Sunday, 2 June 2019

நிம்மதி

நிம்மதியே இல்லை! முல்லா கதை

ஒரு நாள் முல்லா வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார்.

செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். பார்வைக்கு ஒரு செல்வந்தனைப் போல் காட்சியளித்த அவன் மிகுந்த கவலையோடு காணப்பட்டான்.

முல்லா அந்த மனிதனின் அருகில் சென்று அமர்ந்தார். அந்த மனிதனை நோக்கி, ”ஐயா! தங்களைப் பார்த்தால் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. தாங்கள் கவலையோ, சங்கடமோ அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், தங்களைப் பார்த்தால் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்தவர் போல் தோன்றுகிறது.

தங்கள் கவலைக்குக் காரணம் என்ன என்று நான் அறிந்து கொள்ளலாமா?” என்று வினவினார். அந்த மனிதன் முல்லாவை நோக்கி, ”நண்பரே! நீர் நினைப்பது போல, நான் வசதிகள் நிறைந்த ஒரு செல்வக்குடிமகன்தான். எனக்கு ஏராளமான செல்வம் இருக்கிறது. வீடு, நிலம் போன்ற சொத்துக்களும் நிறைய உண்டு. இவ்வளவு சுகபோக வசதிகள் இருந்தும் என்னால் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

”எனக்கு இருக்கும் செல்வங்களை யாராவது வஞ்சனை செய்து பறித்துக் கொள்வரோ என்று எனக்கு எப்போதும் பெருங்கவலையாக இருக்கிறது.

இப்போது கூட இதோ என் கையிலிருக்கும் பைக்குள் ஆயிரம் பொற்காசுகள் இருக்கின்றன. நான் வீடு போய் சேர்வதற்குள் இந்த பணப்பைக்கு யாரால் என்ன ஆபத்து ஏற்படுமோ என்று கவலையாக இருக்கிறது,” என்று கூறினார்.

முல்லா அந்த செல்வந்தனின் கையில் இருந்த பணப்பையைத் திடீரெனப் பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.அதைக்கண்டு பதறிப்போன செல்வந்தன், ‘

‘ஐயோ என் பணம் போய்விட்டதே… என் பணம் போய்விட்டதே!” என்று அலறியவாறு முல்லாவை துரத்திக் கொண்டு ஓடினான்.

முல்லா எங்கெங்கோ ஓடி ஆட்டம் காண்பித்த பின்னர், செல்வந்த முதலில் சந்தித்த மரத்தடிக்கே வந்து சேர்ந்தார்.

பணப்பையை மரத்தடியில் வைத்துவிட்டு அருகிலிருந்த புதருக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டார் முல்லா.மூச்சிரைக்க ஓடிவந்த செல்வந்தன்

தம்முடைய பணப்பை மரத்தடியில் கிடப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.’பணம் போய்விட்டதே என்று அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தேன்.

கடவுள் அருளால் என் பணம் திரும்பக் கிடைத்துவிட்டது. இப்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் செல்வந்தன்.புதருக்குப் பின்னால் இருந்து வெளிவந்த முல்லா செல்வனை நோக்கி, ”செல்வக் குடிமகனாரே! வாழ்க்கையில் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று கூறிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா?”கொஞ்ச நேரமாவது நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றுதான் பணப்பையை நான் தூக்கிக் கொண்டு ஓடினேன்.

பறிபோய்விட்டதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த பணப்பை திரும்பக் கிடைத்ததும் கொஞ்ச நேரம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது அல்லவா? அது உங்களுக்கு ஒரு லாபம் தானே!” என்று கூறினார்.

அதைக்கேட்ட செல்வன், ”நீ கூறியது உண்மைதான். நீர்

சொன்னதுபோல் பறிபோன பணம் கிடைத்தவுடன் நான் மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது,” என்று கூறினான்.

பிறகு செல்வந்தன் முல்லாவை நோக்கி, ”ஐயா! நீர் என்னைப் போல் ஒரு செல்வர் இல்லை போல் தோன்றுகிறது. சாமானிய நிலையில் உள்ள ஒரு மனிதராகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு பொருளாதார வளத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள நீங்கள் முகமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகிறீர்களே, இது எவ்வாறு சாத்தியப்படுகிறது?” என்று கேட்டார்.”அது ஒரு ரகசியம்!,” என்றார் முல்லா.

‘அந்த ரகிசயத்தை எனக்குச் சொல்லுங்களேன். நானும் அதைத் தெரிந்து கொண்டால் உங்களைப் போல நிரந்தரமான மகிழ்ச்சியோடு இருக்க முடியுமல்லவா?” என்று செல்வன் கேட்டுக் கொண்டான்.

”அது மிகவும் சாதாரண விஷயம்தான்.

மனிதன் செல்வத்தின் மீது பேராசை கொண்டு அலையும் வரை மனிதனுக்கு மன நிம்மதியோ, மகிழ்ச்சியோசற்றும் இருக்காது. தமது அவசியத் தேவைகளுக்கு மட்டுமே பணத்தைச் சம்பாதிக்கும் மனிதனிடம் பேராசை இருக்காது. ஆகவே, அவனால் நிரந்தரமான மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

இதுதான் நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணம்!”முல்லா கூறியது ஒரு மகத்தான உண்மை என்ற உணர்வு செல்வந்தனுக்கு ஏற்பட அதை பற்றி அவன் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினான்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.