Sunday 31 December 2017

ஓஷோவின் தியானம் .


ஓஷோவின் தியானம் .

ஓஷோவின் தியானம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது.

உள்ளே நடக்கும் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாக இருக்க வலியுறுத்துகிறது.

எண்ணங்களை எந்த விதமானமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.

இனி இந்த எளிய தியான முறைக்குச் செல்லலாம்.

1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்

3) இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.

4) கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும். ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.

5) ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா? ஒரு எண்ணம் முடிந்து இன்னொரு எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.

6) எண்ணம்-இடைவெளி-எண்ணம்-இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமரிசனமும் இன்றி கவனியுங்கள். ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.

7) ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியா விட்டால் தியானமும் நிகழாது.

8) எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று தான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம். சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள். இது தான் சரியான மனநிலை.

9) தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம் உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும். அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும் உங்களிடம் தங்க ஆரம்பிக்கும்.

தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும்.

ஓஷோவின் குறிக்கோளே அது தான்.
மிக எளிதாகத் தோன்றும் இந்த தியானத்தைப் பயிற்சியாக செயல்படுத்துகிற போது அந்த அளவு எளிதானதாக இருப்பதில்லை என்பது அனுபவம்.

ஆனால் தொடர்பவர்கள் கண்டிப்பாக இதில் வெற்றி அடைய முடியும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.