Wednesday 30 September 2015

எல்லாம் சிவம்

"எல்லாம் சிவம் எதிலும் சிவம்'' என்று அறிந்து செயல்படுவதே தெய்வீகம். இந்த தெய்வீகத்தை நாம் அறிந்து தெளிய வேண்டும். எப்படி என்றால், நீ எங்கிருந்து வந்தாயோ அங்கு செல்ல வழி தெரிந்து கொள்ள வேண்டும். நாம் செல்லாத ஊருக்கு பல கோடி வழிகள் உண்டு. அதில் நாம் தேடும் வழியை மஹான்கள், யோகிகள், சித்தர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அவர்கள் சொல்லிய வழியில் நாம் பயணிக்க உதவும் கருவியே இறை நாமம்.

இந்த இறை நாமம் மட்டுமே தான் இறைவனிடம் நம்மை அழைத்து செல்லும். இதுவே உத்தமமான சத்திய வழியாகும். இறைவனிடம் பக்தி செய்யுங்கள். அதில் பயபக்தி வேண்டும். ஒரே ஒரு நாமம் ஜபமாகவும், பல நாமம் போற்றியாகவும் சொல்லுங்கள். கர்மம் போக்கினால் தான் உடல் போகும். இந்த உடல் இருக்கும்போதே கர்மத்தைப் போக்கி இறைவனை அடையுங்கள். இறைவனை அடையும் வாகனமும் இறை நாமமே. ஒருமித்த மனதோடு இறை நாமத்தை சிந்தையில் உரைத்துக் கொண்டு திருவண்ணாமலை கிரிவலம் வாருங்கள்.

பரமரகசியம் என்பது எப்போதும் ரகசியமாக இருக்கக்கூடியது.

இந்த ரகசியத்தைத்

தேடுவது யார்? - நாம்

தேடியது எது? - மனம்

எங்கு தேடுவது? - இவ்வுலகில்

எப்படி தேடுவது என்பதுதான் வழி. இந்த வழியை பல மார்க்கங்கள் கூறினாலும் அதில் ரகசியத்தை ரகசியமாக தேடுவதே சிறப்பு.

ரகசியமாக அறியும் இடம் பரவெளி

ரகசியமாக தேடும் இடம் மனவெளி,

மனவெளி, பரவெளியாகுவதே ரகசியம்.

இறை நாமத்துடன் கூடியது ஜெபம். இறை நாமத்துடன் கரைந்து நிற்பது தவம். எண்ணம் அற்ற நிலையில் இருப்பது மௌனம். இறை நாமத்தில் மட்டுமே மன அமைதியில் தெளிவு பிறக்கும். மனத் தெளிவிற்கும், பக்தியில் உயர் நிலைக்கும் போற்றியே வழி வகுக்கும். இந்த ஆயிரம் போற்றியும் ஆண்டவனை அடைய வழி வகுக்கும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.