Wednesday, 26 April 2017

வைரத்தைக் கண்டறிவது

*ஒரிஜினல் வைரத்தைக் கண்டறிவது எப்படி?*

வைர ஆபரணங்களின் மீதான மக்களின் ஆர்வம் இப்போது பெருகி வருகிறது. இந்நிலையில், தரம் குறைவான மற்றும் போலி வைர நகைகளின் புழக்கமும் அதிகரித்து வருவது குறிப்பிடப்பட வேண்டியது.

நவரத்தினங்களில் ஒன்றான வைரம் படிக நிலையில் உள்ள, கார்பன் மூலக்கூறுகளால் ஆன கடின மான பொருள். பூமிக்குக் கீழே 140-190 கிலோமீட்டர் ஆழத்தில், 1050-1750 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் தொடர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் புதைந்திருக்கும்போது கார்பன் மூலக்கூறுகள் வைரமாக மாறுகின்றன.

எட்டாம் நூற்றாண்டுவாக்கில் இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தின் கோல்கொண்டாவில்தான் முதன்முதலாக வைரம் கிடைக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே வைரம் பெருமளவில் கிடைக்கிறது.

*வைரம் வாங்கும் முன்..!*

வைரத்தின் தரத்தைப் பரிசோதித்து அளிக்கப்படும் GIA, AGS தரச்சான்றிதழ்கள் பெற்றவற்றையே வாங்கவும்.

உலகம் முழுக்க நான்கு விஷயங்களைப் (4C) பொறுத்தே வைரத்தின் மதிப்பு மற்றும் தரம் தீர்மானிக்கப்படும். அவை…

* Cut – வெட்டுத் தரம்…*
வைரத்தின் வெட்டுத் தோற்றத்தைப் பொறுத்து, அது பிரதிபலிக்கும் ஒளியின் அளவும், அதன் மதிப்பும் அதிகரிக்கும். சிறப்பான வெட்டுடைய வைரத்தில் கண்ணுக்குத் தெரியாத கரும்புள்ளிகள் குறைவாக இருக்கும் என்பதால், அதன் விலையும் நிறமும் அதிகம்.

*Color – நிறம்…* வைரம் இயற்கையில் மஞ்சள் முதல் பச்சை நிறம் வரை பல்வேறு நிறங்களில் கிடைக்கப் பெற்றாலும், நிறமற்றவை எனக் கூறப்படும் வெள்ளை நிற வைரமே அதிக மதிப்புடையது.

* Clarity – தெளிவு…*
பெரும்பாலான வைரங்களில் அதன் தரத்தைக் குறைக்கும் காரணிகளான வடுக்கள் மற்றும் வெட்டுக்கள் இருக்கும். எனவே, அவை இல்லாத வைரங்கள் மிகுந்த மதிப்புடையவையாகக் கருதப்படுகின்றன. இந்தக் குறைபாட்டை பிரத்யேகக் கண்ணாடி கொண்டுதான் காண இயலும்.

*carat – காரட்…*
பல ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் வைரத்தின் எடையை கணக்கிட, ஒரே எடையைக் கொண்ட விதையான காரப் விதை (Carob Seeds) பயன்படுத்தப்பட்டது. ஒரு விதையின் எடை 200 மில்லிகிராம் என்பதால், அதை ஒரு காரட் என்று அழைத்தனர். இதுவே வைரத்தின் எடையைக் கணக்கிடும் அளவீடாக அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

ஒளிச்சேர்க்கை

*கண்டுபிடிப்பு:* ஒளிச்சேர்க்கை (Photosynthesis)

*கண்டறிந்தவர்:* ஜன் இங்கென்ஹௌஸ் (Jan Ingenhousz)

*காலம்:*1779

*உலகம் முழுவதிலும் தாவரங்கள் வளர்வதற்கும் பரவி இருப்பதற்கும் முக்கியக் காரணமே ஒளிச்சேர்க்கையாகும். மேலும், தாவரங்கள் கரியமில வாயுவை உட்கொண்டு பிராணவாயுவை வெளியிடுவதும் ஒளிச்சேர்க்கை என்னும் செயலால் தான் நிகழ்கின்றது. விஞ்ஞானி ஜன் இங்கென்ஹௌஸின் ஒளிச்சேர்க்கையைப் பற்றிய அரிய கண்டுபிடிப்பு நாம் புவியின் காற்றுமண்டலத்தில் கரியமில வாயு மற்றும் பிராண வாயுவைப் பற்றி அறிந்து கொள்ள பெரிதும் உதவிகரமாக இருந்தது.

*1730ம் ஆண்டு நெதர்லாந்தின் ப்ரேடா எனுமிடத்தில் பிறந்தார் ஜன் இங்கென்ஹௌஸ். ஒரு மருத்துவராகப் பட்டம் பெற்று தன் மருத்துவச் சேவையை அந்த ஊரிலேயே துவங்கினார் இளம் ஜன் இங்கென்ஹௌஸ். 1774ல் பிரிஸ்ட்லி ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்த தன் ஆய்வின் போது ஒரு குடுவைக்குள் ஆக்ஸிஜனை நிரப்பி அதற்குள் ஒரு குச்சியை எரிய வைத்து அதுவாக அணைந்து போகச் செய்தார். இதனால் அந்தக் குடுவைக்குள் வெறும் கரியமில வாயு மட்டுமே இருந்தது. அதற்குள் ஒரு நீரில் மிதக்கும் மிண்ட் செடியைக் காட்டி அந்த வாயுவால் செடிக்கு ஏற்படும் விளைவைக் கண்டறிய முற்பட்டார். அந்தச் செடி சாகாமல் பிழைத்துக் கொண்டது. இரண்டு மாதங்கள் கழித்து அதற்குள் ஒரு எலியை விட்டுப் பார்க்கும் போது எலி பிழைத்திருக்கக் கண்டார். இதன் மூலம் மிண்ட் செடி கரியமில வாயுவில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்கியது கண்டறியப்பட்டது. ஆனால், இது எல்லா சமயங்களிலும் இதே போலவே நடைபெறவில்லை! பல சமயங்களில் தோல்வியிலும் முடிந்தது! எனவே இது புதிரான ஒன்றாக இருக்கின்றது என்று ப்ரிஸ்ட்லி சோதனையைக் கைவிட்டார்.

*இதைப் பற்றி அறிந்த ஜன், இந்தப் புதிரை எப்படியாவது விடுவிப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 500 சோதனை முயற்சிகளில் ஈடுபட்டார் ஜன். எப்படியெல்லாம் சோதனை செய்ய முடியுமோ, என்னென்ன மாற்றங்களுக்கெல்லாம் ஈடுபடுத்த முடியுமோ எல்லாவற்றிலும் முயற்சி செய்தார். அவர் ஒரு தாவரம் வெளியிடும் வாயுவைப் பிடிப்பதற்கு இரண்டு வழிமுறைகள் வைத்திருந்தார். ஒன்று தாவரத்தைச் சுற்றி ஒரு குடுவையை வைத்திருப்பது. மற்றொன்று தாவரத்தை நீரில் மூழ்க வைத்துச் சோதனை செய்வது.

*இதில் அவரால் நீரில் மூழ்க வைத்துச் சோதனை செய்வதில் தான் எளிதாக வாயுவைப் பிடிக்க முடிந்தது. ஏனெனில் தாவரங்களிலிருந்து வாயு வெளியாகும் போது சிறு குமிழிகள் தோன்றுவதை நேரடியாகக் கண்ணால் காண முடிந்தது. ஒவ்வொரு முறை வாயுவைப் பிடிக்கும் போது அது மெழுகுவர்த்தியை எரிய விடுகின்றதா அணைத்து விடுகின்றதா என்று சோதனை செய்தார்.

*அப்போது தான் அவர் ஒரு அரிய உண்மையைக் கண்டறிந்தார். மனிதர்கள்/விலங்குகள் ஆக்ஸிஜனை உட்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகின்றார்கள். தாவரங்கள் அப்படியே தலைகீழாக மாற்றிச் செய்கின்றன. சூரிய ஒளியில் இருக்கும் தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளிவிடுகின்றன. அதே சமயத்தில் இரவு நேரத்திலும், நிழலிலும் இருக்கும் தாவரங்கள் மனிதர்களைப் போலவே ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்ஸைடை வெளிவிடுகின்றன என்று கண்டறிந்தார் ஜன்.

*ஆனால் அவை வெளிவிடும் ஆக்ஸிஜன் அவை உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகும். சூரிய ஒளியில் நீரில் மூழ்கி இருக்கும் தாவரம் சுத்தமான ஆக்ஸிஜனை நீர்க்குமிழியாக வெளியிடுவதை நேராகக் காண முடிந்தது. இரவானதும் எந்த நீர்க்குமிழியும் உருவாகவில்லை. ஆனால், வெகுநேரம் கழித்து கார்பன் டை ஆக்ஸைடு வெளியாக ஆரம்பிக்கின்றது. இந்த வாயு மெழுகுவர்த்தியை எரிய விடாமல் அணைத்து விட்டது! அதே செடியை சூரிய ஒளியில் வைத்ததும் உடனே ஆக்ஸிஜனை வெளிவிட ஆரம்பித்து விடுகின்றது.

*ஆக, இந்த வாயுக்கள் வெளியிடுவது சூரிய ஒளியைச் சார்ந்து இருக்கின்றது என்று கண்டறிந்தார் ஜன். இதுவரை எல்லோரும் நம்பியிருந்த தாவரங்கள் புதிய இலைகள், தண்டுகளை உருவாக்க நிலத்திலிருந்து நிறையை (Mass) எடுத்துக் கொள்கின்றன என்ற கொள்கை தவறானது என்று முதன்முதலில் கண்டறிந்தவராகின்றார் ஜன். மாறாகத் தாவரங்கள் சூரிய ஒளியைக் கொண்டு தான் உறிஞ்சும் கார்பன் டை ஆக்ஸைடிலுள்ள கார்பனை (Mass) வளர்வதற்காக எடுத்துக் கொண்டு, ஆக்ஸிஜனைப் பிரித்து வெளிவிடுகின்றன என்று கண்டறியப்பட்டது!

*போட்டோ சிந்தசிஸ் எனப்படும் சொல் சில ஆண்டுகள் கழித்தே தாவரங்களின் இந்தச் செயல்பாட்டுக்கு வழங்கப்பட்டது.

*ஒளிச்சேர்க்கையைக் கண்டறிந்ததன் மூலம் ஜன் இங்கென்ஹௌஸ் ஒரு அரிய அறிவியல் உண்மையை உலகம் அறிந்து கொள்ள வழி செய்துள்ளர்.

Thursday, 20 April 2017

தர்ப்பை

தர்ப்பையின் மகிமை !
தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் ‘குசா’ என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. அவருடைய பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள்.
* தர்ப்பைப்புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.
* பாலும், சிறுநீரும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
* சிறுநீரக வலிக்குக் குணமளிக்கிறது.
* பாம்புக் கடி விஷத்தை அகற்றுகிறது.
* தர்ப்பை புல் பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை சுத்தம் செய்கிறது.
* சிறநீரக கற்களைக் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.
* உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது. மொத்தத்தில் இது சிறுநீரக நோய் நிவாரணி என்று வேதங்கள் கூறுகின்றன.
உயிரைக் குடிக்கும் நோய்களில் கிட்னிஃபெயிலியர்஠ ?ான் மோசமானது. ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் தர்ப்பை புல்லை பதப்படுத்தி மருந்தாகத் தருகின்றனர். அதனால் டயாலிஸிஸ் செய்யத் தேவையில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.
50 வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை இல்லாத காலக்கட்டத்தில் மக்கள் இறைவனை வணங்கிவிட்டு வைத்தியர் தரும் தர்ப்ைப்புல் மருந்தைத்தான் பயன்படுத்தியதாக வேதங்கள் கூறுகின்றன.
இந்து சமுதாயத்தில் நன்றியைச் செலுத்தும் பழக்கம் அதிகளவில் இருப்பதால் தனக்கு வாழ்வளித்த தர்ப்பைப்புல்லை வணங்கும் பழக்கம் உள்ளது.
யுனானி மருத்துவத்தில் தர்ப்பைப்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுக஠ ?றது. இதை முறையாகப் பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.
தர்ப்பையின் மகிமை, இந்துக்களின் நம்பிக்கை:
தர்ப்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்துவார்க. தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது.
மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான் கோவில் கும்பாபிஷேகங்களி தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்க
தர்ப்பையின் சாம்பலால்தான் கோவிலில் உள்ள விக்ரங்களையும், பாத்திரங்களையும் துலக்குவார்கள். எல்லா விதமான ஆசனங்களையும்விட தர்ப்பாசனம் சிறந்தது என்பார்கள். பிரேத காரியங்களில் ஒரு தர்ப்பையாலும், கப காரியங்களில் இரண்டு தர்ப்பைகளாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்ப்பைகளாலும் தேவகாரியங்களில் ஐந்து தர்ப்பைகளாலும் சாந்தி, கர்மா போன்றவற்றில் ஆறு தர்ப்பைகளாலும் மோதிரம் போல் முடிய வேண்டும். இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தானம், பித்ரு தர்ப்பணம் முதலியவற்றில் கையில் தர்ப்பை மோதிரம் போட்டுக் கொள்ளாமல் செய்வது உரிய பலனைத் தராது என்பார்கள்.
கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம். எனவேதான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய கிருமிகளால் கெடமாமலிக்க தூய்மையான தர்ப்பையைப் பரப்புகிறார்கள். தர்ப்பை மோதிரத்தை அணிந்துதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பதும் வழக்கமாக உள்ளது.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்:
திருநள்ளாறு கோயிலில் தருப்பைப்புல் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.
சங்க இலக்கியம்:
‘தருப்பை’ என்பது ஒருவகையான நீளமான புல் ஆகும். இதனைக் கொண்டு கூரைவேயப்படும் என்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனா. பெரும் பாணாற்றுப்படை என்னும் நூலில் சங்க இலக்கியப்பெயராக தருப்பை எனவும், உலக வழக்குப் பெயராக தர்ப்பை, குசப்புல், தருப்பை, நாணல் எனவும் வழங்கப்படுகிறது. இது புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும்

Wednesday, 19 April 2017

செங்காந்தள் மலர்.

*தமிழக அரசின் மாநில மலருக்கு உலக அளவில் வரவேற்பு.*

*புற்றுநோய்க்கு மருந்தாகும் செங்காந்தள் மலர்.*

தமிழ்நாடு அரசின் மாநில மலரான செங்காந்தள் அழிவின் விளிம்பில் உள்ள நிலையில், புற்று நோய் தீர்க்கக் கூடிய அரிய மருத்துவ குணம் கொண்டுள்ளதால், உலக அளவில் அதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழக அரசின் மலராக செங்காந்தள் மலர் போற்றப்படுகிறது. சங்க இலக்கியமான பத்துப் பாட்டு, எட்டுத்தொகை ஆகியவற்றில்ஏழு இடங்களில் செங்காந்தள் மலர் இடம் பெற்றுள்ளது. இதில் 64 இடங்களில் காந்தள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. செங்காந்தள் மலர் உயர்ந்த மலைகளிலும், மலை முகடு, சரிவுகளிலும் அதிக அளவு காணப்படும். மலரின் நிறம் நெருப்பு போன்றதாக வும், குருதி வண்ணம் மிக்கதாகவும், ஒளி பொருந்தியதாகவும் புலவர்களால் வர்ணிக்கப் பட்டுள்ளது. அந்தக் காலத்தில் வேடுவர்களிடம் செங்காந்தள் மலர்களைச் சூடும் பழக்கம் இருந்துள்ளது. மற்ற பெண்களும் பிற மலர்களுடன் செங்காந்தள் மலரைக் கோர்த்து சூடி மகிழ்ந்துள்ளனர்.

தேன் மிகுதியாகக் காணப்படும் செங்காந்தள் மலரை எப்போதும் வண்டினங்கள் வட்டமிட்டுக் கொண்டே இருக்குமாம். பிற மலர்கள் பூத்து உதிரும். ஆனால், செங்காந்தள் மலர் வாடினாலும் உதிர்வது இல்லை. கிராமங்களில் கண்வலி பூ என்றும் இதனை அழைப்பது உண்டு. இந்தப் பூவை உற்றுப் பார்த்தால் கண்வலி ஏற்படும் என்பதால் அவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

*உயிர் காக்கும் மகத்துவம்*

செங்காந்தள் மலர் புற்று நோயைத் தீர்க்கக் கூடிய அரிய மருத்துவ குணம் கொண்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் பரவாமல் தடுக்கக் கூடிய கால்சிசின், குலோரியோசின் மருந்துகள் செங்காந்தள் செடியில் உள்ள விதை களிலும், கிழங்குகளிலும் அதிக அளவு உள்ளது. இதில் இருந்து மருந்துகளை எடுத்து, ஹீமோ தெரபி மூலம் புற்றுநோய் பரவாமல் தடுக்கலாம் என சொல்லப்படுகிறது. செங்காந்தள் செடியின் விதையை ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு மருந்து நிறுவனங்களும் அதிகஅளவு வாங்குகின்றன.

*உலக அளவில் மவுசு*

தமிழகத்தில் திண்டுக்கல், ஈரோடு மாவட்டம் சித்தோடு, துறையூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் அதிக அளவில் செங்காந்தள் மலரை பயிரிட்டு வருகின்றனர். விதையை வெளிநாட்டு நிறுவனங்கள் கிலோ ரூ.850-க்கு கொள்முதல் செய்கின்றன.

இதன் கிழங்கிலும் மருத்துவ குணம் இருந்தாலும், ஐந்தாண்டுகள் வரை இந்தப் பயிர் வளர்வதால், இதன் விதையையே அதிக அளவு வாங்குகின்றனர். செங்காந்தள் கிழங்கு கிலோ 300 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. குறைந்த தண்ணீர் இருந்தாலே இந்தப் பயிர் செழித்து வளரும் தன்மை கொண்டது. தமிழக மலரில் புற்று நோய் தீர்க்கும் மருத்துவ குணத்தால், உலக அளவில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

*அழிவின் விளிம்பில் செங்காந்தள்*

இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உயிர் தொழில்நுட்பவியல் பேராசிரியர் பி.வெங்கடாசலம் கூறியதாவது:

‘‘தமிழகத்தில் அழிந்து வரும் தாவரங்களை பாதுகாக்கும் முக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். திசு வளர்ப்பு மூலம் அழிந்து வரும் தாவரங்களை சோதனைக் கூடங்களில் வளர்த்து, புத்துயிர் அளித்து, நிலங்களில் விளைவித்து வருகிறோம்.

மாநில மலரான செங்காந்தள் அழிந்து வரும் தாவரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. வனத்துறையின் சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள அழிந்து வரும் தாவர இனங்களில் செங்காந்தள் மலரும் உள்ளது.

புற்றுநோயைத் தீர்க்கக் கூடிய அரிய மருத்துவ குணம் கொண்ட செங்காந்தள் மலரை அழிவின் விளிம்பில் இருந்து காத்திட, விவசாயிகள் பெருவாரியான இடங்களில் பயிரிட வேண்டும். இதன் மூலம் உயிர் காக்கும் மருந்தும், மாநில மலரின் பெருமையும் வருங்காலத்தில் நிலை நிறுத்தப்படும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்...

Tuesday, 18 April 2017

கடி ஜோக்ஸ்

கடி ஜோக்ஸ்

1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம் . ஆனா அதால லோக்கல் கால் , STD கால் , ISD கால்
even missed கால் கூட பண்ண முடியாது !

2. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம் .... காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா
ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா ?

3. திருவள்ளுவர் 1330 குரல் எழுதி இருந்தாலும் , அவரால ஒரு குரலில் தான் பேச
முடியும்

4. "என்ன தான் உன் தலை சுத்தினாலும் , உன் முதுகை நீ பாக்க முடியுமா ?"

5. மீன் பிடிக்கிறவன மீனவன் -ன்னு சொல்லலாம் . நாய் பிடிக்கிறவன நாய் அவன் - ன்னு
சொல்ல முடியுமா ?

6. என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் , அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாது .

7. தேள் கொட்டினா வலிக்கும் ... பாம்பு கொட்டினா வலிக்கும் .. முடி கொட்டினா வலிக்குமா ?

8. ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... பிளட் டெஸ்ட்ல
பிட் அடிக்க முடியுமா ?

9. பொங்கலுக்கு கவர்மெண்ட்லே லீவு குடுப்பாங்க ... அனா இட்லி தோசைக்கு குடுப்பாங்களா ?!

10. கோலம்மாவில் கோலம் போடலாம் . கடலை மாவில் கடலை போட முடியுமா ?!

11. லைப் ல ஒண்ணுமே இல்ல ந போர் அடிக்கும் ... தலைல ஒண்ணுமே இல்லைனா கிலேர் அடிக்கும் ...

12.        7 பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்தாலும் ... பாஸ்ட் பூட் கடைலே
நின்னுகிட்டு தான் சாப்பிடணும் !

13. இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சு என்ஜினீயர் ஆகலாம் , ப்ரெசிடெண்சி காலேஜ்ல
படிச்சு ப்ரெசிடெண்ட் ஆக முடியுமா ?!

14. ஆட்டோக்கு ஆடோனு பேர் இருந்தாலும் மனுவால் ஆ தான் டிரைவ் பண்ண முடியும் ..
.
15. தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ... ஆனா ...இருமல் மருந்து சாப்பிட்டா
இருமல் வராது !

16. வாழ மரம் தார் போடும் ! ஆனா அதை வச்சு ரோடு போட முடியுமா ?

17. 'ஹாண்டு வாஷ் 'நா கை கழுவறது , 'பேஷ் வாஷ் 'நா முகம் கழுவறது , அப்போ
'பிரைன் வாஷ் ' ந பிரைன் ந கழுவறதா ?

18. டி கப் லே டி இருக்கும் . அப்போ வேர்ல்ட் கப் லே வேர்ல்ட் இருக்குமா ?

19. செல் மூலமா sms அனுப்பலாம் , ஆனா sms மூலமா செல்ல அனுப்ப முடியாது ?

20. பால்கோவா பாலில் இருந்து பண்ணலாம் , ஆனா ரசகுல்லாவை ரசத்தில் இருந்து பண்ண
முடியுமா ?

21. பல் வலி வந்தா பல்ல புடுங்காலம் ....அனா ... கால் வலி வந்தா கால புடுங்க
முடியுமா ?! இல்ல தலை வலி வந்தா , தலையைதான் புடுங்க முடியுமா ?

22. சண்டே அன்னிக்கு சண்டை போட முடியும் , ஆனா monday அன்னிக்கு மண்டைய போட்டால்
விபரிதமா ஆயிடும் !!!

Sunday, 16 April 2017

பக்குவம்

*பக்குவம்* -
கவியரசு கண்ணதாசன்

🌼கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.

🌼கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது.

🌼இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.

🌼ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.

🌼இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.

🌼வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

🌼பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.

🌼பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.

🌼நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.

🌼இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.

🌼நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.

🌼கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.

🌼காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

🌼விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.

🌼எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு `அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.

🌼எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.

🌼பக்குவமற்ற நிலை என்பது இரண்டு `எக்ஸ்ட்ரீம்’ நிலை.

🌼ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.

🌼பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.

🌼மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.

🌼`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி; முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!’

🌼இதுதான் அந்தப் பழமொழி.

🌼பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.

🌼ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

🌼இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை.

🌼பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

🌼ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.

🌼நாற்பதிற்கு மேலேதானே `இது வாய்வு’, `இது பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.

🌼`டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.

🌼`முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.

🌼அந்த நிலையில் `எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்’ என்கிற `திமிர்’ வருகிறது.

🌼அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, `இதைத்தான் செய்யலாம்’, `இப்படித்தான் செய்யலாம்’ என்ற புத்தி வருகிறது.

🌼இனி விஷயத்திற்கு வருகிறேன்.

🌼`ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’ என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.

🌼உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.

🌼தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.

🌼அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.

🌼இன்றைய பக்குவம் இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால், எனது அரசியலில்கூட முரண்பாடு தோன்றியிருக்காது.

🌼வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.

🌼ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.

🌼சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.

🌼முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து.

🌼இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.

🌼மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு நம்பிக்கை கொண்ட ஞானநிலை.

🌼இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு.

🌼சுவாமி விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே வளர்ந்த மரங்கள் உண்டு.

🌼அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.

🌼மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!

🌼எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’ என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

🌼ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும் நம்முடைய நாட்டிலே உண்டு.

🌼தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் நம்முடைய நாட்டிலே மிக அதிகம்.

🌼ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும்.

🌼விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.

🌼தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.

🌼`மனப்பக்குவம்’ என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை.

🌼அந்த நிலையில் எதையுமே `இல்லை’ என்று மறுக்கின்ற எண்ணம் வராது.

🌼`இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.

🌼எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில் “நாஸ்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்” என்றும், “ஆஸ்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும், “கடவுள் இல்லை என்பதை நாஸ்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்” என்றும், “உண்டு என்பதற்கு ஆஸ்திகன் ஒழுங்காக விளக்கம் தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார்.

🌼நல்லது.

🌼`இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை.

🌼எதைக் கேட்டாலும் `இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.

🌼ஆனால் `உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.

🌼“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்.

🌼ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

🌼பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.

🌼நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.

🌼காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் `இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.

🌼நன்றாகத் தலையாட்டத் தெரிந்த அழகர் கோயில் மாட்டை விடவா அவன் உயர்ந்து விட்டான்.

🌼ஆனால், ஆஸ்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு காரணம் சொல்லியாக வேண்டும்.

🌼சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.

🌼ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.

🌼ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான்.

🌼ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

🌼அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.

🌼வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

🌼ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன’ என்று சொல்லத் தெரிகிறதே தவிர, அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

🌼பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.

🌼“கோயிலுக்குப் போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?”

🌼“அப்படிக் கோயிலிலே என்ன இருக்கிறது?” என்று நாஸ்திகன் கேட்கிறான்.

🌼அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில், `அந்தத் தேங்காய்க்குள் என்ன இருக்கிறது?’ என்பது அவனுக்குத் தெரியுமா?

🌼அதில் வழுக்கையும் இருக்கலாம், முற்றிய காயும் இருக்கலாம்.

🌼ஆகவே, உடைத்த பின்பே காயைக் கண்டு கொள்ளும் மனிதன், உணர்ந்த பின்பு தெய்வத்தைக் காண முடியும் என்பது உறுதி.

🌼`கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் `எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே!

🌼`மரணம்’ என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது.

🌼எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாஸ்திகர் கூட தமது அந்திம காலத்தில் யார் கொடுத்த விபூதிகளையும் பூசிக் கொண்டார்கள்.

🌼மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று நிச்சயமாகத் தெரியும் வரை ஈசுவரன் ஒருவன் இருப்பது உறுதி.

🌼நன்கு பக்குவப்பட்டவர்கள், தம் வாழ்நாளிலேயே காணமுடிகிறது.

🌼இப்போதெல்லாம், `போலித்தனம் எது? பொய் எது?’ என்பதைக் கண்டுகொள்ளக்கூடிய தெளிவு எனக்கு வந்து விட்டது.

🌼காரணம், வயது மட்டுமல்ல, பக்குவம்.

🌼செருப்புப் போடாத காலத்தில், மலத்தை மிதித்திருக்கிறேன். அதனால், இப்போது செருப்புப் போடுகிறேன்.

🌼கடலை மாவில் செய்த பலகாரத்தைச் சிறுவயதில் விரும்பிச் சாப்பிட்டேன். இப்போது அது தவறு என்பதை உணருகிறேன்.

🌼என் முன்னால் ஒரு வாதியையும், பிரதிவாதியையும் கொண்டு வந்து நிறுத்தி, `யார் நிரபராதி’ என்று சொல்லச் சொன்னால் அவர்களது வாக்குமூலங்கள் இல்லாமலேயே, நான் அவர்களைக் கண்டுபிடிப்பேன்.

🌼என்னுடைய தீர்க்கதரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; அனுபவம்.

🌼தலைப்பை மீண்டும் நினைவுபடுத்தினால், அதன் பெயரே `பக்குவம்’.

🌷பக்குவமாய் வாழுங்கள்;
வாழ்வதன் பயனை உணருங்கள்;
வாழ்வின் பலனை அனுபவியுங்கள்🌷