Tuesday, 12 January 2016

அஸ்வத்தாமா உயிருடன் இருக்கிறாரா?

இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்பப்படும், மகாபாரதத்தில் வரும் ஒரு இறப்பில்லாத புராண கதாநாயகன் பற்றி நீங்கள் அறிவீர்களா? கேட்க அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது தானே? ஆனால் மிகப்பெரிய இந்திய புராணமான மகாபாரதத்தில் இவ்வகையான மர்மம் கலந்த கதைகளும் நிகழ்வுகளும் ஏராளம். இந்த புராணத்தில் உள்ள ஒவ்வொரு கதையிலும் ஒரு மர்மம் இணைந்திருக்கும். அதனால் தான் என்னவோ உலகத்திலேயே மிக நீளமான புராணமாகவும், சுவாரஸ்யமான புராணமாகவும் இது விளங்குகிறது.
பல பேருக்கு மகாபாரதம் என்பது மிகவும் குழப்பமான கதையாக விளங்கும். அதற்கு காரணம் மகாபாரதத்தில் அத்தனை கதாபாத்திரங்கள் அடங்கியுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருவரோடு ஒருவர் சம்பந்தமுடையவராக இருப்பார். இந்த புராணத்தில் பாண்டவர்கள், திரௌபதி, கௌரவர்கள் என புகழ்பெற்ற சில கதாபாத்திரங்களை சுற்றியே கதை நகர்வதால், மற்ற கதாபாத்திரங்கள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் இந்த புராணத்தில் அவர்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் அஸ்வத்தாமா.
மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமா என்ற கதாபாத்திரம் உயிருடன் இருப்பதாகவும், ஆண்டாண்டு காலமாக பூமியில் வலம் வருவதாகவும் நம்பப்படுகிறது. இறப்பற்ற இந்த நாயகனை உயிருடன் கண்டுள்ளதாகவும் பலர் கூறுகின்றனர். இந்த வதந்திகள் உண்மையோ பொய்யோ, ஆனால் அஸ்வத்தாமா பற்றிய கதையை படிப்பது கண்டிப்பாக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். அதனால் மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா என்ற இறப்பற்ற நாயகன் பற்றிய கதையை படியுங்கள்.
அஸ்வத்தாமா என்பவர் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு ஆசிரியாக விளங்கிய துரோணாச்சாரியாரின் புதல்வனாவார். துரோணாச்சாரியார் மற்றும் அவருடைய மனைவியான கிரிபிக்கு பிறந்தவர் தான் அஸ்வத்தாமா. அவரின் பிறப்பு முதலே, அவருடைய நெற்றியில் ஒரு ரத்தினக்கல் பதிக்கப்பட்டிருந்தது. அவருடைய சக்திகள் அனைத்திற்கும் இந்த கல்லே மூலாதாராமாக அமைந்தது. வில்வித்தை மற்றும் இதர போர் கலைகளில் சிறப்பாக செயலாற்றி ஒரு மிகச்சிறந்த போர் வீரராக அவர் வளர்ந்தார்.
மகாபாரத போரின் போது, கௌரவர்களின் முகாமில் இருந்து, அவருடைய தந்தையுடன் சேர்ந்து அஸ்வத்தாமா போரில் சண்டையிட்டார். தன் மகனை உயிராக நினைத்தார் துரோணாச்சாரியார். அதனால் போரின் போது அஸ்வத்தாமா இறந்து விட்டார் என்ற வதந்தியை கேள்விப்பட்ட துரோணாச்சாரியார், தன் கைகளை துறந்து தியானத்தில் ஈடுபட்டார். அப்போது திரிஷ்டட்யூம்னரால் அவர் கொல்லப்பட்டார்.
இதற்கு பழி வாங்க நினைத்த அஸ்வத்தாமா, மகாபாரத போரின் கடைசி இரவின் போது, பாண்டவர்களை கொல்வதாக நினைத்து, திரௌபதியின் ஐந்து புதல்வர்களையும் கொன்றார். தன் தவறை உணர்ந்த அவர், பாண்டவர்களை கொல்ல, சக்தி வாய்ந்த ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினார். ஆனால் சக்தி வாய்ந்த அந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டாம் என வியாச முனிவர் அவரை தடுத்து நிறுத்தினார். ஆனால் அந்த ஆயுதத்தை எப்படி பயன்படுத்தாமல் திரும்பி வைப்பது என அஸ்வத்தாமாவிற்கு தெரியவில்லை. அதனால் உத்தாராவின் கருவில் இருந்த அபிமன்யுவின் பிறக்காத குழந்தையை கொல்ல அதை அவர் ஏவினார். இதனால் பாண்டவர்களின் பரம்பரை அழிந்தது விடும் எனவும் நினைத்தார்.
அஸ்வத்தாமாவின் இந்த குணத்தை கண்டு கோபமடைந்த கிருஷ்ணர், தன் பாவத்தை சுமக்கும் விதமாக, அஸ்வத்தாமா முடிவற்ற காலம் வரை இந்த பூமியை வலம் வர வேண்டும் என்ற சாபத்தை அளித்தார். எப்போதுமே அவர் யாருடைய அன்பையும் பெற முடியாது. அதே போல் யாராலும் அவர் வரவேற்கப்பட மாட்டார். தன் நெற்றியில் உள்ள இரத்தினக்கல்லை திருப்பி கொடுக்கும் படியும் கிருஷ்ணர் கூறினார். அதனால் தன் நெற்றியில் ஏற்பட போகும் புண் என்றும் ஆறாது என்றும் சாபமளித்தார். அதனால் தான் மோட்சத்தை தேடி இன்னமும் அஸ்வத்தாமா இந்த உலகத்தில் சுற்றி திரிகிறார்.
அஸ்வத்தாமாவை கண்டிருப்பதாக பலர் கூறுகின்றனர். நெற்றியில் ஆறாத புண்ணை கொண்ட ஒரு நோயாளி மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு மருத்துவரிடம் வந்துள்ளார். தன் புண்ணுக்கு பல விதமான மருந்துகளை தடவியும் கூட அவருடைய புண் ஆறவில்லை. இந்த புண் பல காலமாக இருப்பதாகவும் அது ஆற முடியாத வகையாக உள்ளதாகவும் அந்த மருத்துவர் வியப்புடன் கூறினார். இது அஸ்வத்தாமாக்கு உள்ள புண்ணை போல் உள்ளதே என கூறி சிரித்த மருத்துவர், தன் பெட்டியை எடுத்துள்ளார். எடுத்து விட்டு திரும்பிய போது அந்த நோயாளியை காணவில்லை.
சிவலிங்கத்திற்கு இன்னமும் அஸ்வத்தாமா வந்து மலர்களால் பூஜை புரிகிறார் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இமயமலை அடிவாரத்தில் சில பழங்குடியினருடன் அஸ்வத்தாமா நடந்தும் வாழ்ந்தும் வருவதை சிலர் கண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்!!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.