Friday, 17 March 2017

தியானம்

*தியானம் என்றால் என்ன?*

ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம்.
அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல
முடியாத இயலாமை.

ஒருநாள் மூவரும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது, சிறுவன் பகவானை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான்.

*தியானம் என்றால் என்ன?*
பகவான்: சிரித்துக் கொண்டே அந்தச்
சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.

சிறுவனிடம்,
*"நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும்.*

அதே மாதிரி
*எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது.* புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.

சிறுவனுக்கு ஒரே உற்சாகம்.

சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்.

சிறுவன் *மகர்ஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒருகையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான்.*

சிறுவனைச்
சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் பகவான்.

அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன்
பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே
மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.

ரமணர் புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை.
தோசையோ சிறுத்து ஒரு சிறு
விள்ளலாக மாறியிருந்தது இப்போது.
சிறுவனும் அந்த விள்ளலில் கையை
வைத்தபடி
எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான்.

சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.

*எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.*

*"இரண்டு 'ம்' களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ,*
அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும்,

அடிநாதமாக *இறைவன் மேல்*
*கவனம் வைத்திருப்பாயானால் அதன் பெயர் தியானம்.*

புரிந்ததா இப்போ?" என்றார் மகரிஷி புன்னகைத்தபடி.
கதை முடிந்தது.

*பகவான் ஸ்ரீ ரமணர் சொன்ன இரண்டு 'ம்' கள்* வாழ்வும்,
சாவும் எனவும்,

இடைப்பட்ட காலத்தின் நேரமே தியானத்தில் அமிழ வாய்த்திருப்பதை
புரிந்து கொள்ளவேண்டும்.  அதில் பக்குவமுறும் காலமே வேறுபடுகிறது.

Tuesday, 14 March 2017

மழை பற்றிய சகுணங்கள்

மழை பற்றிய சகுணங்கள்
----------------------------------------
கீழ்கண்ட சகுணங்கள் தோன்றினால் மழை வரும்.
1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை
2. தட்டான் தாழப்பறந்தால் மழை
3. அந்தி ஈசல் அடை மழை
4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை.
5. தவளைக்கத்தினால் மழை
6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை
7. கொக்கு மேடேறினால் மழை
8. பகற்பொழுதில் சேவல் கூவினால், வானத்தைப்பார்த்தால் மழை
9. கழுதை காதை உயர்த்தினால் மழை
10. ஈசல் பறந்தால் மழை
11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை
12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை
13. பசு மாடுகள் கன்றைத்தேடி வீட்டிற்கு ஓடினால் மழை.
14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை
15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை
16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை
17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை
18. ஓணான்கள் வானத்தைப்பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை
19. பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும் ஓடினால் மழை.
20. மயில்கள் நடனமாடினால் மழை
21. பசுக்கள் சூரியனையும் ,வானத்தையும் பார்த்தால் மழை
22. பச்சோந்திகள் மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை
23. பசுக்கள் நிழலிடங்களை விட்டு நகர மறுத்தால் மழை
24. நாய்கள் வீட்டிற்கு வெளியே செல்ல மறுத்தால், வானத்தைப்பார்த்து குரைத்தால் மழை
25. சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை
26. மீன்கள் நீரில் துள்ளி விளையாடினால் மழை.
27. பறவைகள், மிருகங்கள் நுனிப்புல் உண்பதைக்கண்டால் மழை.
28. நீரின் சுவை மாறுதல், உப்பு நீர்த்துப்போதல், மோர் புளித்து போதல் நடந்தால் மழை.
29. இரும்பு பொருட்களிலிருந்து மாமிச வாடை வந்தால் மழை
30. சந்திரனை சுற்றி சிவப்பு நிற வளையம் காணப்பட்டால் அல்லது சந்திரனின் நிறம் கோழியின் கண் போன்று காணப்பட்டால் மழை.
31. வடகிழக்கில் மின்னல் தோன்றினால் மழை
32. மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனிலிருந்து பிரதி சந்திரன் தோன்றினால் மழை
33. இரவு நேரங்களில் இடி முழங்கினால், பகல் நேரத்தில் மின்னல் அடித்தால், கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை.

Friday, 10 March 2017

சுவருடன் உரையாடு

🙏தியான யுக்தி....👇�

சுவருடன் உரையாடு👇�

உனது அறையில் உட்கார்ந்து கொண்டு தனிமையில் பேசு. நீ பேசுவதை கவனிக்க யாரும் அங்கிருக்க தேவையில்லை. உண்மையில் யார் கவனிக்கிறார்கள் ? நீ சுவருடன் பேசலாம், அது இன்னும் அதிக மனித்தன்மையுடையதாக இருக்கும். ஏனெனில் நீ யாருக்கும் எந்த பிரச்னையையும் உருவாக்கப் போவதில்லை. நீ யாரையும் கொடுமைப்படுத்துவதில்லை, நீ யாருக்கும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் அமுக்கி வைக்காதே. அடக்கி வைத்தல் உன்னுள் ஒரு சுமையை ஏற்படுத்தும். சுவரின் எதிரே உட்கார்ந்து நல்லதொரு உரையாடலை செய். ஆரம்பத்தில் அது சிறிதளவு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், ஆனால் அதை அதிக அளவு செய்ய செய்ய அதில் உள்ள அழகை உன்னால் பார்க்க இயலும். அதில் குறைந்த அளவு வன்முறையே உள்ளது. அது யாருடைய நேரத்தையும் வீணடிப்பதில்லை, ஆனால் அது அதே வழியில் அதே வேலையை செய்கிறது. நீ சுமை குறைந்ததை உணர்கிறாய்.

சுவருடன் நடக்கும் ஒரு நீண்ட பேச்சுக்குப் பின் நீ மிகமிக தளர்வாக உணர்கிறாய். உண்மையில் ஒவ்வொருவரும் அப்படி நடக்க விரும்புகின்றனர். மக்கள் சுவருடன் உரையாட ஆரம்பித்துவிட்டால் இந்த உலகமே இன்னும் சிறப்பானதாகவும் அதிக அமைதியானதாகவும் இருக்கும்.

முயற்சி செய்து பார். இது ஒரு ஆழமான தியானமாகும். சுவர் கவனிப்பதில்லை என்று மிகவும் நன்றாக தெரியும், ஆனால் அது ஒரு பொருட்டல்ல என்பதால் இது ஒரு நல்ல தியானமாகும்.

ஓஷோ...

Thursday, 2 March 2017

வெந்நீரில் இவ்வளவு விஷயம்

*வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?*

*நெஞ்சு எரிச்சல் போகணுமா?*
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை….! மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

*சதை குறையணுமா?*
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்...!
#காலையில்_சரியாக_மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)...!

*உடம்பு வலிக்கிறதா?*
உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்...!

*கால் பாதங்கள் வலிக்கிறதா?*
எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்...!

*மூக்கு அடைப்பா?*
மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்...!

#வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போது வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்...!

திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்...!

*ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு*
அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்...!

*தரையை துடைக்கும் போது*
அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்...!

*திடீரென்று கடுமையான தலை வலியா?*
தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்....!

*சுறுசுறுப்புக்கு சுக்கு வெந்நீர்*
தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.

கரிநாள்

கரிநாள் என்பது என்ன?

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே. அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும். நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை (Constant ). தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல.

சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள். இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி ஜோதிட ரீதியாக கடைபிடித்து வரும் விஷயம் அல்ல. ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம் : சித்திரை-6, 15, வைகாசி- 7, 16, 17, ஆனி- 1, 6, ஆடி-2, 10, 20, ஆவணி-2, 9, 28, புரட்டாசி- 16, 29, ஐப்பசி-6, 20, கார்த்திகை-1, 10, 17, மார்கழி-6, 9, 11, தை-1, 2, 3, 11, 17, மாசி-15, 16, 17, பங்குனி-6, 15, 19. கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

Wednesday, 1 March 2017

டயட்

எடையைக் குறைக்க சுலபமான வழி !!!

எடையைக் குறைக்க சுலபமான வழி – ஜெனரல் மோட்டார்ஸ் டயட் .

மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.

7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.

அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும்.
1. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

2. இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.

3. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

4. நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
ஐந்தாம் நாள் சிறிதளவு(ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர்(மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.

5. ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.

6. ஏழாவது நாள் ஒரு கப் சாதம் – காய்கறிகளுடன், பழ ஜுஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது.

7. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.

இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான்.
எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.

முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.

3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும்.

நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.

5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது.

அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது ஜெனரல் மோட்டார்ஸ் டயட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 22 February 2017

நேர்மறை பிராண சக்திகொண்டது


உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்திகொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மஹா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி. அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்திகொண்டது. எனவேதான், அதை வீட்டு முன் கட்டித் தொங்கவிடுகிறோம். புதிய வீட்டில் குடியேறும்போது, சில தீய சக்திகள் அங்கே இருக்கலாம். எனவே, ஒரு பூசணிக் காயை நம் வீட்டின் முன் கட்டும்போதே, அந்த இடத்தில் உண்டாகும் நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச் சக்திகளை அகற்றிவிடுகின்றன. நாம் அதைச் சாப்பிடும்போது, அது நமக்கு மிகவும் நல்லது செய்கிறது. ஆனால், நம் கலாசாரத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நம் வீட்டிலேயே ஒரு பூசணிக்காயை வளர்த்தாலும் அதை அந்தணருக்குத் தானமாகக் கொடுத்துவிடும் பழக்கம் இருந்தது. நீங்கள் அதைத் தானமாகக் கொடுக்கும்போது உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். வாங்குபவருக்கோ இங்கேயே நல்ல உணவு கிடைத்துவிடுகிறது! குறிப்பாக, வட இந்தியாவில் கீழ் ஜாதியினர் பூசணிக்காய் சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருந்தது. ஏனெனில், பூசணிக்காய் சாப்பிடுபவருக்கு உடலும் மனமும் கூர்மையாவதால் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாது. எனவேதான், அவர்கள் பூசணிக்காய் சாப்பிடுவதிலிருந்து தடை செய்யப்பட்டனர். ஆனால், இப்போது அது போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. பூசணிக்காயைத் தொடர்ந்து சாப்பிடும்போது நம் மனம் மிகுந்த விழிப்புணர்வை அடைகிறது. புத்தி கூர்மையும், புத்துணர்வும், சமநிலையும் அதிகரிக்கிறது. இவ்வளவு பிராண சக்தியுடன் இருப்பதால்தான் வீடு கட்டி புதிதாகக் குடியேறும்போது அனைத்து எதிர்மறைச் சக்திகளையும் களைவதற்கான ஒரு வாய்ப்பாக பூசணிக்காயைப் பயன்படுத்துகிறார்கள்!
நன்றி!