களும் அவற்றின் பிறப்பும் இல்லை என்ற கருத்து உறுதிப் படுவதற்கும், பூதங்கள் எல்லாம் ஒரே அளவில் இருந்தால், அங்கும் பிறப்பில்லை.அவை, பங்கு பெரும் அளவு மாறினால் உயிர் உண்டாகும் என்பர். (ஒளவைக் குறள் – செய்.2). இது, உயிரிங்கள் தோன்றியதற்கான அடிப்படையை அறிவிக்கிறது.
பூதத்தின் அளவு
நெல்லிக்காய், மிளகு, கடுக்காய், மஞ்சள், வேம்பரிசி என்பவை பஞ்சபூதத்தை அடையாளம் காட்ட சான்றாகக் கூறும் மருந்துப் பொருள்கள். அவை முறையே, மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்றும், அவை 6,5,4,3,2 என்னும் அளவுகளில் உடலிலும் பொருளிலும் கலந்துள்ளன என்று குறிக்கப்படுகிறது. (மருத்துவத் தனிப்பாடல். 1)
பஞ்சபூதங்கள் மண் -5, நீர் -4, தீ -3, காற்று -2, ஆகாயம் –1 என்ற விகிதத்தில் கலந்திருப்பதால் இதன் அடிப்படையிலேயே மருந்துப் பொருள்கள் கூட்டப் படுகின்றன.
பூத மருந்து
உடலுறுப்புகளில் பஞ்சபூதங்களின் ஆட்சி இருப்பதனால் அவற்றில் உண்டாகும் நோய்களுக்கும் பஞ்சபூதங்களின் தொடர்பு இருக்க வேண்டும். அந்நோய்களுக்கு அளிக்கப் படும் மருந்தும் பஞ்சபூதம் கலந்த கலவையாக இருக்கவேண்டும் , என்பதில் மருத்துவர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். ஆகவே, பஞ்ச பூதம் கலந்த மருந்தையே பயன்படுத்துகின்றார்கள். அவ்வகையில் ஒன்றான ‘பஞ்சலோகச் செந்தூரம்’, என்னும் ஒரே மருந்து வாத (காற்று) நோய் 84, பித்த (தீ) நோய் 48, ஐய (நீர்) நோய் 96 ஆக 228 நோய்களைப் போக்கக்கூடியதாக இருக்கிறது.
பஞ்சபூதத்தின் இயல்பை அறிந்து அதன் இயல்பிற்கேற்ப மருந்து செய்வதனால் இத்தனை நோயையும் ஒரே மருந்து குணம் படுத்துகிறது. இது போன்ற முறையை வேறு எந்த மருத்துவத்திலும் காண இயலாது.
தொல்காப்பியரும் சித்தர்களும்
காலத்தைச் சிறுபொழுதென்றும் பெரும்பொழுதென்றும் தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியம் கூறும் காலத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறும் மருத்துவர்கள், தென்தமிழ்நாடு, பூமியின் நடுக்கோட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ளது. அதனால், காலக்கணிதம் கூறும் நாள்களுக்கு முன்னதாகவே பொழுதுகள் தொடங்கி விடுகின்றன. காட்டாக, கார்த்திகைப் பதினைந்துக்குப் பின் பனி பெய்வதையும், பங்குனி பதினைந்துக்குப் பின் வெப்பம் அதிகமாவதையும் கூறுவர். இது, மருத்துவர்களின் வானியல் நுட்பத்திற்குச் சான்றாகலாம்.
காலமும் வெப்பமும்
மருந்துகளைச் செய்வதற்கு வெப்பம் அளவாக இருக்க வேண்டும் என்பதால், வேனில் காலத்தில் கிடைக்கும் வெப்பம் கூதிர் காலத்தில் கிடைக்காதாகையால், காலத்தை அறிந்து மருந்து செய்ய வேண்டும் என்பர்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்,
கருதி இடத்தாற் செயின். (திருக். 484)
அதாவது, பங்குனி முதல் மாசி ஈறாக வரும் மாதங்கள் பன்னிரண்டில் இரண்டு இரண்டு மாதங்களாகப் பெரும் பொழுது காலத்தைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மருந்தை ஒவ்வொரு பொழுதில் செய்திடுமாறு கூறப்படுகிறது.
பங்குனி, சித்திரை குரு மருந்து; தை, மாசி செயநீர்;
ஐப்பசி, கார்த்திகை உருக்கு வகை; ஆடி, ஆவணி திராவகம்;
வைகாசி ஆனி சாரணை; புரட்டாசி, மார்கழி செந்தூரம்;
ஆகியவை செய்திட வேண்டும். இதில் ஏதோனும் தவறுகள் நேர்ந்தால் செய்யும் மருந்து சரியான பாகமாக அமையாது என்ற கண்டிப்பும் காணப்படுகிறது.
பண்டுவமும்(அறுவை மருத்துவமும்) காலமும்
மருத்துவ உலகின் மகத்தான சாதனை பண்டுவம் என்பர். இதன் தொடக்கம் என்று ஏற்பட்டது என்பதை அறிய முடியாது. வேல்பட்ட புண்ணைத் தைக்கும் முறை (பதிற்றுப்பத்து. 5:2:1-4) நம் முன் னோர்கள் வகுத்த முறை என்பது தெரிகிறது. அவ்வாறு புண்களை நோய்ப் பகுதிகளை நீக்க, செய்யப் படுகின்ற அறுவை மருத்துவம் எந்த நாளில் எந்தப் பகுதியில் செய்யக் கூடாது என்பது குறிப்பிடப்படுகின்றது.
அமைவாயு(அமாவாசை) தொடங்கி பூரனை(பறுவம்; பௌர்ணமி) வரையிலும், பூரனை தொடங்கி அமைவாயு வரையிலும் உடலில், ‘அமுத நிலைகள்’ சுழன்று கொண்டிருப்பதாகவும், அதன் சுழற்சியின் போது, ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பகுதியிலும் நின்று செல்லும். அந்தப் பகுதி எது என்பதை அறிந்து, அந்த நாளில் அந்தப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யாதிருப்பது நலமென்பர். அது மட்டுமல்ல, அந்த நாளில் அந்தப் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டாலோ, குத்து வெட்டு போன்றவை ஏற்பட்டாலோ, பாம்பு, அட்டை, சிலந்தி போன்றவை கடித்தாலோ நோய் தீராமல் மரணம் ஏற்படும் என்றும், நாள்களை அறிந்து அறுவை சிகிச்சை செய்தால் நோய் நீங்குமென்றும் கூறப்படுகிறது. (அகத்தியர் நயன விதி. பா. 480)
கற்பம்
கற்பம் உடலைக் காக்கும். உற்ற நோயை அகற்றும். அது, உடலைக் கற்போல மாற்றும். கற்பம் உண்பவர் நீண்டநாள் வாழ்வார் என்றும் நோயற்ற நிலையடையலாம் என்பதும் மருத்துவ வழக்காக இருக்கிறது. உலக மருத்துவம் எதிலும் காணப்படாத அரிய முறை இது.
‘அஞ்சு யுகத்தில் அழியாமல் காயந்தான்
மிஞ்சிய கற்பம் விளம்பினோம் நூற்றெட்டுத்
தஞ்ச முறவே தாந்தின்ன வல்லோர்க்கு
பஞ்சு நரைபோய்ப் பதிந்தோங்கி வாழ்வரே’
– திருமந்திரம். செய்.
கற்ப மருந்து உண்பதிற்கும் காலத்தை அறிந்து உண்ண வேண்டும். கற்ப மருந்தையும் குறிப்பிட்ட பொழுதுகளிலேயே உண்ணவேண்டும் என்னும் விதி போகர் நூலில் காணப்படுகிறது. (போகர்-700. பா. 267-80)
கற்ப மருந்திற்கும் இயற்கைக்கும் தொடர்பு தெரிகிறது. இவ்வாறு உண்ணப்படுகின்ற 108 வகை கற்ப மருந்தும், இளமைக்காலத்தில் தான் செய்தனவெல்லாம் முதுமைக் காலத்தில் செய்ய முடியவில்லையே! என்று, மனம் தளர்ந்து வருந்துகின்றவர்களுக்குக் கொடையாகக் கிடைக்கக் கூடியது. கற்பம் உண்பவர்கள் என்றும் இளமையுடனிருக்கலாம்.
இவ்வகை கற்ப (HEALTH MANAGEMENT SYSTEM) முறைகளை அறியாதிருந்தால் யாருக்கு நட்டம்? தமிழகம் எத்தனையோ அரிய கலைகளை அறிந்திருந்தும் அவை பயன்படாமல் மறந்திருப்பதைப் போல, இதையும் மற்றவை போல மறந்து ஒதுக்கி விடலாகாது.
இரத்தச்சுத்தி
உடல் தூய்மைக்கு (காயசித்தி) இரத்தம் தூய்மையாக வேண்டும். இரத்தத்தை கொண்டே உடலின் நோய்க் குற்றங்கள் அறியப்பட்டு வருகின்றன. அதேபோல் இரத்தத்தைத் தூய்மையாக்கி, உடலைத் தூய்மையாக்கும் முறை சித்த மருத்துவத்தின் கோட்பாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இரத்தத்திலுள்ள நோய்க் கிருமிகளை அழிப்பதே மருத்துவத் துறையின் தலையாயப் பணி என்பதை அடிப்படையாகவும் கொண்டிருக்கக் காண்கிறோம்.
” உண்ணப்பா மண்டலந்தான் நோயும் போகும்
உதிரத்தில் உத்தமனே நோயும் போகும்.” (நந்தீசர் சகல கலி ஞானம்- பா. 926)
ஒரு மண்டலம் உண்டால் நோய் போவதுடன் இரத்தத்திலுள்ள கிருமிகள் எல்லாம் அழிந்து போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்ம மருத்துவம்
சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவாக இயங்குவது வர்மமாகும். இதனை மர்ம மருத்துவம் என்றும் கூறுவர். வர்மம், மருத்துவம் மட்டுமல்லாமல், எதிரிகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புக் கலையாகவும் பயன்பட்டிருக்கிறது.
வர்ம முறைகளால் எலும்பு முறிவு, ஒடிவு போன்றவற்றுக்கு மருத்துவம் செய்யப்படும். வர்மத்தினால் பல நோய்களைக் குணப்படுத்த முடியும். நோயாளியின் மர்மப் பகுதிகளில் அடித்தும், தட்டியும், தொட்டும், தடவியும், செய்யப்படும். இன்றைய நவீன மருத்துவ முறையில் ஒன்றான ‘நரம்பியல் முறையே’ பழங்காலத்தில் வர்ம முறையாகக் கருதப்பட்டிருந்தது.
வர்மத்தின் தேவை:
” அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ
கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்
நரம்பு கோணிடில் நாமதற் கென்ன செய்வோம்”
(விவேக சிந்தாமணி. பா.20)
என்னும் இப்பாடல், வர்ம மருத்துவத்தின் தேவையைக் குறிப்பால் உணர்த்துகிறது.
இளமைக் காலங்களில் இளைஞர்கள் மன மகிழ்ச்சிக்காக விளையாடும் போது, வர்ம நிலைகளில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுகின்ற அடிகள், அவர்களின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடக் கூடியதாக இருக்கிறது.
பருவத்தைப் பாழாக்கும் வர்மம்
வர்மங்களில் சில மரணத்தைத் தரும். சில கடுமையான நோயையும் துன்பத்தையும் தரும் என கூறப்படுகிறது. ஆண்களை அலியாகவும், பெண்களை மலடியாகவும் ஆக்கக் கூடிய வர்மம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. (ஒடிவுமுரிவு சாரி நிகண்டகராதி. பா. 430)
இடுப்பு சாலத்தில் உள்ள நீர்ப்பிசி நரம்பு முறிந்தால், மூன்றாம் நாளில் மரணம் வரும். மதி மயக்கம் உண்டாகும். கண் ஒளி போகும். உடலில் குத்தல் உண்டாகும். சிறுநீரோடு சீழ் கலந்து போகும். இந்தக் குணங்களே ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டாகும் என்றாலும், இளம் பெண் பூப்படைய மாட்டாள். பருவடைந்தவள் மாதவிடாய் அடைய மாட்டாள். கருத்தரிப்பு உண்டாகாது. அதே போல், ஆண்களுக்கு ஆண்மை குன்றிப் போகும் (ஒடிவுமுரிவு சாரி நிகண்டகராதி. பா. 424-432) என்று, நரம்பின் இயல்பை நன்குணர்ந்து உரைக்கப் பட்டுள்ளது.
மனநலம்
மனத்தைச் செம்மை படுத்துவதும் சித்த மருத்துவத்தின் நோக்கமாகும். மனத்தின் வழியே இன்பமும் துன்பமும் என்பதால் மனத்தூய்மைக்கு மருத்துவ முறையிலும் யோக முறையிலும் உத்திகள் பல ஆளப்படுகின்றன.
மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும் – திருக்குறள். 457.
மனத்தில் நோய் தோன்றுவதற்குக் காரணம் பேய், பூதம், எச்சினி, தேவதை என்றெல்லாம் கூறுவது அறியாமை எனக்கூறி, மன நோய்க்கான காரணத்தையும் அதனைப் போக்குதற்கான மருத்துவ முறைகளையும் உரைக்கிறது, ‘கிறுக்குகள் – 18’ என்னும் நூல். மனநல மருத்துவங்கள் தோன்றியதே சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் என்பர். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனநலத்தை ஆராய்ந்து அதற்கான மருத்துவத்தையும் கூறியுள்ளனர் .
சித்த மருத்துவத்தின் அடிப்படைகள்
சித்த மருத்துவத்தின் அடிப்படைகள் நவீன அறிவியலோடு ஒத்த அமைப்பில் உருவானவை. ஆழ்ந்து நோக்கும் போது அறிவியலின் அளவை ஏரணத்திலிருந்து (Logic) எந்த விதத்திலும் மாறுபடாதவை. காண்டல் (Observation), கருதுதல் (Inference), கருதுகோள் (Hypothesis), என்னும் மூன்று வகுதைகள்(பிரமாணங்கள்; Factors) அடிப்படையானவை. ஒப்புறை, எதிருறை, கலப்புரை என்னும் மூன்று நிலைகளிலும் சிகிச்சை அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. (சித்தமருத்துவம். பக்.9)
சித்த மருந்தியல் தத்துவத்தின்படி, உடலானது ஐம்பூதங்களாலும், பூதங்களின் தொகுதியான மூன்று உயிர்த்தாதுகளாலும் (வாதம், பித்தம், ஐயம்) ஆனது. இம்மூன்று தாதுகளும் இயற்கைப் பிறழ்ச்சியாலும், உணவாதிக் குறைகளாலும், கோள்களின் பேதங்களாலும், தம் நிலை பிறழும் போது முக்குற்ற நிலை அடையும். வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்றின் நிலைப்பிறழ்ச்சியால் நோய்கள் தோன்றுகின்றன. வாதம் இயக்கும் (Starter), பித்தம் இயங்கும் (Accelerator), ஐயம் நிறுத்தும் (Break), மூன்றில் எது பழுதடைந்தாலும் வாழ்வின் பயணம் தடைப்படும். இந்நிலைப் பிறழ்ச்சியால் உடலில் ஏற்படும் மாறுதல்களை நாடிகளின் நடையைக் கொண்டு நோயின் நிலை கணிக்கப்படுகிறது. மருந்துகளிலும் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்ற பிரிவுகள் உள்ளன. இக்கருத்து இன்றைய அறிவியலோடு ஒத்ததே. சித்த மருத்துவம் சிறந்த தருக்க நெறியில் அமைந்த அறிவியல் என்பதை அறிவியலாரும் ஒப்புக் கொள்கின்றனர். (தமிழ்ச் சுவடிகளில் குழந்தை மருத்துவம். பக்.30 31)
நஞ்சை அமுதாக்கும் வித்தையை நம் சித்தர்களிடம் காண்கிறோம். நவபாடாணங்களில் ஒன்றான நாபி (Acconitum ferox) ஒரு பொல்லாத நஞ்சு. அதனைக் கோமூத்திரத்தில் இடுவதன் முன்னரும், இட்ட பின்னரும் வேதியல் நிலையில் சோதித்துப் பார்த்தனர். 24 மணி நேரம் கோநீரால் சுத்தியடைந்த நாபி இதயத்தை ஊக்குவிக்கிறது. அதற்கு முன், இதயத்துடிப்பை, குருதி அழுத்தத்தைக் குறைத்து உயிரைக் கொன்று விடுகிறது. மாஸ்கர் (Masker), காய்ஸ் (Caius) என்பவர்கள், 1937இல் செய்த சோதனையில், நாபியில் அடங்கிய அக்கோனிடின் (Aconitine) கோநீரால் தீமை குறைந்த அக்கோனிடினாக மாறுகிறது என்று கண்டு பிடித்தனர். வேதியல் மாற்றம் கோநீரால் ஏற்படுவதை அறியும் போது, சித்தர்களின் சுத்திமுறை அறிவியல் முறையில் அமைந்த ஒன்று என்பதால், சித்த மருத்துவமும் அறிவியல் மருத்துவம் என்று கூறலாம்.
பாதரசம்
உலக மருத்துவர்களில் சித்தர்களும் சீனர்களுமே பாதரசத்தை மருந்தாகப் பயன்படுகின்றனர். அதிலும் அதிக அளவில் பயன்படுத்தியவர்கள், சித்தர்களே. இன்றைய அறிவியலார் பயன்படுத்திய பாதரசம் சேர்ந்த மருந்து ஆபத்தானவை என்று விலக்கப்பட்டன. ஆனால், சித்த மருந்து இன்றும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கிறது.
இலிங்கத்திலிருந்து இரசத்தைப் பிரித்தெடுத்தல் (Destructive distillation of mercury from cinnabar by sublimation), தங்கம், வெள்ளி, வெள்ளீயம் ஆகியவற்றில் இரசத்தைச் சேர்த்து இரசக் கலவை (amalgam) உண்டாக்கி லோகமாரணம் செய்து மருந்தாக்குதல், சித்த மருத்துவத்தின் மருந்தியல் அறிவியலுக்கு ஓர் எடுத்துக் காட்டு.
சித்த மருத்துவத்தில் பாதரசக் கலப்புள்ள மருந்துகள் சிறுநீர் பெருக்கிகளாகவும் (diuretics), மேகப் பிணி விலக்கியாகவும் (anti-syphilitic), மலமிளக்கியாகவும் (laxative), அழுகலகற்றியாகவும் (anti-septic), சுரம், குன்மம், கழிச்சல் நோய்கள், கீல்வாத நோய், புற்று நோய் ஆகியவற்றுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.
மருந்தாக்கம் (வைப்பு முறை)
இயற்கையாகக் கிடைக்கும் பாடாணங்கள் 32. அவற்றைக் கொண்டு, செயற்கையாக 32 பாடாணங்கள் தயாரிக்கப் படுகின்றன. இவை அனைத்தும் கடுமையான நச்சுத் தன்மை கொண்டவை. அவற்றை அருந்தினால், சில மணி நேரத்திலேயே மரணத்தை ஏற்படுத்தும். அவை அனைத்தும் மருந்தாகப் பயன்படுத்தப் படுகின்றன. முதிர்ந்த நோய்களையும் மரபு நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் மிகுந்தவை. அவற்றினால் எவ்விதமான புற விளைவுகளும் வந்தாக வரலாறில்லை.
செயற்கை மூலிகைச் செம்பு
அவுரி, ஓரிலைத் தாமரை, செவ்வல்லி, பிளியறணை, அமுரி, கோவை, பிடர்முக்கி, கொடியொளிச் சிகப்பு, செந்திராய், கரியசாலை, சிறுகீரை ஆகியவற்றுடன், வெண்கரு, குன்றி, சீனம் ஆகிய இவற்றைச் சேர்த்து, காய்ச்சி தாரம், இந்துப்பு, மெழுகு, வெண்ணை சேர்த்து மூடி எரித்தெடுத்து, அதன் சாம்ப லுக்கு எட்டுக்கு ஒன்று ஆவின் நெய், வெண்காரம், வெல்லம், குன்றி இவற்றைச் சேர்த்துப் பிசைந்து, பத்துக்கு ஒன்று குடோரி சேர்த்து மூன்று நாள் அரைத்து வெய்யலில் காய வைத்து சர உலையில் ஊத மூலிகை செம்பாகும்” (போகர் நிகண்டு – பா. 472-476) என்பர்.
இந்தச் செயற்கைச் செம்பினால் செய்யப்படுகின்ற மருந்து வீரிய மிக்கதாகவும் நோயையும், நோயின் மூலத்தையும் அழிக்க வல்லதாகவும் இருக்கு மென்பர். (போகர் கற்பவிதி. பா. 100)
இவ்வாறு, செயற்கை முறையில் மருந்துகளையும் உலோகங்களையும் உருவாக்கி மருந்தாகப் பயன்படுத்தி மக்களுக்கு மருத்துவம் செய்தவர்கள், சித்தர்கள்.
கறுப்பு மூலிகை
மூலிகைகள் இயல்பாக இருக்கும் நிறத்திலிருந்து மாறுபட்டு கறுப்பு வண்ணத்தில் அவற்றை வளர்த்து அதைக் கற்பமுறையில் உண்டால், நீண்ட நாள் வாழலாம் என்பது சித்தர்களின் கருத்தாக இருக்கிறது. கரியசாலை, கரந்தை, பொற்றலை, நீலி, வல்லாரை ஆகிய ஐந்து மூலிகைகளைத் தினமும் பாக்களவு ஒரு மண்டலம் உண்டு வந்தால், உடல் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னாகக் கனிந்து மின்னுவதுடன், குரல் கின்னரம் போன்ற இனிமை யானதாகவும் மூச்சும் இறுகி உடலை வளப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
உலோக மாற்றுக் கலை
சித்த மருத்துவம் என்று கூறியவுடன் முதலில் நினைவுக்கு வருவது இரசவாதமாகும். இரசவாதம் என்றால், “உலோக மாற்றுக் கலை’ என்றும், தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகமாக மாற்றுவதாகும். அது, பொருள் ஈட்டுவதற்காகச் செய்யக் கூடியதல்ல. சித்தர்கள் செய்கின்ற மருந்தின் செயல் எவ்வாறிருக்கிறது என்று சோதனை செய்வதாகும். தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றி அந்த உலோகங்களைக் கொண்டு செய்யப்படுகின்ற மருந்து, நோயுடைய தாழ்ந்த உடலை நோயற்ற உயர்ந்த உடலாக ஏன் மாற்றாது? என்று வினவுகின்றார்கள், சித்தர்கள்.
சித்த மருத்துவத்தின் உறுப்புகள்
மூன்று கண்கள்; நான்கு தலைகள்; ஐந்து முகங்கள்;
ஆறு கைகள்; எட்டு உடல்கள்; பத்துக் கால்கள் எனும்
முப்பத்தாறும் மருத்துவ உறுப்புகளாகும்.
மூன்று கண்கள் : மருந்து, மருந்தின் சுத்தி, மருந்தின் குணம் ஆகிய மூன்றும் மூன்று கண்கள்.
நான்கு தலைகள் : வாதம், பித்தம், ஐயம், தொந்தம் ஆகிய நான்கும் நான்கு தலைகள்.
ஐந்து முகங்கள் : வாந்தி, பேதி, குடல் சுத்தி, நசியம், இரத்தத்தை வெளியாக்கல்ஆகிய ஐந்தும் ஐந்து முகங்கள்.
ஆறு கைகள் : இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு ஆகிய ஆறும் ஆறு கைகள்.
எட்டு உடல்கள் : எண்வகைத் தேர்வு முறைகள் எட்டு உடல்கள்.
பத்து கால்கள் : நாடிகள் பத்து, வாயுக்கள் பத்து ஆனாலும் அவை பத்துப் பெயர்களால் குறிக்கப்படுவதால் பத்து கால்கள் எனப்படும் என்று குணவாகடம் கூறுகிறது.
இந்த முப்பத்தாறு உறுப்புகளையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்களையே மருத்துவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
எண்வகைத் தேர்வு முறை
சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் தேர்வு முறைகள் எட்டுவகைப்படும். அவை நாடி, பரிசம், நாக்கு, நிறம், மொழி, விழி, மலம், மூத்திரம் என்பன. இவை எட்டும் மருத்துவனின் கருவிகளாகக் கூறப்படுகின்றன. இவற்றில் ஒலித்தேர்வு, வண்ணத் தேர்வு, சுவைத் தேர்வு, நாற்றத் தேர்வு என்பவை பிற மருத்துவங்களில் காணப்படாதவை. எண்வகைத் தேர்வின் மூலமாக சுமார் 5000 நோய்களை அறிந்திருக்கிறார்கள் என்பது வியப்பானது. ஆனால், இதுவரை அறிவியலால் அறியமுடியாத அரிய அனுபவ முறையாக இருக்கிறது.
மருந்தியல்
சித்த மருத்துவத்தில் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்னும் பிரிவுகள் உள்ளன. இம்மருந்துகள் தேவ மருந்து, மனித மருந்து, இரச மருந்து என்னும் முப்பெரும் பிரிவுகளாகக் காணப் படுகின்றன. சித்த மருந்தியல் அணுவை அடிப்படையாகக் கொண்டது. மருந்துப் பொருள்களில் உள்ள அணுவை நுண்ணணுவாகவும்’ பரமாணுவாகவும் மாற்றுவது, சித்த ‘மருந்தியல்’ ஆகும். ஒரு பொருளிலுள்ள அணுக்களை வேறொரு பொருளிலுள்ள அணுக்களுடன் இணைத்து, வேதியல் முறைப்படி புதிய அணுக்களை உருவாக்கி, அதன் மூலம் நோய்களைக் களைவது சித்த மருந்தியலின் அடிப்படை யாகும்.
இவ்வாறு, அணுவியல் மாற்றங்களை உருவாக்க, வெப்பம், தீ, நெருப்பு போன்ற உலைகளின் மூலம் அணுக்கள் தயாரிக்கப் படுகின்றன. மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்ற உலைகள், ‘புடம்’ என்னும் சொல்லால் குறிப்பிடப் படுகின்றது.
புடம்
மருந்துகள் தயாரிக்கும் போது, அரைத்து, வேகவைத்து, எரித்து, நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவர்.
உலகியல்
உலகமாகிய அண்டம், உடலாகிய பிண்டம், நோய்க்குரிய மருந்து, மருந்தைச் செய்வதற்கு வேண்டிய வாதமுறைகள் ஆகிய அனைத்தும் ஒத்த முறையில் இயங்குகின்றன என்றறிந்தவர்கள் தமிழ் மருத்துவ முன்னோர்கள்.
மூன்றே பொருளால் ஆனது அண்டம்
மூன்றே பொருளால் ஆனது பிண்டம்
மூன்றே பொருளால் ஆனது மருந்து
மூன்றே பொருளால் ஆனது வாதமே
என்பதால் ஞாயிறு, திங்கள், மழை ஆகிய மூன்று பொருளால் ஆனது அண்டம். வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்று பொருளால் ஆனது பிண்டம். இரசம், கெந்தகம், உப்பு ஆகிய மூன்று பொருள்களால் ஆனவை மருந்தும், வாதமும். இவ்வாறு உலகப் பொருள்களின் மூலத்தை மூன்று பொருள்களின் தன்மையை ஒப்பிட்டுக் காணும் முறை வேறெங்கிலும் காணவியலாது.
சாகாக்கால், வேகாத்தலை, போகாப்புனல்
சாகாத கால், வேகாத தலை, போகாத புனல் என்னும் மூன்றும் குறியீட்டுச் சொற்களாகும். இம்மூன்றும் வைத்தியம், வாதம், ஞானம் ஆகிய மூவிடங்களிலும் இடம் பெறும்.
சாகாக்கால் இரசத்தை மணியாகக் கட்டுதல்
வேகாத்தலை கெந்தகம் நெருப்பில் புகையாமல் கட்டுதல்
போகாப்புனல் காந்தம் தண்ணீரில் மூழ்காமல் மிதத்தல்
எனக் கொள்ளப்படும். ஆனால் இவை மருத்துவத்துக்கு மட்டுமே பொருளாகும்.
சித்தர்நூல்களில் பெரும் புதிராக விளங்கும் இம்மூன்றும் மறைமொழிச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும், இவை சூதம், கெந்தகம், காந்தம் என்னும் மருந்துப் பொருள்களையும் அடி நடு முடி என்னும் மூலாதாரம், சுழுமுனை, உச்சி ஆகிய யோக நிலைகளையும் அகரம் உகரம் மகரம் என்னும் மந்திரங்களையும் உரைப்பவை என அறியப்படும் இவையே சித்தர் தத்துவத்தின் வேர்களாகும். இவை அறிவியலுக்கும் அப்பாற்பட்ட நிலையெனவும் கூறுவர்.
உயிரியல்
உயிரின் வடிவம். அளவு எவ்வாறிருக்கும் என்பதைத் தமிழ் மருத்துவத்தின் முதல்வராகிய திருமூலர் குறிப்பிடுகிறார். அதாவது, பசுவினது மயிர் ஒன்றின் பருமனை நூறு பங்கு செய்து, அந்த நூறில் ஒரு பருமனை ஆயிரம் பங்கு செய்தால் அதில் ஒன்றினது பருமனே அணுவாகிய உயிரின் பருமன் என்கிறார். இந்த அளவு இன்றைய அறிவியலார் கண்டறிந்த அணுவின் பருமனொடு ஒத்திருப்பதைக் காணலாம். (திருமந்திரம். செய்.1974)
உடலியல்
தமிழ் மருத்துவத்தின் வரலாறும் உடலியல் கோட்பாடும் சிந்து நதிக்கரையில் தொடங்குகிற எனலாம். சிந்துவெளி முத்திரை எழுத்துகளில் ‘எட்டு’ என்னும் எண்ணைக் குறிக்க மனித உருவம் பொறிக்கப் பட்டுள்ளது. அது,ஒரு குறியீடாகும்.
எட்டு எனும் எண்ணைக் குறிக்க ஏன் மனித உருவம் பொறிக்க வேண்டும்?
எட்டு என்ற எண்ணுக்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு?
ஒவ்வொரு மனிதரும் அவரவர் கையின் அளவுப்படி தொண்ணூற்றாறு அங்குலம் உயரம். அதாவது, எண் சாண் உடலம் என்றும், எறும்புக்கும் தன் கையால் எட்டு என்றும் உடலின் உயரம் குறிக்கப் படுகிறது. இந்த அளவு எல்லார்க்கும் பொது என்கிறது, திருமந்திரம். (திருமந்திரம். பா. 273)
மனித உயரம் தொண்ணூற்றாறு அங்குலம், எண் சாண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, உடல் தத்துவம் தொண்ணூற்றாறு என்றாயிற்று. சிந்துவெளி முத்திரையில் குறிக்கப்பட்டிருக்கும் ‘எட்டு’ தமிழ் மருத்துவத்துக்கே அடிப்படையாயிற்று. எவ்வாறென்றால், மருந்து காய்ச்சும் போது எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால் மட்டுமே அது நன்மருந்து. இதனையே, ‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்றும் வழக்குவர். எட்டுக்கு ஒன்று என்பது மருந்துக்கு மட்டுமல்ல! நன்னீரைக் கூட எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சிக் குடித்தால், அதுவும் நோயைத் தீர்க்கும் மருந்தாக மாறும்! என்பது பிறப்புக்கும் மருந்துக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து கூறும் அறிவியல் விளக்கமாகும்.
மனித உடம்பு நான்கு வகையாகும். அவை, பருவுடல், நுண்ணுடல், போர்வையுடல், முதலுடல் என்பன. (திருமந். 2089) இவை நான்கும் உயிருக்கு உறையாக அமைகின்றன. அவ்வுறைகள் தொண்ணூற்றாறு தத்துவங்களில் அடங்கும். உயிரானது நரம்பு மண்டலத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்றது. (திருமந். 2107) என்பதை அறிவியலுக்கு உடன்பாடானதே யாகும்.
நோய்த் தடுப்பு முறைகள்.
நோய் வருமுன் காப்பதும், நோய் வராமல் தடுப்பதும் வளர்ந்த மருத்துவத்தின் செயல்கள் எனலாம். அவ்வாறான செயல்கள் பல தமிழ் மருத்துவத்தில் காணப் படுகின்றன.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை கக்கல் மருந்தும், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கழிச்சல் மருந்தும் ஒரு மாத்த்திற்கு ஒரு முறை மூக்கில் நசியமும் மூன்று நாள்களுக்கு ஒரு முறை கண் மருந்தும் பயன்படுத்தினாம் நோய்கள் அண்டாது. (அகத்தியர் நயனவிதி – 500. பா.24)
பிணியணுகாவிதி
திண்ண மிரண்டுள்ளே சிக்க லடக்காமற்
பெண்ணின்பா லொன்றைப் பெருக்காமல்- உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி.
பாலுண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம்;
பகற்புணரோம்; பகற்றுயிலோம்; பயோதரமு மூத்த
ஏலஞ்சேர் குழலியரோ டிளவெயிலும் விரும்போம்;
இரண்டடக்கோம்: ஒன்றைவிடோம்: இடதுகையிற் படுப்போம்;
மூலஞ்சேர் கறிநுகரோம்: மூத்ததயிர் உண்போம்:
முதனாளிற் சமைத்தகறி யமுதெனினு மருந்தோம்:
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம்:
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே”.
உண்பதிரு பொழுதொழிய மூன்றுபொழு துண்ணோம்:
உறங்குவதி ராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம்:
பெண்கடமைத் திங்களுக்கோர் காலன்றி மருவோம்:
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீ ரருந்தோம்:
மண்பரவு கிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்:
வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்:
நண்புபெற வுண்டபின்பு குறுநடையுங் கொள்வோம்:
நமனார்க்கிங் கேதுவை நாமிருக்கு மிடத்தே”.
– பதார்த்த குண சிந்தாமணி
வனவியல் (Forest Science)
தமிழ் மருத்துவர்கள் வனவியலில் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு “கோரக்கர் மலைவாகடம்” என்னும் நூல் சான்றாகிறது. அந்நூலில் தமிழகத்தின் மலைகளையும் அவற்றில் கிடைக்கப்பெறும் மூலிகைகள் பற்றிய அனைத்துச் செய்திகளையும் விரித்துரைக்கக் காணலாம்.
தாவரவியல்
மூலிகைகளைப் பற்றிய அறிவு சித்தர்களிடையே மிகுந்திருப்பதைக் காணலாம்.
கிளிமூக்கு மரம் அதன் காயின் வடிவத்தால் ஆகுபெயராய் அம்மரத்திற்குப் பெயர் அமைந்துள்ளது. இலையின் வடிவம், பூ பூத்த மறுநாளே பழம் பழுக்கும் என்னும் அரிய செய்தியுடன், அதன் பழத்தை உண்ட உடனே காய சித்தி கிடைக்குமென்று கூறுவதைக் காணும் போது, மூலிகைகளைச் சித்தர்கள் நுட்பமாக ஆராய்ந்திருந்ததை உணரலாம். (நந்தீசர் சகல கலைஞானம். பா. 936)
மேலும், மருத்துவத்தில் பயன் படக்கூடிய மரம், செடி, கொடி, வேர், தண்டு, பட்டை, இலை, பூ, காய், கனி, கொட்டை போன்ற தாவர உறுப்புகளின் மருத்துவப் பயன்கள் அனைத்தும் கூறும் நூலாக, “பதார்த்த குண சிந்தாமணி” விளங்குகிறது.
மரணம்
மனிதன் என்று தோன்றுகின்றானோ அன்றே அவனின் இறப்பும் எழுதப்படுகிறது என்பர். மனித உயிர் உருவாகும் போதே, உயிரின் கருவில், பிறப்பு, இளமை, இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய ஆறு பருவங்களும் அமைகின்றன.
“பேறு யிளமை யின்பம் பிணி மூப்பு சாக்காடுஆறுங் கருவில மைப்பு”
என்று குறிப்பிடப்படுகிறது.
பிறப்பும், இறப்பும் மாறி மாறி வரும். உறங்குவது போலும் உறங்கி விழிப்பது போலும் எனக் கண நேரத்தில் அவ்விரண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்றும் கருதப்பட்டது.
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு”
என்னும் குறள் கூறும் கருத்து சித்தர்களுக்கு உடன்பாடானதன்று.
மரணத்தை வெல்லுதல்
மரணம் என்பது இயற்கை. அதை மாற்றிக் காண்பதே சித்தர்களின் கற்ப சாதனை என்பது போல், கற்பம் என்னும் மருத்துவ முறைகளினால், காற்றைப் பிடிக்கும் முறைகளினால் மரணத்தை வெல்ல முடியும் என்று சித்தர்கள் கூறக் காணலாம்.
பீனியல் சுரப்பு (Pineal Gland)
பீனியல் சுரப்பி என்பது மனித மூளையின் மேல்பகுதியில் அமைந்துள்ளது. இதன் இயக்கத்தை யோகத்தின் மூலமாகச் செயல்பட வைப்பதே சித்த முறையாகும். பீனியல் சுரப்பு 14 வயது வரை வளர்ச்சியடைந்து பின்னர் அதன் வளர்ச்சிக் குன்றிவிடும். பீனியல் சுரப்பி மூலம் சுரக்கும் ஹார்மோன், ‘மெலடோனின்’ எனப்படும். மெலடோனின் எனப்படும் ஹார்மோன் மனித ஆயுளை நீட்டிக்கவும் பாதுகாக்கவும் வல்லது என்பர். இதன் சுரப்பை நீட்டிக்க வாசியோகம், குண்டலி யோகம் பயன்படுகிறது. இச் சுரப்பு குறைந்தால் ஆயுளும் குறையும். மெலடோனின் சுரப்பை அதிகரிக்க யோகம், கற்பம் போன்றவை பயன்படுகின்றன.
மறைபொருள்
மறைபொருள்களில் மருந்துகளைக் குறிப்பிடப்படும் பல பாடல்கள் காணப்படுகின்றன. இதன் உட்பொருளை அறியாமல் வெளிப்படையான பொருளை அறிந்துகொண்டு தவறுகள் நிகழ்வதுண்டு. உண்மையான பொருளை அறியும் பயிற்சியும் மருத்துவ அனுபவமும் இல்லாமல் பிழைகள் நேர்வதுண்டு.
“தாசிவீடு சென்ற தறுதலைக்குச்
செம்மையாய்த் தருக செருப்படிதான்
காசும் அற்றுவிடும்; கவம் இளகும்
கதியே சைவம் என்றாடு பாம்பே”
இப்பாடல், தாசிவீடு சென்று வந்ததால் வந்த மேகவெட்டை எனும் பாலியல் நோய்க்குச் செருப்படி என்னும் மூலிகையைக் கொடுத்தால் குணமாகும் என்றும் காச நோய்க்கும் கபத்திற்கும் தாளிபத்தியம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சித்தர் சைவ நெறியையும் மருத்துவத்தையும் இணைத்துக் கூறியுள்ளார்.
கும்ப முறை
தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களில் பலர் மருத்துவர்களாகவும், அறிவியல் அறிஞர்களாகவும், மெய்ஞ்ஞானிகளாகவும் இருந்திருக்கின்றனர். இக்காலத்தில் அறிவியல் வெற்றியாகக் கருதப்பெறும் மரபணு முறையைப் போல, சித்தர்களும் தங்கள் அறிவியல் வெற்றியாகக் கும்ப முறையைக் கூறுவர். கருப்பையிலிருந்து குழந்தை பிறப்பது யோனிமுறை என்பதைப் போல, கும்பம் என்னும் கலசங்கள் மூலம் குழந்தையை உருவாக்குவதைக் கும்பமுறை என்பர். கும்ப முறை மூலம் குழந்தையை உருவாக்கும் முறையே சித்தர்களின் அறிவியல் வெற்றியாகக் கூறப் படுகிறது.
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம், இயற்கை வழி இயன்றது. மருந்துப் பொருள்களின் இயற்கை வடிவமும் ஒன்று.
உதாரணமாக,
பார்வைக்குச் சிறுநீர்ப்பை போன்றிருக்கும் அவரை விதை, சிறுநீர் அடைப்பைப் போக்கும்.
கற்பப்பை போன்றிருக்கும் கொய்யாக்காய், கற்பக் கோளாறைப் போக்கும்.
மூளை போன்றிருக்கும் அக்ரூட், மூளை வளர்ச்சிக்கு மருந்தாகிறது.
இதயம் போன்றிருக்கும் செந்தாமரை, இதய நோய்க்கு மருந்தாகிறது.
கண்ணின் மணி போன்றிருக்கும் நெல்லிக்காய், கண் நோய்க்கு மருந்தாகிறது.
உயிரணு போன்றிருக்கும் எள், உயிரணு வளர்ச்சிக்கு உதவுகிறது.
மூலிகைகளைப் பயன் படுத்திய சித்த மருத்துவர்கள், அந்த மூலிகைப் பொருள்களுக்குச் சூட்டியுள்ள காரணப்பெயரே சான்றாகும்.
இந்திய மருத்துவச் சட்டம்
இந்திய அரசு இயற்றிய ‘மருந்துகள் மற்றும் அழகு சாதன்கள்’ சட்டம் 1940’ 1945’ 1995 schedule ‘J’ என்னும் பிரிவு. 51 வகையான நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக் கூடாது என்று கூறுகிறது. அந்நோய்க்களுக்காகக் கொடுக்கப்படுகின்ற ஆங்கில மருந்துகள் நோய்களைக் குணப்படுத்த முடியாதவை என்று மருத்துவ அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட 51 நோய்களைக் குணப்படுத்தவோ தடுக்கவோ கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கின்றன என்று கூறுவது தவறானது; ஆபத்தானது; நோயாளிக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்று, உலக சுகாதர நிறுவனத்தின் எச்சரிக்கையும் இருக்கிறது.
ஆனால், நடப்பது என்ன? மருந்தில்லா நோய்களுக்கு மருத்துவ மனைகளும் சிறப்பு மருத்துவர்களும் இருக்கின்றார்களே. இச்செய்தியை இந்திய மருத்துவச் சங்கமும், தமிழ்நாடு மருத்துவக் குழுவும் பொதுமக்களுக்கு விளக்குவதில்லை. மருந்தில்லை என்று கூறப்படுகின்ற இந்த 51 நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன. ஆனால், மக்களிடம் சித்த மருத்துவம் போலியானது. நம்பத் தகுந்த மருத்துவம் இல்லையென்னும் கருத்தை பரப்புகின்றார்கள்.
சிறந்த மருத்துவத்தைப் பாதுக்காக்க வேண்டும் என்னும் எண்ணம் மக்களுக்கும் ஆட்சியாளர்க்கும் இருக்க வேண்டும். இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைச் சித்த மருந்துகளின் செயல் திறனை ஆய்வு செய்ய முன்வர வேண்டும். சித்த மருத்துவ உத்திகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் உண்மைகளை உலகுக்கு அறிவிக்க முன் வர வேண்டும். ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதைப் போல, வானியல் என்னும் மூலத்திலிருந்து தமிழ் மருத்துவத்தைத் தோற்றுவித்தவர்கள் தமிழறிஞர்கள். சங்க காலத்திலும் சங்கம் மறுவிய காலத்திலும் வானியலிலும் மருத்துவத்திலும் சிறந்திருந்து விளங்கிய மெய்ஞ்ஞான அறிஞர்களான ஆசீவக மரபினரால் உருவாக்கப் பட்டது, தமிழ் மருத்துவம். அது, தமிழகத்தின் தென்பகுதியில் சிந்தாமணி மருத்துவமாகவும், வட பகுதியில் சித்த மருத்துவமாகவும் சிறப்புற்று விளங்கியுள்ளது.
அழுத்தினால், அரசியல், நாகரீக மாற்றத்தினால், தமிழ் மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதன் முறைகளெல்லாம் தவறானவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது.
தமிழைப் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொருவரும் தமிழ் மருத்துவத்தையும் அதன் சிறப்பையும் உலகம் அறியச் செய்யவேண்டும். கலையில்லாத இனம் தலையில்லாத மனிதனாகக் கருத்தப்படுவான். தமிழ்க்கலையான சித்த மருத்துவக் கலையைப் பாதுகாக்க தமிழர்கள் முன்வரவேண்டும்.