Saturday 23 January 2016

தை பூசம்

தைப்பூசம்.
ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் கூடி வரும் நன்னாளில் அனைத்து சிவாலயங்களிலும், அறுபடை வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும் புனித நாளாகும்.
புராணத் தகவல்கள் :
1. தைப்பூச தினத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
2. சிவபெருமான் தனது சக்தியான உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் இந்திராதி தேவர்களுக்கு ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம்.
3. சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, சித்சபேசனான நடராஜப் பெருமானை, இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இப்புண்ணிய தினத்தன்று தான்.
4. ஒரு தைப்பூச நன்னாளில்தான் மயிலாப்பூரில் திருஞானசம்பந்தர் பூம்பாவை என்ற பெண்ணை அஸ்தி கலசத்திலிருந்து உயிர்மீட்டார்.
5. இந்தப் புண்ணியத் திருநாளிலேயே அன்னை சக்தி பழனி மலையில் குமரன் கார்த்திகேயனுக்கு அசுரர்களை அழிக்க சக்திவேலை வழங்கி அருள் புரிந்தாள்.
6. முருகப் பெருமான் வள்ளியை திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சமேதராக தைப்பூசத்தன்றுதான் காட்சியளித்தாராம்.
7. தைப்பூசத்தன்று ஸ்ரீ ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு போய் கொடுப்பார்.
தை பூசம் கொண்டாடும் ஒரே வைணவத்தலம்:
தைப்பூசம் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் மிகவும் விசேஷமாக கொண்டாடப் பட்டாலும், ஒரு வைணவத் தலத்திலும் தைப்பூசம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
அந்தத் தலம் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலாகும். இங்கு காவேரி அன்னை மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருக்கிறாள். தை மாதம் பூச நட்சத்திரத்தன்று தான் காவிரிக்கு நேரில் காட்சி கொடுத்து வரம் அளித்தார்.
தைப்பூச விரத முறை :
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும்.
தேவாரம், திருவாசகம் போன்ற சிவஞான நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலையிலும் குளித்து விட்டு சிவபூஜை செய்ய வேண்டும்.
உணவு உண்ணாமல், நண்பகல் 1 வேளை பால், பழம் உண்டு மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து அடுத்த நாள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பவர்கள், அவர் எழுந்தருளியிருக
்கும் கோவிலுக்குச் சென்று வழிபடுவதோடு கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றைய தினம் முழுவதும் பாராயணம் செய்ய வேண்டும்.
ஸ்தல விசேஷங்கள் மற்றும் வழிபாடுகள் :
1. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள்.
2. தை பூசத்தன்று முருகன் தாருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது. எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
3. தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
4. தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிற
து.
5. திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து, அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரம்மஹத்தி, கோயில் வாசலில் நின்று விட்டதால்,அங்கு கோயிலின் வாயிலில் ஒரு பிரம்மஹத்தி வடிவம் அமைக்கப்பட்டுள்
ளது.
6. தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்த பார்வதி தேவியான காந்திமதி அம்மனுக்கு நெல்லையப்பர் அருள்பாலித்த நாளும் இதுவே. எனவே தைப்பூசத்தன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் விழாக்கோலமாக இருக்கும்.
7. வள்ளலார் ஜோதியில் கலந்ததும் ஒரு தைப்பூசத்தில்தான். தைப்பூசத்தன்று மட்டுமே ஞான சபையில் ஏழு திரைகள் விலகிய நிலையில், ஜோதி தரிசனம் காண முடியும். அன்று காலை 6.30 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என ஆறு நேரங்களில் ஏழு திரைகளும் நீக்கப்படும்.
ஓம் நமசிவாய
ஓம் சரவணபவ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.