Tuesday, 29 September 2015

சக்தி ஈர்ப்பு

பூமிக்கு ஈர்ப்பு சக்தி இருப்பது போல
ஒவ்வொரு பொருளுக்கும் ஈர்க்கும் சக்தி
உண்டு. அது ஆற்றலாக மட்டுமல்ல
அழகாலும் வசீகரித்து ஈர்க்கும். அது போல
உலகனைத்தையும் ஈர்த்து பிணைத்து
வைத்துக் கொள்ளும் ஆற்றல் ப்ரம்மத்திற்கு
உண்டு. மேல் நோக்கி வீசப்பட்ட பொருள் கீழ்
நோக்கி வருவது போல, ப்ரம்மத்திடமிருந்து
கீழ் நோக்கி வந்த ஒவ்வொரு ஜீவனும்
மீண்டும் ப்ரம்மத்திடம் செல்ல வேண்டும்
என்கிற முனைப்புடன்தான் செயல்படுகிறது.
பூமியை நோக்கிஒரு கல் வரவர எப்படி
வேகம் அதிகரிக்கிறதோ அது போல
பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் புறப்பட்ட
இடத்தை நோக்கியே திரும்பிப் போய்க்
கொண்டிருக்கின்றன. இது அறிந்தோ
அறியாமலோ நடந்து கொண்டே இருக்கிறது.
வழியறிந்து முயல்வதை யோகம்
என்கிறோம். மாயையில் உழன்று
பக்குவப்படுவதற்காக அறியாமையில் மனம்
விரும்புவதை போகம் என்கிறோம்.
பஞ்ச இந்திரியங்கள் வழியாக அவ்வப்போது
அடைகிற தற்காலிகமான இன்பத்தை போகம்
என்கிறோம். அந்த பஞ்ச இந்திரியங்களையே
கட்டி, அடக்கி, ஒடுக்கிக் கொண்டு பரமனை
நாடுவதை யோகம் என்கிறோம். யோகம்
தன்னிச்சை செயல். போகமோ அனிச்சை
செயல். போகத்தைப் பொறுத்தவரை
பனையளவு துன்பமும் தினையளவு
இன்பமும் தருவது. ஏன் அப்படிச்
சொல்கிறேன் என்றால், இதில் பெறும்
இன்பமனைத்தும் துன்பத்தையே விளைவாகத்
தரக்கூடியவைகளாகும். அதனால்தான்
மனிதன் மேலும் மேலும் கீழ்மையுறுகிறான்.
ஆனால் யோகத்தைப் பொறுத்த வரை
பேரின்பத்தை சாதகன் அடையாத போதும்
அதில் இன்பம் உண்டு. யோகத்தை தேடி
அலைதலிலுதம் இன்பமுண்டு, யோகம்
கூடாமல் தோல்வி அடைதலிலும் கூட
இன்பமுண்டு.
எப்படி சூரியனுக்கு முன் இருள்
இல்லையோ அதுபோல யோகநாட்டம்
உள்ளவர்களுக்குத் துன்பமென்பது கொஞ்சம்
கூடக் கிடையாது. ஏனென்றால் மனம் துன்பம்,
இன்பம் என்ற பேதமற்ற நிலையை அடைந்து
விடுகிறது. போகத்தில் மரத்து விடுகிறது
மனம், எனவே வாடிப் போய் விடுகிறது.
யோகத்திலோ அது சலித்து விடுகிறது,
அதாவது மாற்றத்தை, பரநாட்டத்தை
விரும்புவதால் அங்கே செயலற்ற நிலையில்
மனம் எப்போதும் அன்றலர்ந்த தாமரை மலர்
போல விரிந்து கிடக்கிறது. அந்த விரிந்த
மனநிலையே பேரின்பத்திற்கு
ஏதுவானதாகும். பரநாட்டம் கொள்பவன்
ஆடவும், பாடவும், தேடவும் செய்கிறான்.
எட்டிப் பிடிக்காத நிலையிலும் அவன்
ஆனந்தத்தில் திளைத்திருக்கிறான். ஏமாற்றம்
என்பது அவனுக்கு இல்லை. போகத்தைப்
பொறுத்த வரை அடைந்த எல்லாவற்றையும்
ஒரு நாள் இழக்க வேண்டிய ஏமாற்றமடையும்
நிலை வரும். ஆனால், யோகத்தில் இழப்பு
என்பதே கிடையாது. இன்பம் இன்பம் இன்பம்
தான். அதனால்தான் அதைப் பேரின்பம்
என்கிறார்கள்.
இராம் மனோகர

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.