Sunday 25 August 2019

உடல் ஆலயம்

ஊன் உடம்பே ஆலயம்..!

மூலாதார சக்தியானது உடலின் செயல்பாடுகளை செம்மையாக செயல் படுத்தவும், உடலில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒருங் கிணைத்து செயல்பட வைக்கவும் முக்கிய காரணமாகிறது.

பிராண வாயுவை மூலாதாரத்தில் நிறுத்தி மூலாதார சக்தியை வலுவடையச் செய்ய வேண்டும். அதற்கு சிறந்த வழி ஆழ்நிலை தியானமேயாகும்.

இந்த ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடும்போதுதான் பிராண வாயு மூலாதாரத்தையடைந்து மூலாதார சக்தியைத் தூண்டி உடலெங்கும் செயல்பட வைக்கிறது.

ஆழ்நிலை தியானம் செய்வது எப்படி?

ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட அமைதியான காற்றோட்டம் மிகுந்த இடம் வேண்டும். நன்கு சுத்தமான சிறிய அறை கூட போதுமானது. அல்லது கடற்கரை, பூங்கா, மலைவாசஸ் தலங்களில் உள்ள இடங்களில் தனித்து தியானம் செய்யலாம்.

பொதுவாக தியானம் காலை மற்றும் மாலை நேரங்களில் செய்வது நல்லது.

இப்படி ஆழ்ந்த தியான நிலையில் சுவாசம் மூலம் பிராணன் உட்சென்று மூலாதாரத்தை அடையும். அங்கே மூலாதார சக்தியானது வலுவடையும். இதனால் உடலானது பிரபஞ்ச சக்தியோடு இணைந்துகொள்ளும்.

பிரபஞ்ச சக்தியோடு இணைந்து கொண்ட உடல், ஆன்ம சக்திக்கு கட்டுப்படும். இப்படி கட்டுப்பட்ட உடலை ஆன்ம சக்தி பரிபூரணமாக ஆட்கொண்டு முதன்மையான சக்தியாக விளங்கும்.

ஆன்ம சக்தி ஆட்கொண்டதால் உடலும் மனமும் ஒரே நிலையில் ஒருங்கிணையும். இந்த நிலையே ஒருவரை சாந்த சொரூபியாக மாற்றும். இதைத்தான் ஆன்மீக சக்தி என்றும் அழைக்கின்றனர்.

இப்படிப்பட்ட ஆன்மீக சக்தியை அடைந்தவர்கள் எப்போதும் புன்முறுவலோடும் நிதானத்தோடும் காணப்படுவார்கள். இவர்கள் முக்காலத்தையும் உணரும் சக்தி பெறுவார்கள்.

இவர்கள் எண்ணிய எண்ணங்கள் எளிதில் ஈடேறும். மேலும் இவர்கள் விருப்பு, வெறுப்பின்றி அனைவரிடமும் அன்பை மட்டுமே செலுத்துவார்கள்.

இந்த ஆன்மீக சக்தியை பெற்றவர்கள் தான் தவயோகிகளாகவும், ஞானிகளாகவும், சித்தர்களாகவும் போற்றப் படுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஆன்ம சக்தி கிடைக்காதவர்கள் உடல் என்ற சக்திக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள்.

இவர்களிடம் ஆன்மீக சக்தி பலமிழந்தே காணப்படும். இதனால் இவர்கள் அடிக்கடி தங்களின் எண்ணங்களையும், செயல்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

எதிலும் நிதானமின்றி காணப்படுவார்கள். எத்தகைய முடிவையும் இவர்களால் எடுக்க முடியாது.

ஒருசில நேரங்களில் ஆன்மீக சக்தி இழந்தும் காணப்படுவதுண்டு. உலக சஞ்சாரங்களில் எளிதில் சிக்கிக் கொள்வார்கள்.

இவர்களுக்கு எப்போதும் ஞானம் கிடைக்காது. இவர்களின் மனம் ஒருநிலைப் படாது. இவர்களால் மூலாதார சக்தியையும் பிரபஞ்ச சக்தியையும் ஒருங்கிணைக்க முடியாது. ஆன்மிக சக்தியை பெற்றவர்கள்தான் சித்தர்கள்.

ஆன்மீக சக்தியை ஆட்கொண்டவர்களின் உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து இருக்கும். மனம், புத்தி, காமம், குரோதம், அகங்காரம் இவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாக வலம் வருவார்கள்.

இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து அவர்கள் பெற்ற ஆன்ம சக்தியின் பலத்தையும், ஆசியையும் பெறுவதுதான் ஞானத்திற்கு சிறந்த வழி.

பிராணவாயுவை உள்வாங்கி மூலாதார சக்தியை தூண்ட தவம் செய்வதே சிறந்த வழியாகும். தவநிலையில்தான் சரசுவாசம் நடைபெறும்.

இந்நிலையில் தான் ஆன்மீக சக்தியைப் பெற முடியும்.
இதைத்தான் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே என்றும்,
ஊன் உடம்பே ஆலயம், என்று திருமூலரும் கூறுகிறார்கள்.

உள்ளத்தை கோவிலாக எண்ணி வழிபட்ட மகான்கள்தான் சித்தர்கள்.

அமைதியாக சில நிமிடங்கள் தனியாக அமர்ந்து பிராண வாயுவை உள் வாங்கி வெளியிட்டாலே இவர்கள் ஆன்மீக சக்தியை பெறலாம்.

சரசுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையடையும்.

இந்நிலைதான் ஆன்மீக சக்தியை பெற்றுத்தரும்.

இந்நிலையை அடைந்தவர்களே சித்தர்கள்...

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

தொகுப்பு - கோவை ச.பாலகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.